PUBLISHED ON : ஜூன் 28, 2015

சற்று இளைப்பாற வண்டியை விட்டு இறங்கி, ஓரமாக நின்று, சுற்றும் முற்றும் பார்த்தேன்.
கார்களிலும், ஆட்டோக்களிலும் மக்கள் வந்து, சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீபுரம் நாராயணியம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்று பல முறை எண்ணியும் முடியவில்லை. என் மகளின் திருமணம் முடிந்து, அவர்களை தேனிலவுக்கு அனுப்பி வைத்து, கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் நாராயணியம்மனுக்கு நன்றி சொல்ல குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தோம்.
கோவில் அருகே, எங்களையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தாரை சுட்டிக் காட்டி, ''ஏங்க, அந்த குடும்பம், நம்மளயே பாக்கிறாங்களே... தெரிஞ்சவங்களா இல்ல சொந்தக்காரங்களா...'' என்று மனைவி கேட்டதும், அவர்களை திரும்பிப் பார்த்தேன்.
நான் பார்ப்பது தெரிந்து, எங்கள் அருகில் வந்தனர்.
அக்குடும்பத் தலைவியை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. நன்றாக உற்றுப் பார்த்ததில், அவள் என் பள்ளித் தோழி விஜயகுமாரி போன்று தெரிந்ததால், ''நீங்க... விஜயகுமாரி தானே...'' என்றேன் சந்தேகத்துடன்.
அவர், 'ஆம்' என்று மகிழ்ச்சியுடன் தலையசைக்கவும், ''நல்லாயிருக்கீங்களா,'' என்று கேட்டு, என் மனைவி மற்றும் மகனை அறிமுகப்படுத்தினேன்.
அவளும் தன் கணவர், மகள் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தி என, ஒரு இளம் பெண்ணையும் அறிமுகப்படுத்தினாள்.
'இவ்வளவு பெரிய பேத்தியா...' என ஆச்சரியமாக இருந்தது. அதேசமயம், அவள் பெண் என்பதால், எனக்கு முன்னாலேயே அவளுக்கு திருமணம் நடந்திருக்கும் என எண்ணி, மெல்ல புன்னகைத்தேன்.
அவள் கணவன், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்றும், மகள் தலைமை ஆசிரியையாகவும், மருமகன் வெளியூரில் பொறியாளராக வேலை பார்ப்பதாகவும் கூறினாள்.
அவள் கணவர் சிரித்தவாறு, ''உங்களப் பற்றி, இவ அடிக்கடி சொல்வா. படிப்பில இவளுக்கு போட்டியே நீங்க தானாமே... பெண் பிள்ளைகளோடு அதிகம் பேச மாட்டீங்களாம்; தினமும் இவங்க கிராமத்திற்கு வந்து, வீடு வீடாய் பால் ஊற்றி, அதன்பிறகு தான் பள்ளி கூடத்துக்கு வருவீங்களாம்; ரொம்ப பெருமையா சொல்வா,'' என்றார்.
''இவங்க எனக்கு நல்ல தோழிங்க; எங்க வீட்ல வசதி குறைவு. என்னை ஒரு போட்டியாளனா நினைக்காம, தன்னோட புத்தகம், நோட்செல்லாம் இரவல் தருவாங்க,'' என்றேன்.
''அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. எங்கப்பா ஆசிரியர்; அவரோட பலத்துல நான் நல்லாப் படிச்சேன். ஆனா, இவர் அப்படியல்ல; காலையில் வியாபாரம்; அதற்கு பின் பள்ளிக் கூடத்துக்கு வருவார்,'' என்றவள், என் மகனை சுட்டிக் காட்டி, ''தம்பி என்ன படிக்கிறான்...'' எனக் கேட்டாள்.
''பிளஸ் 2 படிக்கிறான் விஜயகுமாரி,'' என்றேன்.
