தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'படிப்பு' சொல்லிக் கொடுங்க!

இரு பாலாரும் படிக்கும் @மனிலைப் பள்ளி ஆசிரியை நான். என் வகுப்பு மாணவ-மாணவியரிடம், 'நீங்கள் எதிர் காலத்தில் என்னவாக விரும்புகிறீர் கள்?' என்று கேட்டேன்.

வகுப்பில் இருந்த மாணவர்களில், கிட்டதட்ட 90 சதவீதத்தினர், நான் டாக்டர் ஆவேன், நான் இன்ஜினியர் ஆவேன்...' என்று தான் கூறினர். சில மாணவியர் மட்டும், 'ஆசிரியை ஆவேன், நர்ஸ் ஆவேன்...' என்று கூறினர். வேறு தொழில் பற்றி எவரும் பேசவில்லை.

@கட்டரிங், பேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிகேஷன் என, பல்வேறு வகையான படிப்புகள் இருந்தும், மெடிக்கல், இன்ஜினியரிங், டீச்சர் டிரெய்னிங், நர்சிங் தவிர்த்து, பிற படிப்புகள் குறித்த விழிப்புணர்வு, கிராமப்புற குழந்தைகளிடம் இல்லை என்பதையே இது காட்டியது.

வேலைவாய்ப்புகளையும், சுயவேலைவாய்ப்புக்கான திறன்களையும் கொடுக்கும் படிப்புகள் பற்றி, என் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.

ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவர்களிடம், இது போன்ற படிப்புகள் குறித்து, அவ்வப்போது எடுத்துக் சொல்லலாமே? நகரம் சாராத மாணவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

— எஸ்.புஷ்பலதா, காஞ்சிபுரம்.

'கிளுகிளு' படங்கள் தேவையா?

கல்லூரி மாணவியான என் 18 வயது மகளுடன், ஜவுளிக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கு உள்ளாடைப் பிரிவில், வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன், ஜட்டி மட்டும் அணிந்து, நம்மையே குறுகுறுவென பார்ப்பது போல், பெரிய சைஸ் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.

பருவ வயதுடைய என் மகள், அதைத் திருட்டுத் தனமாக ரசிப்பதைக் கண்டேன். நான் அவளோடு இருந்ததால், அந்த போஸ்டர்கள் பக்கம் பார்ப்பதும், அதை பார்த்தும் பார்க்காதது போல் முகத்தை திருப்புவதுமாக தவிர்த்தாள்.

சுடிதார் வாங்கச் சென்றிருந்த நான், அவளை அந்த பக்கமிருந்து மெல்ல நகர்த்தி அழைத்து வந்து விட்டேன்.

ஜவுளிக்கடைக்காரர்களே... உள்ளாடைகள் விற்கும் பகுதியில், அந்த உள்ளாடைகளை, மாடல்கள் அணிந்து அரை நிர்வாண போஸ் கொடுக்கும் படங்களை வைக்கத்தான் வேண்டுமா?

ஆடவர்கள், ஜட்டி மட்டும் அணிந்த நிலையிலும், பெண்கள், 'ப்ரா' மட்டும் அணிந்த நிலையிலும் வைக்கப்பட்டிருக்கும் அந்த படங்கள், இளசுகளின் மனதில் தேவையற்ற, 'கிளுகிளுப்பை'யும், உணர்வுத் தூண்டல்களையும் ஏற்படுத்துமே! இது தேவைதானா? உள்ளாடைகளின் படங்களை மட்டும் அங்கு வைக்கலாமே!

— எம்.புனிதவதி மகாலிங்கம், கடையநல்லூர்.

பெரியவர்கள் இப்படி செய்யலாமா?

எனக்கு திருமணமான புதிதில், புகுந்த வீட்டாருக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் இடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சண்டை சச்சரவு உண்டானது. முடிவில், நானும், என் கணவரும் தனியாக போவதென்றும், மாமியார் குடும்பம் ஊரிலேயே இருப்பது என்றும் தீர்மானித்தனர்.

அந்த கசப்பான அனுபவத்திற்குப் பின், பல வருடங்கள் ஓடி விட்டன. இடையில் சுமூகம் ஏற்பட்டு, இருதரப்பும் ஒன்று சேர்ந்தோம். எங்களைப் பார்க்க அவர்கள் வருவதும், அவர்களுக்கு ஒன்றென்றால் ஓடி போய் கவனிப்பதுமாக இருந்தோம்.

