PUBLISHED ON : மார் 25, 2012

முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்ற பெயர் இல்லாவிட்டாலும், நான் சில சந்தர்ப்பங்களில் என்னை அறியாமல், முன் ஜாக்கிரதையாக இருந்து விடுவேன்.
உதாரணமாக, எங்கள் அடுக்ககத்தில், ஓவர்ஹெட் டாங்க்கிலிருந்து குழாயில் வரும் தண்ணீரின் பருமன், துளி இளைத்தாலும், நான் அவசர அவசரமாக பாத்ரூமிலுள்ள, சகல வாளிகளையும் நிரப்பி வைத்து விடுவேன்.
பத்திரிகையில், 'அடுத்த வாரம், வங்கி ஊழியர் ஸ்டிரைக் செய்யக் கூடும்!' என்று, ஊர்ஜிதமாகாத செய்தி வந்தால், உடனே வங்கிக்குப் போய், ஒரு மாச செலவுக்கான பணத்தை எடுத்து வந்து விடுவேன்.
மனைவிக்கு தலைப் பிரசவ சமயம். சாதாரணமாக, தலைப் பிரசவத்துக்கு மனைவியை, அவளது பிறந்த வீட்டுக்குத்தான் அனுப்புவர். அடையாறில் தான் பிறந்த வீடு இருந்தது.
அப்போது நான், கொஞ்சம் கூடுதல் கொழுப்புடன் இருந்தேன்.
'கல்யாணம் செய்து கொடுத்தாச்சு எனில், சகல பொறுப்புகளும் மாப்பிள்ளைக்குத்தானே தவிர, பெண்ணை பெற்றவர்களுக்கு எந்த தொந்தரவும், எந்த வகையிலும் தரலாகாது...' என்ற முற்போக்குச் சிந்தனை இருந்தது எனக்கு. (இருந்ததாக நினைப்பு) ஆகவே, 'நான் பார்த்துக்கறேன். உள்ளூர்தானே... ரொம்ப அவசியமானால், உங்களுக்குச் சொல்கிறேன்...' என்று, மாமனாரிடம் சொல்லி விட்டேன்.
அவர்களைவிட விஷயம் தெரிந்த நான், அதி வசதியாக, அதி நவீன மருத்துவமனையில், மனைவியைச் சேர்க்க யோசனை செய்திருந்தேன்.
மாப்பிள்ளை முறுக்கில் சொல்லி விட்டேனே தவிர, தலைப் பிரசவமாதலால் ஒரே திக், திக்!
நாள் நெருங்க நெருங்க, என் முன்னேற்பாடு பொறுப்பு, அதிகமாகிக் கொண்டிருந்தது. மனைவிக்கு உதவியாக, துணையாக மாமியார், என் வீட்டுக்கு வந்திருந்தார். நொடிக்கொரு தரம், தலைப்பிரசவ ஜாக்கிரதை முன்னேற் பாடுகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.
பிரசவத்துக்கு அவசரமாக வேண்டியது என்ன?
டாக்சி!
அந்த விஷயத்தில், பரம ஜாக்கிரதையாக, உஷாராக இருந்தேன். அப்போது புரசைவாக்கம் குளத்துக்கு பக்கத்தில், 'வேல் டாக்சி' என்றொரு டாக்சி கம்பெனி இருந்தது. வழக்கமாக கம்பீரமாக இரண்டு, மூன்று அம்பாசிடர் டாக்சிகள் அங்கு நிற்கும். அதில் என்ன விசேஷம் எனில், கொட்டை எழுத்தில், '24 மணி நேர சர்வீஸ்' என்ற அறிவிப்பு, அங்கே காணப்படும்; போன் நம்பர்கள் தரப்பட்டிருக்கும்.
நான் அந்த பக்கம் போகும்போதெல்லாம், வேல் டாக்சியில், எத்தனை டாக்சிகள் இருக்கின்றன என்று பார்த்துக் கொள்வேன்.
எல்லா நேரமும், அங்கு டாக்சி இருக்குமா என்பதை கவனித்து வைத்துக் கொள்ள, ராத்திரி பத்து மணிக்கு ஒருதரம், இரவு இரண்டு மணிக்கு ஒருதரம், சைக்கிளில் போய் நோட்டம் பார்த்து வருவேன். குறைந்தபட்சம் ஒரு டாக்சியாவது நிற்கும்.
குறிப்பிட்ட நாள் வந்தே விட்டது.
பிரசவ வலியெல்லாம், சாதாரணமாக இரவுதான் சோதனையாக வருவது வழக்கம் என்பர்.
அந்த வழக்கத்தை அனுசரித்து, இரவு 12.30 மணிக்கு, என்னை அவசரமாக எழுப்பி, 'அவளுக்கு உடம்புக்கு ஆகலை... டாக்சி கூட்டி வந்து விடுங்கள்...' என்றார் மாமியார்.