''என்ன... அந்நியமா பேசுறீங்க... பள்ளிக் கூடத்துல படிக்கையில என்னை விஜின்னு தானே கூப்பிடுவீங்க... அப்படியே கூப்பிடுங்க. என் கணவர் தப்பா நினைக்க மாட்டார்,''என்றாள்.
அவர் கணவர், ஒப்புதலாக தலையசைத்து, ''நீங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்... பள்ளியில எப்படி சங்கோஜப்படாம பேசுவீங்களோ அப்படியே கூச்சப்படாம பேசுங்க,'' என்றார்.
''அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்,'' என்றேன் சங்கோஜத்துடன்!
அனைவரும் சிரித்தனர். நான் விஜியைப் பார்த்தேன்; அதே அழகான பச்சரிசி பல் வரிசை. அவள் பார்வையில் எப்போதும் நேசம் நிறைந்திருக்கும். உண்மையில், அவள் எனக்குப் பிடித்த அன்பான தோழி. பள்ளி இறுதி வகுப்பு முடிந்த பின், அவளைக் காண சந்தர்ப்பமில்லை. நான் மேற்படிப்புக்காக சென்னை வந்து விட்டேன்.
இதுவரை, எங்களோடு படித்த நண்பர்கள் எவரையும் சந்திக்கும் சூழல் அமையவில்லை. இப்போது தான் முதன் முறையாக, விஜியை சந்திக்கிறேன்.
அதை அவளிடம் சொன்னபோது, ''எங்களோட தான் அளவா பேசுவே... ஆண் நண்பர்களோடு ரொம்ப நட்பாக இருப்பாயே... இத்தனை ஆண்டுகள்ல ஒருத்தரைக் கூடவா சந்திச்சதில்ல...'' என்றாள் ஆச்சரியத்துடன்!
''என்ன செய்றது விஜி... சென்னை வந்த பின், வேலை செய்து கொண்டே படித்து, பின், ஒரு வேலையிலும் அமர்ந்து, அப்புறம் கல்யாணம், பிள்ளைகள்ன்னு வாழ்க்க ஒரு கூட்டுக்குள் அடங்கிப் போச்சு,'' என்றேன்.
''பெரும்பாலும், எல்லாருடைய வாழ்க்கையும் அப்படித்தான் போயிடுறது,'' என்றவள், ''நம்ம கமலா, இப்ப மும்பையில் செட்டில் ஆகிட்டா. சரஸ்வதி விஷயம் தெரியுமா?''
''ஏன் என்ன ஆச்சு?''
''உன் நண்பன் கன்னியப்பனை தான் திருமணம் செய்து, திருவண்ணாமலையில இருக்கா.''
''ஒரு வகையில, அவங்க ரெண்டு பேரும் உறவுக்காரங்க தானே...''
''ஆமாம்; அப்பறம் கிருஷ்ணன் இருக்கான்ல... அவன் ஜவுளிக்கடை வச்சுருக்கான். நம்ம கூட படிச்ச எல்லாருமே இப்ப நல்லாத்தான் இருக்காங்க; ஒரு சிலர தவிர,'' என்றாள் சிறு வருத்தத்துடன்!
''யார் அந்த ஒரு சிலர்?'' என்று கேட்டேன்.
''நம்ம ஆராவமுதன் தான் கொஞ்சம் கஷ்டப்படறதா கேள்விப்பட்டேன்,'' என்றாள்.
''ஏன் என்ன ஆச்சு?''
''அவனுக்கு நாலும் பெண்ணாப் போச்சு. மூணு பெண்களை கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து கொடுத்துட்டான். இன்னும் ஒருத்தி; அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே இருக்கு.''
''அவ்வளவு வயசா ஏறியிருக்கும்...'' என்றேன் கண்களில் கேள்வியுடன்!