பழைய விஷயங்கள் அடியோடு மறந்து, நிம்மதியான நேரத்தில், ஊர் திருவிழாவுக்கு அழைத்தனர். எங்களால் நேரம் ஒதுக்க முடியவில்லை.

'குழந்தைகளையாவது அனுப்பி வையுங்கள். நல்ல நாள் அதுவுமா வீடு வெறிச்சோடி இருக்கு...' என்று வற்புறுத்த, கணவர் தடுத்த போதும், 'குழந்தைகளுக்கு ஊரும், உறவும் தெரிய வேண்டாமா; போய் வரட்டும்...' என்று அனுப்பி வைத்தேன்.

திருவிழா பார்த்துவிட்டு வந்த குழந்தைகள், அடியோடு மாறிப் போயிருந்தனர். 'பாட்டியும், தாத்தாவும் ரொம்ப பாவம். அவங்களை நீங்க எப்படியெல்லாம் எதிர்த்து பேசினீங்க. அப்பா, அவங்களை எப்படியெல்லாம் கேவலப்படுத்தினார்ன்னு, பாட்டியும், தாத்தாவும் சொல்லி அழுதாங்க... நீங்கள் ரொம்ப பேட் மம்மி...' என்று குற்றம் சுமத்தினர்; திகைத்துப் போனேன்.

பல குடும்பங்களில் ஏற்படும் சிக்கல் தான். இதற்கு முக்கிய காரணம் யார், என்னவெல்லாம் செய்தனர் என்ற உண்மை எங்களுக்கு தான் தெரியும். அதை பொருட்படுத்தாமல், பெருந் தன்மையாய் நடந்தேன். ஆனால் அவர்களோ, குழந்தைகளிடம் எதை பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற இங்கிதமில் லாமல், இட்டுக்கட்டிப் பேசி, அவர்கள் மனதில் விஷத்தை தூவி அனுப்பி விட்டனர்.

எவ்வளவு சமாதானங்கள் சொன்னாலும், குழந்தைகள் மனது மாறவா போகிறது... பொறுப்பற்ற பெரியோர் இதை உணர்வரா?

— எஸ்.கலையரசி, சென்னை.

சுவரில் ஒரு சித்திரம்!

எங்கள் தெருவில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டை, மறைவிடமாக பயன்படுத்தி, வீடுகளின் சுவற்றில் மீது, பலர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தனர். இதனால், தெருவே துர்நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது.

நேரிடையாக சொல்லிப் பார்த்தாயிற்று. 'இங்கு சிறுநீர் கழித்தால் தண்டனை...' என்று போர்டு வைத்தாயிற்று. உந்துதலுக்கு ஒதுங்க வந்தவர்கள் குறைந்த பாடில்லை. அடுத்த முயற்சியாக, சுவற்றில் தெய்வீக படங்கள் வரையப்பட்டன. அதற்கும் அவ்வளவு பயன் இல்லை; நாற்றம் குறையவில்லை.

இது ஒரு சுற்று சூழல் சுகாதார பிரச்னை. உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த குற்றத்தை செய்பவர்களை, உணர்வு பூர்வமாக தண்டிக்க நினைத்தோம்.

அதன்படி, 'ஏண்டா செல்லம்... நீ சின்ன குழந்தையா இருந்தப்ப, இப்படி என் மடியில் படுத்துக்கிட்டு, மூஞ்சிமேல மூச்சா அடிப்பே; நான் துடைச்சுக்குவேன். வயசாகியும், அதையே செய்தா அசிங்கந்தானே...' என்ற வெளிச்சமிட்ட வாசகத்துடன், ஒரு தாய், மடியில் குழந்தையுடன் இருப்பது போன்ற ஓவியத்தை, அச்சுவற்றில் பளிச்சென்று தீட்டினோம்.

இப்போது, தெருவில் நாற்றம் குறைய ஆரம்பித்து விட்டது. சில சமூக அவலங்களை நிறுத்த, உணர்வு பூர்வமான நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன. நல்லவை நடக்க, அவைகளை பயன்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!

எஸ்.ராமன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us