தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (21)

நானா போனதும்; தானா வந்ததும்! (21)

நானா போனதும்; தானா வந்ததும்! (21)


PUBLISHED ON : ஏப் 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களுக்கு தூக்கம் கொஞ்ச நாளாக சீராக வருவதில்லையா?

தப்பித் தவறி, யாரிடமும் மூச்சு விட்டு விடாதீர்.

'உலகத்தில் தலைவலி, ஜலதோஷத்துக்கு அடுத்தபடியாக, மூன்றாவது ராங்க்கில் இருப்பது, தூக்கம் இல்லாத வியாதிதான்...' என்று, மிச்சிகனில் ஒரு யுனிவர்சிட்டி கூறுகிறது.

நாம் தான் தூங்குகிறோம் என்றாலும், எங்கிருந்தோ அது வரவேண்டிய சங்கதி போலிருக்கிறது. அதனால்தான் பலரும், 'தூக்கம் வரவில்லை... இன்னும் வரவில்லை... நேற்றும் இப்படித்தான் சரியாக வரவில்லை...' என்று, ஏதோ ரயில், பிளேன் லேட்டாக வருவதை குறிப்பிடுவது போல பேசுவர்.

வாசலில் போய் நடக்கிறது, வீட்டுக்குள்ளே நடப்பது, அடிக்கடி எழுந்து எழுந்து பார்ப்பது. 'சாமி@ய... கடவுளே...' என தூக்கம் வந்து சேர பிரார்த்தனை செய்வது, தெரிந்த மந்திரத்தை ஜெபம் செய்வது, ஒன்று இரண்டு சொல்வது, (சில சமயம் பதினாறாம் வாய்ப்பாடு) குடும்பத்திலே, விவரம் தெரிந்து யார் யார் காலமானார்கள், யார் யாருக்கு எப்போ கல்யாணம் நடந்தது, எத்தனை ராமர்கள், கிருஷ்ணர்கள், நாராயணன்கள், சீனுக்கள், சுப்ரமண்யர்கள், பரமேஸ்வரர்கள், நம்ம பரம்பரையில் தோன்றினர், இப்போது உயி@ராடு எத்தனை பேர் உள்ளனர், உறவினர் நண்பர்கள் பட்டியல், ஆயுளில் விசிட் செய்த ஊர்கள் எது எது, அந்த ஊர் கோவில்கள் சாமி பெயர், அம்மன் பெயர், தாயார் பெயர், சாப்பிட்ட ஓட்டல், சாப்பிட்ட அயிட்டம், யார் பணம் தந்தது இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக யோசிப்பது...

கடிகாரத்தைப் பார்ப்பது, அப்புறம், 'சே... முப்பது நிமிஷம்தான் ஆகியிருக்கா?' என்று சலித்துக் கொள்வது...

தூக்கம் வரவில்லையெனில், எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டாம் என்பர். 'சும்மா கண்ணை மூடிக்கொண்டு படுத்திருங்கள்...

தூக்கம் தானா வரும்...' என்று மனைவியோ, மற்றவர்களோ பொறுப்பில்லாமல் யோசனை கூறுவர்.

'செத்தாக் கூட கண்ணைத் திறக்காதீங்கோ... தூக்கம் வருதா, இல்லையா பாருங்கோ...' என்றாளாம், ஒரு கறார், கண்டிப்பான மனைவி.

சரியாகத் தூக்கம் வராதவர்கள், மற்றவர்களின் காரியங்களுக்கு இடைஞ்சலாக இருப்பது மரபு.

தான் இன்னது செய்கிறோம் என்பதை அறியாமலேயே, பாவம் செய்கிறவர்களை, ஏசுபிரான், 'இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கின்றனர். இவர்களை மன்னியும் பிதா@வ!' என்று பிரார்த்தனை செய்தது போல, தூக்கம் வராத பாவிகளை, மற்றவர்கள் மன்னிக்கத்தான் வேண்டும்.

மற்றவரின் தூக்கத்துக்கு தொந்தரவாக இருக்குமே என்று, தூங்கா மூஞ்சிகள் கவலைப்படுவது இல்லை.

பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் எழுந்து, பாத்ரூம் கதவைத் திறப்பதும், மினிமம் சத்தத்துடன் மூடுவதும், ஏதாவது மாத்திரை மருந்தை, அலமாரியில் எலி விஷமம் செய்வது போல, குறுஞ் சத்தங்கள் ஏற்படுத்திக் தேடுவதும், குடிக்கிற தண்ணீரை, டிரம்மிலிருந்து, 'ஜலீர்' என்று சத்தத்துடன் பிடித்து, அவசரமாக மூடுவதோ, காதில் வாக்மேனை மாட்டி ஒலி எழுப்புவதோ, சமையலறைக்குள் போய், டப்பாக்களை குடைந்து, நடுநிசிக் கொள்ளை அடிப்பதோ, காலைத் தேய்த்து, தேய்த்து நடப்பதோ, செய்யாமலிருப்பரா? செய்யத் தான் செய்வர்.

தூங்கா மூஞ்சி பேசினாலே, 'உளறுகிறார்...' என்று கூறுவோரும் உள்ளனர்.

இவர்களுக்கு பொழுது விடிந்து விட்டது எனில், ஒரு மகத்தான சந்தோஷம் ஏற்படும். சந்தோஷம் மட்டுமல்ல, சந்தேகம் ஏற்படும்.

