தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தமிழர் அவர்; சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அலுவலகத்தில் என்னை சந்தித்தார்.

விளம்பர உலகில், 'சர்வே' எடுப்பது முக்கியப்பணி... அதில் நம் நண்பர், 'எக்ஸ்பர்ட்...' விரல் நுனியில் பல தகவல்கள், புள்ளி விவரங்கள் வைத்திருப்பவர். அவரைக் கிண்டிவிட்டு, குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்...

அவர் கூறிய தகவல்களில் சில இதோ...

ஒரு கோடியே, இருபது லட்சம் பேர் இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்கின்றனர். 62 ஆயிரத்து, 915 கி.மீ., ரயில்வே லயன்கள் உள்ளன.

வசதியாக வாழும் படித்த இந்தியர்கள் வாழ்வில் முக்கிய ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுபவை... முதலாவது, கல்லூரி டிகிரி, இரண்டாவது கார், பத்தாவது ஜிம்கானா, காஸ்மோபாலிடன் போன்ற பெரிய கிளப் மெம்பர்ஷிப்.

சராசரி இந்தியன் ஒரு ஆண்டுக்கு செக்ஸ் அனுபவிப்பது - 92 தடவை; உலக சராசரி- 109 தடவை.

தங்களது சேமிப்பை போடுவதற்கு பத்திரமான இடம் என்று இந்தியர்கள் கருதுவது வங்கிகள்-62 சதவீதம், மனை, நிலம், வீடு-21 சதவீதம், ஷேர்கள்-2 சதவீதம்.

திருக்குறள், உலகின், 60 மொழிகளில் மொழியாக்கப்பட்டிருக்கிறது-இதுவரை.

இந்திய மக்களிடம் சென்றடைவது, வியாபித்திருப்பது ஆல் இந்தியா ரேடியோ தான்; தூர்தர்ஷனோ, மற்ற, 'டிவி' சேனல்களோ அல்ல.

நூறு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களில், 98 கோடி இந்தியர்களால் ரேடியோ கேட்க முடியும்!

பனிரெண்டு கோடி ரேடியோ செட்கள் இந்தியாவில் இயங்குகின்றன.

ரேடியோ இந்தியாவின், 90 சதவீதம் பகுதியை சென்று அடைகிறது. தண்ணீர் கூட, 50 சதவீதம் தான் சென்று அடைகிறது.

'உன் குரல் நன்றாக இல்லை...' என்று ரேடியோ ஒருவரை நிராகரித்தது. அனைத்து இந்தியர்

களுக்கும் அவரது குரல் நன்கு பரிச்சயம்; அவர் அமிதாப்பச்சன்!

நாம் பெருமைப்படக் கூடிய விஷயங்கள்...

இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோகினூர் வைரம், மெஹந்தி, சடுகுடு (கபடி) விளையாட்டு, கைரேகை, ஜோசியம், சதுரங்கம் - நம்மைச் சேர்ந்தவை.

நகரங்களில் வாழும் இந்தியர்களில் உண்மையில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் — 15 சதவீதம் மட்டும்.

நகரில் வாழும் இந்தியர்களில் சரியான எடைக்கு மேல், அதிகமான எடையுடன் இருப்பவர்கள் — 65 சதவீதம்.

நேரம் கிடைக்கும் போது தேகப்பயிற்சி செய்யும் இந்தியர்கள் — 19 சதவீதம்; சீனர்கள் — 34 சதவீதம்.

உலகத்திற்கு பீடியை அளித்தது இந்தியாதான்!

இந்தியா முழுவதும் பாப்புலராக, அனைவரும் அறிந்திருக்கும் ஒரு விஷயம்: ராமாயணம்.

கடந்த, 1987ம் ஆண்டு, 'லா கமிஷன்' பரிந்துரையின்படி, 10 லட்சம் பேருக்கு இருக்க வேண்டிய நீதிபதிகள் — 50.

இப்போது இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு இருக்கும் நீதிபதிகள் — 10.5.

இந்திய கோர்ட்டுகளில் தேங்கியிருக்கும் வழக்குகள் — இரண்டரை கோடி.

இப்போது இருக்கும் வழக்குகளை, இனி புது வழக்குகளை எடுத்துக் கொள்ளாமல், விசாரித்து முடித்து, தீர்ப்பு சொல்லி முடிக்க, இந்திய கோர்ட்டுகளுக்கு தேவைப்படும் காலம் — 324 ஆண்டுகள்.

இந்திய பள்ளிக்கூடங்களில் குடிதண்ணீர் வசதி இல்லாமல் இருப்பவை — 58 சதவீதம். சரியான, இயங்குகிற டாய்லெட் வசதி இல்லாமல் இருக்கும் பள்ளிகள் — 89 சதவீதம்.

இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் அனுபவித்ததாக கூறும் மாணவர்கள் — 25 சதவீதம்; மாணவிகள் — 20 சதவீதம்.

உத்திரப்பிரதேசத்தின் ஜனத்தொகையும், பாகிஸ்தானின் ஜனத்தொகையும் சமம்.

இந்தியாவில் விற்பனையாகும் வயாக்ரா போன்ற மாத்திரைகளில் உத்திரப்பிரதேசம், பீகார் இரண்டு மாநிலங்களிலும் விற்பனை, 33 சதவீதம்.

— இப்பகுதியை அப்படியே பத்திரப்படுத்துங்கள்... பல நேரங்களில் உபயோகமாக இருக்கும்!