பதறியடித்துக் கொண்டு எழுந்து, தயார் நிலையிலிருந்த சைக்கிளில் விழுந்தடித்து, வேல் டாக்சி நோக்கி விரைந்தேன்.
'சாமி கடவுளே... ஸ்டாண்டில் டாக்சி இருக்கணும்...'
அம்மாடி, உயிர் வந்தது. கம்பெனியில் டாக்சி ஒன்று நிற்பது, தெரு விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.
'டிரைவர் டாக்சியிலேயே தூங்கிக் கொண்டிருப்பாரோ...' ஸ்டாண்டுக்கு வெளியிலிருந்து குரல் கொடுத்தேன்.
'டிரைவர் சார்... டிரைவர் சார்... டெலிவரி...' ஒரு பலனும் இல்லை.
மூன்று, நாலு நிமிஷம் கூப்பாடு போட்டதும், எங்கிருந்தோ ஒரு ஆள் தூங்கி வழிந்து கொண்டு வந்தான்.
'டிரைவர், அ@தா பார்க்கிலே படுத்திருப்பாரு... போய் எழுப்புங்க...' என்று பதிலளித்துவிட்டு போய் விட்டான்.
எதிரே இருந்த மாணிக்க முதலியார் பார்க்கில், ஒரு பெஞ்சில் படுத்திருந்த <உருவம் தான், டிரைவராக இருக்க வேண்டும் என யூகித்து, <உலுக்காத குறையாக எழுப்பினேன்.
'பிரசவம் சார்... பிரசவம்... அர்ஜன்ட் டிரைவர் சார்... ப்ளீஸ்...'
டிரைவர், சில நிமிடங்கள் கழித்து எழுந்தார். சீறவில்லை, பாயவில்லை.
'ஸ்டாண்டிலே பார்த்தீங்களா?'
'பார்த்துட்டுத்தானே...'
'வண்டி ஏதும் இருக்குதா?'
'ஒண்ணு இருக்கு...சீக்கிரம் வாங்க...'
'அது வராது...'
எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது, 'ஏன் வராது... பிரசவம் சார்...'
'அது சரிங்க... அது வராது. போய் வேற எதையாவது பாருங்க...'
கடுங்கோபமாக, நான் ஸ்டாண்டுக்கு ஓடினேன். அந்த டாக்சி, அங்கு இன்னும் நின்றது.
என் மூளை வேகமாக வேலை செய்தது.
இருட்டாக இருந்த கம்பெனி அறையின் வாசலை, இடிக்காத குறையாக தட்டினேன்.
'வேறு டிரைவர் யாராவது இருந்தால் அனுப்புங்க... வண்டி இருக்குது, டிரைவர் இல்லன்னா எப்படி... டெலிவரி சார்!'
எழுந்த ஆள், 'அந்த வண்டி வராது...' என்றார்.
கடும் கோபத்துடன் நான், 'ஏன் வராது?' என்று கத்தினேன்.
அந்த ஆள், 'கோபப்படாதீங்க...' என்றவாறு, முன் விளக்கைப் போட்டான்.
நின்று கொண்டிருந்த வண்டியைப் பார்த்ததும், அனேகமாக என் இதயம் நின்று விட்டது. வண்டிக்கு நாலு சக்கரமும் கிடையாது!
வண்டிக் கூடு (பாடி) மட்டும் தான் இருந்தது. கீழே நாலு மரக்கட்டை வைக்கப்பட்டு, அதன்மேல் அம்பாசிடர் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.
டாக்சி கம்பெனி என்று தெரிவதற்காக, அரை வாசி உயரம் ரோடுக்கு தெரியும் விதமாக, அந்த டாக்சி கூடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இத்தனை நாளும், ஒரு டாக்சியாவது அங்கே நிற்கிறது என்று, இதைத்தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சற்று எட்டிப் பார்த்து விசாரிக்காதது, என் தப்பு.
கடைசியாக, தாசபிரகாஷ் ஓட்டல் அருகே ஓடி, அங்கிருந்த டாக்சி ஸ்டாண்டில், ஒரு டாக்சி பிடித்து, வீட்டுக்கு வந்து, மனைவியையும், மாமியாரையும், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். ஆண்டவன் அருளால், எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
ஆனால், முன் ஜாக்கிரதை என்று ஒன்றையே பார்த்துக் கொண்டிருந்து, பின் ஜாக்கிரதையைக் கோட்டை விட்டுவிடக் கூடாது.
முன்னாலே, பின்னாலே, பக்கவாட்டில், அடியில், மேலே என்பதாக எல்லாத் திசைகளிலும், முன் ஜாக்கிரதை வேண்டியிருக்கிறது!
— தொடரும்.
பாக்கியம் ராமசாமி
