தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பர். ஆனால், ஒரு அம்மாளுக்கு ஒரு மதமே தெரிந்தது...' என்று அன்றைய கச்சேரியை ஆரம்பித்தேன் நான்.

'இது ஒன்றும் புதிதில்லையே... காரைக்காலம்மையார், மங்கையர்கரசியார் போன்ற நாயன்மார்களும், ஆண்டாள் போன்ற ஆழ்வார்களும், இன்னும் திலகவதியார், பூம்பாவையார், மீரா போன்றவர்களும் இருந்ததில்லையா - பெண் மதத் தலைவர்களாக...' என்றார் குப்பண்ணா.

'புதிதாக எந்த மதத்தையும் அவர்கள் ஸ்தாபிக்கவில்லையே... ஏற்கனவே இருந்த மதங்களில்,சிறந்த பக்தைகளாக இருந்தனர். அவ்வளவுதானே... நான் சொல்கிற பெண்மணி கதை அப்படியல்ல...'

'சரி, சொல்லு...' என்றார் குப்பண்ணா.

'மேரி பெக்கர் எட்டி என்பது அந்த பெண் பெயர். வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் நோய், துன்பம், சோகம்தான். கல்யாணமானதும் கணவன் இறந்தான்; மறுமணம் செய்தாள். அவன் ஓடி விட்டான். ஒரே குழந்தை... வறுமை வாட்டியது. குழந்தையையும் தத்து கொடுத்து விட்டாள்.

'ஒரு நாள் கடுங்குளிரில் நடுங்கியபடி, நடைபாதையில் போய் கொண்டிருந்தாள். நடைபாதையெல்லாம் கூட ஐஸ்கட்டியால் உறைந்து போயிருந்தது; வழுக்கி விழுந்தாள். நினைவு பிசகியது. முதுகெலும்பில் பலமான அடி. அதனால், வலிப்பு நோய் வந்து விட்டது...'

'அடடா...' உச்சு கொட்டினார்.

'டாக்டர் வந்து பார்த்தார்... 'நீ பிழைப்பது கஷ்டம். பிழைத்தாலும் நடப்பது கஷ்டம்...' என்று கூறி விட்டார். மரணப்

படுக்கையிலேயே பைபிளை புரட்டிப் பார்த்தாள், மேரி பெக்கர் எட்டி. அவள் கண்ணில் தட்டுப்பட்ட விஷயம்

இதுதான் —

'இயேசுவின் முன்னால், பாரிச வாயுவால் பீடிக்கப்பட்ட நோயாளியைப் படுக்கையோடு கொண்டு வந்தனர்.

'இயேசு... 'மகனே, தைரியமாய் இரு... உன் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். எழுந்து படுக்கையை சுருட்டிக் கொண்டு வீட்டுக்கு நட...' என்றார். அவர் கூறியபடியே எழுந்து சென்று விட்டான் நோயாளி.

'இச்சம்பவத்தை அறிந்த மாத்திரத்தில், அந்த அம்மாளுக்குக் கட்டுக்கடங்காத சக்தி, குபீரென்று ஊற்றெடுத்தது. நம்பிக்கை வேகம் பீறிட்டது. மரணத்தின் வாசலில் திணறியவர், திடீரென்று நோய் நீங்கி, அன்றைக்கே படுக்கையை விட்டு எழுந்தார்.

'அதன் பிறகு தான், 'கிறிஸ்டியன் சயன்ஸ்' என்ற மதத்தை ஸ்தாபித்தார். 'நோய் என்று ஒன்றுமே கிடையாது; அது பொய். ஆகவே, அதை குணப்படுத்த மருந்து கொடுக்க வேண்டியதில்லை...' என்பதே, இந்த மதத்தின் முக்கிய போதனை.

'நம்பினால் நம்புங்கள்... அமெரிக்காவில் மட்டும் இந்த மதத்தினருக்கு, 12 ஆயிரத்து, 500 சர்ச்சுகளுக்கு மேல் இருக்கின்றன. பிற நாடுகளிலும் இந்த மதத்தினர் ஏராளமாக இருக்கின்றனர்...' என்றேன்.

'உண்மை தானா? தெரிந்தவர் எழுதலாமே...' — என்றார் குப்பண்ணா!

***

குளியலறையிலிருந்து அப்போது தான் தலை துவட்டியபடி வெளியே வந்தேன். வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் குப்பண்ணா.

'வெயில் காலம் வந்தாலும் வந்தது... நாம் அன்றைக்கு மிருகக்காட்சி சாலையில் பார்த்தோமே நீர் யானை, அது மாதிரி தண்ணீரிலேயே கிடக்கலாம் போலிருக்கிறது...' என்றேன்.

