தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் நட்பை கொச்சைப்படுத்தாதீர்!

அலுவலகத் தோழியருடன், 'காபி ஷாப்' சென்றிருந்தேன். அருகில் இருந்த டேபிளில், நான்கு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், தன்னுடன் பணிபுரியும், சக பெண் பணியாளர் ஒருவரை, பல்வேறு முயற்சிகளுக்குப் பின், 'கரெக்ட்' செய்த விதத்தை விவரித்துச் சொல்ல, எனக்கு கோபம் வந்தது.

'உன் மேல உள்ள நம்பிக்கையாலத் தானே அந்த பொண்ணு உன் கூட பழகறா? ஆனா நீ, உன் பிரண்ட்ஸ்கிட்ட அவளோட நட்பை பற்றி, இப்படி கொச்சையா பேசறியே... அந்த பொண்ணுக்கு இது தெரிஞ்சா, அவ எவ்வளவு வேதனைப்படுவா? இது நட்புக்கு செய்யற துரோகம் இல்லையா?' என, அவனிடம் கடுமையாகக் கேட்டேன் நான் .

சுற்றியிருந்தவர்கள் எங்களை கவனிக்க, அவன் தலை குனிந்தான்.

ஆண்களே... பெண்ணோடு ஏற்படும் நட்பு புனிதமானது. மனதில் பாதுகாத்து அனுபவிக்க வேண்டிய அந்த இனிமையை, சக நண்பர்களிடம் பெருமையடிக்க, கொச்சைப்படுத்த பயன்படுத்தாதீர்!

கே.லீனா சந்திரமோகன், குரோம்பேட்டை.

புடவை தந்த சிரமம்!

சமீபத்தில், கல்லூரிகளுக்கு இடையே நடந்த கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் கலந்து கொண்ட கல்லூரி மாணவி நான். வாளிப்பான உடற்கட்டு கொண்ட வடமாநில மாணவி ஒருத்தி, தன் ஜாக்கெட்டுக்கு வெளியில், உள்ளாடை பட்டை வெளிப்பட்ட நிலையிலும், இடுப்பு மற்றும் மார்பு பகுதிகள், பெருமளவு தெரியும் வகையிலும், புடவை அணிந்து வளைய வந்து கொண்டிருந்தாள்.

மாணவர்களின் ஜொள்ளுப் பார்வை, அவளையே மொய்க்க, அதை உணர்ந்து சங்கடத்துடன், புடவையை, அப்படி இப்படி இழுத்து விட்டும், முழுமையாய் சரிசெய்து கொள்ள முடியாமல் தவித்தாள்.

சுடிதார், சல்வார், ஜீன்ஸ் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து பழகியுள்ள அவளை, இந்த விழாவுக்காக, புடவை கட்ட கட்டாயப்படுத்தி இருக்கின்றனர் என்பதும், தோழியர் உதவியுடன் புடவை கட்டியும், புடவை அவளுக்கு பழக்கம் இல்லாததால், இப்படி படுத்துகிறது என்பதும், நான் அவளை அணுகி விசாரித்த போது, தெரிந்தது.

தனியறைக்கு அவளை அழைத்துச் சென்று, புடவையை அவிழ்த்து, மீண்டும் சற்று டைட்டாக கட்டிவிட்டு, சில பல இடங்களில், 'பின்' குத்தி சமாளித்து அவளை அனுப்பினேன்.

கல்லூரி விழாக்களில், புடவை கட்டியே ஆக வேண்டும் என, மாணவியரை நிர்பந்திப்பவர்கள், பிற மாநில மாணவியருக்கு, அவர்களின் வசதிக்கேற்ற ஆடைகளை அணிய, சலுகை தரலாமே! புடவைக்கு புதுசான மாணவியரை கட்டாயப்படுத்தி, ஜொள்ளு மாணவர்களின் கண்களுக்கு விருந்தாக்குவதை தவிர்க்கலாம் அல்லவா?

ஜே.கயல்விழி, சென்னை.

இம்புட்டு நாசூக்கு தேவையா?

கிராமத்துத் துவக்கப் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் நான், சொந்த வேலை காரணமாக, பல ஆண்டுகளுக்குப் பின் சென்னை வர நேர்ந்தது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய நான், அதிகாலை நேரம் என்பதாலும், பயணக் களைப்பில் இருந்ததாலும், ரயில் நிலைய ஓய்வறையில், சற்று இளைப்பாறிவிட்டு கிளம்ப நினைத்தேன்.

சென்னையில் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என நினைத்து, ரயில்வே ஊழியர் ஒருவரிடம், 'வேர் இஸ் த ரெஸ்ட் ரூம்?' என கேட்க, அவர் கை காட்டிய இடத்திற்கு சென்ற நான் அதிர்ந்தேன்; அது ஓய்வறை அல்ல; கழிப்பறை!

சரி... பக்கத்தில் எங்காவது இருக்கும் போல, நாம்தான் இடம் மாறி வந்து விட்டோமோ என நினைத்து, அங்கு காசு வசூலித்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரித்தேன்.

'இதாம்மே ரெஸ்ட் ரூம்பு... ஒண்ணுக்கு ரெண்டு ரூவா, ரெண்டுக்கு அஞ்சு ரூவா...' என்றான். அவன் சொன்ன கட்டணக் கணக்கு புரிந்த போதுதான், 'கழிப்பறை' சென்னையில், 'ரெஸ்ட் ரூம்' என அழைக்கப்படுகிறதென தெரிந்து கொண்டேன். ரெஸ்ட் எடுக்கும் இடமா அது?

சென்னை வாசகர்களே... கழிப்பறையை, ரெஸ்ட் ரூம் என்று சொல்கிறீர்களே, நிஜமான ரெஸ்ட் எடுக்கும் ரூமை என்னவென்று சொல்வீர்கள்?

நாகரிக உலகில், நாசூக்கு தேவைதான்; அதுக்காக இம்புட்டு ஓவராவா?

வீ.ஆவுடையம்மாள், சின்ன புளியம்பட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us