PUBLISHED ON : மார் 25, 2012

*என்.சரிதா, அம்பத்தூர்: ஏற்றி விட்ட ஏணியை மறந்து, நன்றி கெட்ட நயவஞ்சகர்களை என்ன செய்யலாம்?
மன்னித்து மறந்து விடலாம்! மறக்கா விட்டால் அதையே நினைத்து, மன நிம்மதி கெட்டு, குட்டி சுவராகிப் போகும், நிம்மதியில்லாத வாழ்க்கை, நரகம்!
***
*பி.சக்திவேல், தெத்துப்பட்டி: நண்பனுக்கு கடன் கொடுத்து விட்டு, வசூலிக்க அலையோ அலை என அலைகிறேன்...
கடன் கொடுக்கவும் செய்யாதீர்... வாங்கவும் செய்யாதீர்... கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால், காந்தி கணக்கில் எழுதிக் கொண்டு கொடுங்கள். அப்படி செய்தால், இந்த அலைச்சல், மனக்கஷ்டம் இருக்காது!
***
**பா.கோமளா, வண்ணாமடை: யார் மோச மானவர்?
பொய்யர்கள். திருடன், கொள்ளைக்காரன், பிக் - பாக்கெட் இவர்களை எல்லாம் விட, மோசமானவர் கள், நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஆŒõமிகள்; இவர்களிடம், சகவாசமே வைத்துக் கொள்ளக் கூடாது!
***
*ஜெ.கவிதா, பழனி: கண்டதுக்கெல்லாம் எனக்கு கவலை வந்து விடுகிறதே...
கண்டதற்கும் கவலைப்பட்டால், நம் பெட்டியில் பணம் இல்லாமல் போகும்; உடல் நலன் போய் விடும்; உள்ளத்தின் அமைதி குலைந்து விடும்.
***
*எஸ்.பிச்சைமுத்து, மறைமலை நகர்: சந்தேகப் பேய் என்னைப் பிடித்து ஆட்டுகிறதே...
நீங்களே அதை பேய் என்று குறிப்பிட்டு விட்டீர்களே... சந்தேகப்படுதல், ஒருவித தற்கொலை முயற்சி! கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி, ரயில் தண்டவாள வசதி இல்லாதவர்கள், இந்த பேயை வளர்த்துக் கொண்டே வந்தால் போதும்... தானாகவே செத்து விடலாம்!
***
**மா.நாராயணன், கீழையூர்: காதலிக்கும் இந்த நேரத்திலே பல கண்டிஷன்கள் போடு கிறாள் என் காதலி...இவளை நம்பலாமா?
தன் குணம் இதுதான் என்பதை பிட்டு, பிட்டு வைக்கிறாள் உம் காதலி... நல்லது தானே! ஒரிஜினல் குணத்தை மறைத்து, திருமணமான பின் அவஸ்தைப்பட வேண்டாம் பாருங்கள்... படு புத்திசாலியான பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்!
***
*பா.வேலுச்சாமி, ராயபுரம்: நம்முடன் பழகும் நண்பன், அடுத்தவர்களிடம் நம்மை பற்றி மோசமான விமர்சனம் செய்கிறான். அவனை என்ன செய்வது?
இப்படிப்பட்டவன் நண்பன் அல்ல; எதிரி! அவனை சட்டை செய்யாமல், 'இக்னோர்' செய்து கழற்றி விடுவதே சாலச் சிறந்தது!
***
**என்.குழந்தைவேல், புறத்தாக்குடி: இந்தியாவில் தொலை தொடர்பு வேகமாக முன்னேறி வருகிறதா?
வருகிறது! குறிப்பாக, தென் மாநிலங்களும், மெட்ரோக்களும்! தமிழ்நாட்டில் 2கி.மீ., சுற்றளவுக்குள் தொலைபேசி, 86 சதவீத கிராமங்களில் உள்ளன. கேரளாவில் இதுவே, 80 சதவீதமாக உள்ளது. தொலைபேசி இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை, வெகு விரைவில் வரும்.
***