'நாம் பார்த்தது நீர் யானை அல்ல; நீர்க் குதிரை!' என்றார் குப்பண்ணா.

'இல்லை... நீர் யானை தான். 'ஹிப்போபொடமஸ் - நீர் யானை' என்ற போர்டே இருந்ததே...' என்றேன்.

குப்பண்ணா சிரித்துக் கொண்டே, 'நீர் யானை என்று தான் சொல்கிறோம். ஆனால், 'ஹிப்போபொடமஸ்' என்ற கிரேக்க வார்த்தைக்குச் சரியான அர்த்தம், நீர்க் குதிரை என்பது தான்...' என்றார்.

பக்கத்து வீட்டுப் பையன் ஓடிவந்து, 'சார்... உங்களை யாரோ போனில் கூப்பிடுகின்றனர்...' என்றான் குப்பண்ணாவிடம்.

திண்ணையிலிருந்து இறங்கி வேகமாகப் போன அவர், ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

'இவ்வளவு நாள் தெரியாத விஷயம் ஒன்று இன்றைக்குத் தான் எனக்குத் தெரிந்தது...' என்றார்.

'என்ன?' என்றேன்.

'ஒண்ணுமில்லே... இப்போ, 'டெலிபோன் வந்திருக்கிறது!' என்று வந்து கூப்பிட்டான் அல்லவா? போய்ப் பார்க்கிறேன்; டெலிபோன் ரிசீவரைக் கீழே வைக்காமல் டெலிபோன் மேலேயே வைத்திருந்தனர்.

'சரி தான்... வர நேரமாகி விட்டது என்று டெலிபோனை வைத்து விட்டனர் போலிருக்கிறது என்று எண்ணி திரும்ப நினைத்தேன்.

'ஆனால், பையன், 'எடுத்துப் பேசுங்க சார்...' என்றான். 'வைத்தாகி விட்டதேப்பா! மறுபடியும் போன் வந்தால் பேசலாம்...' என்றேன்!'

உட@ன நான், ஓ... உங்களுக்கு தெரியாதா? கூப்பிட்டவர் எவரோ, அவர் டெலிபோன் ரிசீவரை கீழே வைக்காதவரை மற்றவர் என்ன தட்டினாலும், தொடர்பு அறுந்து போகாது. பேச வேண்டிய நபர் வருகிற வரை, டெலிபோன் ரிசீவரைத் தனியாக மேஜை மேல் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மறுமுனையிலிருப்பவரிடம், 'லயனிலேயே இருங்கள். ஆசாமியை பேசச் சொல்கிறேன்...' என்று சொல்லிவிட்டு, அழகாக டெலிபோன் மேலேயே ரிசீவரை வைத்து விடலாம். தொடர்பு அறாது. அதனால், இன்னொரு நன்மையும் உண்டு...'

'என்ன?' எனக் @கட்டார்.

'ரிசீவரை மேஜை மீது வைத்து விட்டு நாம் ஏதாவது பேசுவோம். அதெல்லாம் மறுமுனையில் இருப்பவருக்குக் கேட்கக் கூடும். இந்த முறையில் செய்தால், அந்த இடைஞ்சலும் இல்லை...' என்றேன்.

புரிந்து கொண்டவராகத் தலையாட்டினார் குப்பண்ணா.

***

'அறிவு வளர்ச்சிக்கு 300 குறிப்புகள்' என்ற ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு குறிப்பு:

பெரும் பணக்காரரான பிர்லா ஒரு புதிய மாளிகை கட்டியிருந்தார். அதைப் பார்க்க காந்திஜியை அழைத்துச் சென்றார். மாளிகையை சுற்றிக் காட்டினார்.

'இந்த மாளிகை நவீன முறையில் கட்டப்பட்டு இருக்கிறது. இருந்த இடத்தில் இருந்தபடி ஒரு பொத்தானை அழுத்தினால், சாப்பாடு வரும். இன்னொரு பொத்தானை அழுத்தினால், புத்தகம் வரும், இந்தப் பொத்தானை அழுத்தினால் குளிக்கும் தொட்டி வரும்...' என்று கூறினார் பிர்லா.

உடனே, குளிக்கும் தொட்டி பொத்தானை அழுத்தினார் காந்திஜி. குளிக்கும் தொட்டி, 'சர்'ரென்று வந்து நின்றது. அதைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனார் காந்திஜி.

அந்தக் குளியல் தொட்டியில் பிர்லாவின் மனைவி குளித்துக் கொண்டிருந்தாள்.

— எனக்கு என்னவோ இந்த செய்தி உண்மையாக இருக்கும் என்று நம்ப முடியவில்லை; இதற்கு மேல் அந்த புத்தகத்தை படிக்கவும் இல்லை!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us