'அப்படியில்ல; ஆராவமுதனுக்கு, 20 வயசிலேயே கல்யாணமாகியிருச்சு. பொண்ணுங்கள எல்லாம், 18 - 19 வயசுலேயே கட்டிக் கொடுத்துட்டான். கடைசி பொண்ணுக்குத் தான், 20 வயசுக்கு மேலாகியும் கல்யாணம் செய்து கொடுக்க வசதியில்லாம கஷ்டப்படுறான்,''என்றாள்.
''எங்கேயிருக்கான்?''
''காஞ்சிபுரத்தில தான்.''
''பரவாயில்ல; உனக்காவது நம்ம கூடப் படிச்சவங்களப் பற்றி தெரியுது; எனக்கு தான் யாரைப் பற்றியும் தெரியல,'' என்றேன்.
பேசியபடியே இரு குடும்பத்தாரும், கோவிலுக்குள் சென்று அம்மன் தரிசனம் முடிந்து திரும்பி வந்தோம். என் பையன் விஜியின் கணவரோடு ரொம்ப ஒட்டிக் கொண்டான்.
பெண்கள், கும்பலாய் அமர்ந்தனர்.
விஜியின் கணவர் ரங்கநாதனிடம், ''சார் எனக்கு, ஒரு யோசனை தோணுது...'' என்றேன்.
''சொல்லுங்க.''
''எங்க நண்பர் ஒருத்தர், அவரோட பொண்ண கல்யாணம் செய்து கொடுக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுறதா விஜி சொன்னாங்க...'' என்று ஆரம்பித்தவுடனே, ''ஆமாம்; என்கிட்டயும் அதபத்தி சொல்லி, 'ஏதாவது உதவி செய்யணும்'ன்னு சொன்னா. நானும் சரின்னு சொன்னேன்,'' என்றார்.
''அவங்கள கான்டாக்ட் செய்யணும்; எனக்கு தான் யாரோடயும், 'லிங்க்' இல்லயே...''
''விடுங்க; விஜிகிட்ட உங்க பிரண்ட்ஸ் சிலரோட மொபைல் எண்கள் இருக்கு; அதை வச்சு எல்லாரையும் பிடிச்சுடுலாம்,''என்றார்.
இதுகுறித்து விஜயகுமாரியிடம் பேசினோம்.
அவள் சந்தோஷத்துடன் தன் கணவரிடம், ''என் நண்பர் எப்படிங்க...''என்றாள் பெருமையுடன்!
அவர் மகிழ்ச்சியுடன் தலையசைத்தார்.
என் மனைவியைப் பார்த்தேன்; அவள், என்னை பெருமையோடு பார்த்தாள்.
ரங்கநாதன் மிகவும் நட்போடு, கையைப் பிடித்து, ''நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க,'' என்றார்.
காஞ்சிபுரம் சென்று, விஜியின் வீட்டில் அமர்ந்து, சற்று நேரம் பேசி விட்டு, ஆராவமுதன் வீட்டிற்குச் சென்றோம். விஜி தான் அழைத்துச் சென்றாள். சாதாரணமான சிறிய ஓட்டு வீடு.
எங்களைப் பார்த்து திகைத்தவன், பின், என்னை இறுக கட்டிக் கொண்டான். அவன் நிலைமை பரிதாபம் தான். அவன் பெண் கல்யாணத்துக்காக, அந்த சிறிய வீட்டையும் அடமானம் வைக்கும் சூழலில் இருந்தான்.
நாங்கள் ஆறுதல் கூறினோம். அவனது பெண்ணை, என் மனைவி அன்புடன் அணைத்து, ''என்னம்மா படிச்சிருக்கே?''என்று கேட்டாள்.
''பிளஸ் 2 ஆன்ட்டி.''
அவனுக்கு ஆறுதல் கூறி, அவனிடமிருந்து நண்பர்கள் சிலரின் தொலைபேசி மற்றும் மொபைல் போன் எண்களை வாங்கினேன். பின், எல்லாரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்.
இத்தனை ஆண்டுகள் கழித்து, பள்ளி நண்பர்களை பார்த்ததில், என் மனதில், ஏதோ இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது.
