PUBLISHED ON : ஜன 29, 2012

பேப்பர் கப் ஒழிக!
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் 'கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, 'கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், 'பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் 'கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட 'கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, 'கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
'டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் 'கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, 'கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
— எச்.விஜயகுமார்,சென்னை.
விநோதமான வழி... உறக்கம் வர!
நண்பர் அவசர வேலையாக, குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேர்ந்ததால், தன் ஐந்து வயது மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டி, என் வீட்டில் தங்க வைத்தார். அன்று இரவு எனக்கு எழுத்து வேலை இருந்தது. அப்போது, விசும்பல் சத்தம் கேட்டு, அறைக்கு சென்று பார்த்த போது, நண்பரின் மகன், தூங்காமல் சிணுங்கி கொண்டிருந்தான்.
'ஏன் தூங்கவில்லை... உடம்புக்கு என்ன பண்ணுது...' என கேட்ட போது, 'எனக்கு, விரல் நகத்தால், உடலில் பட்டும் படாமலும், (வருடி) சொறிந்து விட்டால் தான் தூக்கம் வரும்...' என்றான். இவனுடைய பாட்டி ஏற்படுத்திய இப்பழக்கத்தை, தற்போதும் இவனுடைய பெற்றோர் தினமும் செய்து விடுவராம்.
'இது என்ன விநோதமாக இருக்கு?' என நொந்தபடி, அவனை எழுப்பி, சிறுநீர் போக வைத்து, தண்ணீர் குடிக்க வைத்து, அவனிடம், 'கண்களை மூடி கொண்டு, மனசுக்குள், ஒன்று முதல் நூறு வரை சொல்லிட்டே இரு; தூக்கம் வரும்...' என கூறி, தூங்கச் சொன்னேன். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது, அப்போதும், 'தூக்கம் வரல, வந்து இப்படி செய்யுங்க...' என கூறினான்.
அவனிடம், 'இப்போது நூறுல இருந்து, ஒன்று வரை தப்பில்லாமல் சொல்லிட்டே இரு; தூக்கம் வரும். அப்படியும் வரலைனா, நான் வந்து சொறிஞ்சி விடுறேன்...' என்று சொல்லி சென்றேன். சிறிது நேரத்தில், வந்து பார்த்தேன்; ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பெற்றோரே... உங்கள் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், இதுபோன்ற விநோத பழக்க வழக்கத்தால், உங்கள் குழந்தையும் தூங்காமல், மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுக்கலாமா?
தயவு செய்து, இது போன்ற தவறான பழக்கங்களை மாற்றுங்கள்.
— பெ.சக்திவேல், முத்தியால்பேட்டை.
தபால் ஒழுங்காகச் சேர ஒரு ஐடியா...
சென்ற வாரம் மும்பைக்கு, கவர் ஒன்றை அனுப்ப, நண்பருடன், தபால் அலுவலகத்திற்குச் சென்றிருந் தேன். அவர் வாங்கிய ஸ்டாம்ப், 10 ரூபாய்; ஆனால், அந்த கவரின் எடை, 20 ரூபாய்க்கு மேல் இருக்கும்.
'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்டதற்கு, 'ஒரு மாதத்திற்கு முன், இந்த தபால் அடங்கிய கவரை அனுப்பி, இதுவரை போய் சேரவில்லை. இப்போது அனுப்பும் கவரின் எடை அதிகம்; ஸ்டாம்ப் விலை குறைவு. எனவே, 'டியூ' போட்டு, சரியான ஆளிடம், சரியான நேரத்திற்கு போய் சேரும். மும்பையில் உள்ள நண்பருக்கும், தகவல் கொடுத்து விட்டேன்...' என்று கூறினார். அவர் கூறியதிலும் உண்மை உள்ளதே என்று எண்ணி, சமாதானம் அடைந்தேன்.
நம் நாட்டு தபால் துறையின் ஆபீசின் நிலைமையை எண்ணி, வருத்தப்பட்டதோடு, நண்பரின் ஐடியாவை கண்டு, மகிழ்ச்சியும் அடைந்தேன்.
— வி.எஸ்.மோகன், மதுரை.
பின்குறிப்பு: ம்... எப்படி இருந்த இலாகா... இப்படி ஆயிருச்சே!
— பொறுப்பாசிரியர்.