'பொழுது விடிந்து விட்டதா... ராத்திரியிலேயே எழுந்து விட்டோமா... நாம், எந்த அறையில் படுத்திருக்கிறோம்... பாத்ரூம் திசை மாறி இருப்பதுபோல் தோன்றுகிறதே... ராத்திரி வாசல் கதவுக்கு, எக்ஸ்ட்ரா பூட்டு பூட்டப்பட்டதா... அந்தப் பொறுப்பை, தான் செய்ய மறந்து விட்டோமா... பூட்டினோமா?'

மூளையை மேலும் கசக்கிக் கொள்ள விரும்பாமல், சமையலறைப் பக்கம் டிகாஷன் போடுவதற்கு செல்லும் மனைவியிடம், 'வாசல் பூட்டியாச்சா?' என்று கேட்டு வைப்பர்.

'விடிந்து எட்டு மணியாகிறது... பகலு<க்கும், ராத்திரிக்கும் வித்தியாசம் தெரியலை உங்களுக்கு... 'பூட்டியாச்சா...'ன்னு இப்ப கேக்கிறீங்களே... ஒரே குழப்பமா இருக்கீங்க... டாக்டர்கிட்டே பி.பி., செக்கப்புக்கு போயிடுங்க... எதிலாவது, பெரிசா போய் இழுத்துவிட்டு விடப் போகிறது. ஸ்ட்ரோக், கிரோக் வந்துட்டுதுன்னா அவ்வளவுதான்...'

'ஏய்... ஏய்... என்னை கொண்டு போய் மருத்துவமனையில், அட்மிட்டே பண்ணிடுவ போலிருக்கு...' என, பாதிக்கப்பட்டவர் அலறுவார்.

டாக்டரிடம் போகாமலேயே, எளிய முறையில் தூக்கம் வரவழைத்துக் கொள்ள, யோசனைகளை, நம் நலத்தில் அக்கறையுள்ளவர்கள் கூறுவர். (அவர்கள் விஷயத்தில் பலிக்காததால், நமக்காவது பலிக்கட்டும் என்ற அடிப்படையில் அடுக்குவர்.)

* சாயந்தரம் ஆறு மணிக்கு, ஒரு பிரிஸ்க் வாக் போய் வாருங்கள்; குறைந்தது அரை மணி நேரம்.

* இரவு ஏழு மணிக்குள்ளே சாப்பிடுங்க.

* வயிறு நிறைய, தயிர் சாதம் சாப்பிட்டு படுங்க.

* தூக்க மாத்திரைதான் பெஸ்ட். ரெஸ்டிலோ, வேலியம் மாத்திரைகளை ரெகுலராக போட்டுக்குங்க; தப்பில்லை!

* 'டிவி' பார்க்க வேண்டாம்.

* வாக்மேனை, காதில் மாட்டி உட்கார்ந்திருக்க வேண்டாம்.

* உங்களுக்கு இரண்டு பக்கத்திலும், இரண்டு குப்பைக் கூடை வைத்துக் கொள்ளுங்க. கடந்து போன விஷயம் ஞாபகம் வருதா, அதைத் தூக்கி, இடது பக்க குப்பைக் கூடையிலே போடுங்க. எதிர்கால சிந்தனைகள், கவலைகள் வருதா, அதைத் தூக்கி, வலப்பக்க குப்பை கூடையிலே போடுங்க. இன்ன ரகம் என்று பிரிக்க முடியாத, இரண்டுங்கெட்டான் எண்ணமா, அதைப் போட கால் மாட்டில், ஒரு குப்பைக் கூடை வைத்துவிடுங்க.

* படுக்கும் முன், கால் மணி @நரம் வெண்ணீரில் காலை வைத்துக் கொள்ளுங்க...

* சுடச் சுட பால் ஒரு கப் சாப்பிடுங்க.

* ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அவசியம்.

*நினைப்புகள் வர வர, சார்ட் அவுட் செய்து, அந்தந்த கூடையிலே போட்டுக் கொண்டே இருங்க. மனசு க்ளியர் ஆகி விடும்.

*இப்போ ப்ரீதிங். படுத்துக் கொண்டே மூச்சை நல்லா இழுத்து, மெதுவாக விடணும். உச்சியிலிருந்து மெதுவாக காற்று, பாதம் வரைக்கும் இறங்க வேண்டும். இதை எல்லாம் மனைவிகிட்டே சொன்னதால், மூன்று குப்பைக் கூடை வாங்கி வந்து விட்டாள்.

'அடக் கடவுளே... குப்பைக் கூடை எதற்கு... மனசிலே கற்பனையாக குப்பைக் கூடைகள் இருக்கணும். கடந்த கால, வருங்கால, இரண்டும் கலந்த கால எண்ணங்களை, அந்தந்த குப்பைக் கூடையில் போட்டுவிடுவதுபோல், மனதில் பாவனை செய்தால், தூங்கா மூஞ்சிகளுக்கு சீக்கிரம் தூக்கம் வந்து விடுமாம்...'

'அதைவிடத் தூக்கமே வந்து விட்டதாக பாவனை செய்து கொள்வது சுலபமில்லையோ...' என்றாள் மனைவி.

தூங்கா மூஞ்சிகளுக்கு அந்தக் கலை தெரிந்தால், ஏன் இத்தனை கவலை?

தொடரும்.
பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us