***

ராஜஸ்தான் மாநிலம் என்றாலே, பாலைவனத்திற்கு பெயர் பெற்றது. குறைந்த அளவே மழை பெய்யும்; எப்போதும் வறட்சிதான். வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட பெண்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். இந்த மக்களின் தண்ணீர் தேடல் தொடர்கிறது.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்திற்கே மரகதப் பதக்கம் வைத்தாற்போல பசுமை நிறைந்ததாக மாறி உள்ளது நேமி கிராமம். சமீபத்தில் இங்கு சென்று வந்த நண்பர் ஒருவருடன் பேசிய போது ஆச்சரியமும், சந்தோஷமும் ஏற்பட்டது.

அவர் கூறினார்:

நேமி கிராமம் மட்டுமல்ல... இதைச் சுற்றியுள்ள கிராமங்களும், தண்ணீர் சேமிப்பும், மழை நீர் அறுவடை போன்ற சிறந்த விஷயங்களை அறிந்து, தக்க சமயத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் பசுமை அடைந்ததற்குக் காரணம். இப்போது, இந்த பகுதி மக்கள், 'தண்ணீர் கஷ்டமா... அப்படீன்னா?' எனக் கேட்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் ஆர்வாரி, ரூபரேல் போன்ற ஆறுகள் ஒரு காலத்தில் ஓடின... இப்போது அவை வற்றி, அவற்றின், 'தடம்' மட்டுமே காணப்படுகிறது. எப்போதோ வெட்டப்பட்ட குளங்கள், கண்மாய்கள் தூர்ந்து போய் குப்பை கொட்டும் இடங்களாகின.

இந்த இடங்களை பல பொது நல தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், கிராம மக்களே சுத்தம் செய்தனர். மழை நீர் ஓடி வந்து இந்த குளங்களில் தேங்கும் அளவிற்கு கால்வாய்கள் வெட்டப்பட்டன.

இந்த பகுதிகளில் பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியையும், சேமிக்கும் அளவிற்கு, கிணறுகள் அமைக்கப்பட்டன; மழை நீர் சேமிப்புத் தொட்டிகள் பல அமைக்கப்பட்டன.

இதுபோன்ற விழிப்புணர்வை பல தொண்டு நிறுவனங்கள் கிராம மக்களுக்கு ஏற்படுத்தின. அரசாங்கத்தின் உதவி இன்றி, 'நமக்கு நாமே' என்று கிராமத்தினர் செயலில் இறங்கினர். இந்த முயற்சிகளால் நேமி கிராமத்தில் நல்ல பலன் கிடைத்தது. நீர்வளம் அதிகரித்தது. காய்ந்து கிடந்த ஆற்றுப் படுகைகளில் நீர் பாய்ந்து நிலத்தின் அடித்தளம் வரை சென்றது. இதனால், நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது.

இதை கிராமத்தினர் கண் கூடாக உணர்ந்தனர். கிணறுகளில் மிகவும் ஆழத்தில் சிறிதளவு தண்ணீரை கஷ்டப்பட்டு இழுக்கும் நிலை மாறி, கிணற்றின் மேல் மட்டத்திற்கு தண்ணீர் வந்து விட்டது; தண்ணீரும் உப்பு கரிப்பு இல்லாமல் சுவையாக இருக்கிறது.

இந்த பகுதிகளில் விவசாயம் பெருகுகிறது. கோதுமை வளர்ச்சி அதிகரித்துள்ளது. பறங்கிக்காய், முள்ளங்கி, முலாம் பழங்கள் அதிக அளவில் இப்போது விளைகின்றன. தினமும் லாரிகளில் ஹரியானாவிற்கும், டில்லிக்கும் இவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கிராமங்களின் பொருளாதார நிலை இதன் காரணமாக உயர்ந்து வருகிறது.

இப்போது நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீர்வள ஆய்வாளர்கள் இந்தப் பகுதிக்கு வந்து மழை நீர் அறுவடை மற்றும் நீர் வற்றி வீணாகாமல் சேமிக்கும் முறைகள் பற்றி தெரிந்து செல்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களிலும், பெரிய கட்டடங்கள் கட்டும் போதும், அவற்றை சுற்றிலும் சிமென்ட்டால் பூசி விடுகின்றனர்; இது பெரும் தவறாகும். இந்த பெரிய பரப்பளவிலான கட்டடங்களில் பெய்யும் மழை நீர், தரையில் வழிந்து, சாக்கடையில் தான் கலக்கிறது.

இதனால் என்ன லாபம்! இதுபோன்ற பெரிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கலாம். இதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும். அந்த கட்டடங்களுக்கான கிணறுகளின் நீர் அளவும் அதிகரிக்கும்.

கார் நிறுத்தும் இடங்களில் நிலத்தினுள் நீர் போகாத அளவு சிமென்ட்டால் பூசி மெழுகுவதை தவிர்த்து, சிறிதளவு மண் தெரியும் அளவு கற்களைப் பதிக்கலாம். இதனால், நிலத்தினுள் மழைநீர் செல்ல வாய்ப்பு ஏற்படும்; நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும்.

பூமியின் தாகத்திற்கு மழைநீர் செல்ல விடாமல் சிமென்ட்டால் பூசி மெழுகுபவர்களது அறியாமை போக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகமே தண்ணீர் இல்லாத கான்கிரீட் கட்டடங்களால் ஆன பாலைவனமாகி விடும் என்றார்.

அவர் சொல்றது முற்றிலும் சரி... அத்தோடு, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருடா வருடம் சென்னையில் வந்து செட்டிலாவதை தடுக்க முயல வேண்டும் அரசு. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே சென்னையையும், அதைச் சுற்றியுமே அமைவதால் வெளி மாவட்ட, 'மைகிரேஷன்' ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது... இன்னும், 10 வருடங்களில் தார் பாலைவனமாக தமிழ்நாடு மாறுவதை தடுக்க, இப்போதே அரசு முயல வேண்டும் என்றேன்.

— அவநம்பிக்கையாக உதட்டைப் பிதுக்கி விடைபெற்றார் நண்பர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us