''அம்மா... முன்பெல்லாம் அப்பா, 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தா, ஒரு மாசத்துக்கு வச்சுக்குவார். ஆனா, கோவிலுக்கு போயிட்டு வந்ததிலிருந்து, 200 ரூபாய்க்கும் மேல ரீசார்ஜ் செய்றார்,''என்றான் மகன் கேலியுடன்!
''அப்பாவுக்கு இப்ப வயசு கொறஞ்சுடுச்சுடா. பேச்சில எவ்வளவு இளமை துள்ளுது பார்... பிரண்ட்ஸ் கூட, எவ்வளவு ஜாலியா பேசறாரு; அவரோட சின்ன வயசுக்குப் போயிட்டார்,'' என்று அவளும் கிண்டலடித்தாள்.
உண்மை தான்; போனில் பேசும்போது, என்னை மறந்து உணர்ச்சிப் பெருக்கால், கண்கள் சில சமயம் ஆனந்தக் கண்ணீரை உதிர்க்கத்தான் செய்தது. நண்பர்கள், ஒருவரோட ஒருவர் பேசிக் கொள்ளும்போது குடும்பம், குழந்தைகள், வேலை, வீடு, வாசல், வசதி ஒவ்வொன்றாய் விசாரித்து, நல்ல முறையில் இருந்தால் மகிழ்வதும், சிரமப்படுவதை கேட்கும்போது, சங்கடப்பட்டு ஆறுதல் கூறுவதும் வார்த்தைகளின் அடங்காத அனுபவம்.
ஆராவமுதனைப் பற்றி கூறும்போது, அனைவரும் வருத்தப்பட்டனர். சிலரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஆனால், உதவிகள் போதுமானதாக வரும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.
நட்பின் வேகம், ஒரு சிலரிடம் அப்படியே இருந்ததையும், பலரிடம் குறைந்து விட்டதையும் உணர முடிந்தது.
கட்டவிழ் காளைகளாய் இருப்பது வேறு; மூக்கணாங் கயிறு போட்டு கட்டி விடப்பட்டிருப்பது வேறு.
சிலர் நல்ல வேலையிலும், ஒரு சிலர் வியாபாரம் மற்றும் விவசாயத்திலும் அங்கங்கே சிதறிக் கிடந்தனர்.
திருப்பதி உண்டியலில் லட்சக் கணக்கில் கொட்டும் கோடீஸ்வரர்களும், ஆயிரக்கணக்கில் போடும் லட்சாதிபதிகளும் இருக்கும்போது, ஏழையும் தன் பங்குக்கு பத்து ரூபாயாவது போட வேண்டும் என நினைத்து, கோவிலுக்கு வருவது இல்லையா...
அதுபோன்று, இக்கல்யாணத்தில் இணைந்தனர் நண்பர்கள்.
என் பெண்ணின் திருமணத்தை விட, நான் மிகவும் உவகைப்பட்டதும், உணர்ச்சிவசப்பட்டதும் ஆராவமுதனின் பெண் கல்யாணத்தில் தான்!
சந்தோஷத்தில் கண்கள் கலங்க, என்னிடமும், விஜயகுமாரியிடமும், ''ரொம்ப நன்றி,''என்றான் ஆராவமுதன்.
''முட்டாள்... நாமெல்லாம் ஒரே குடும்பம்; நன்றின்னு சொல்லி, நண்பர்களை அன்னியமாக்காதே... உண்மையில நாங்க தான் உனக்கு நன்றி சொல்லணும். ஆண்டுக்கணக்கில் பிரிந்த நண்பர்கள, உன் பெண்ணின் திருமணம் மூலம் ஒன்று சேர்த்திருக்கே,''என்றேன்.
பிரிந்தவர் கூடினால், பேசுவது கடினம் என்பது தலைவனுக்கும், தலைவிக்கும் பொருந்தலாம்; நண்பர்களுக்குள் பொருந்துமா? அவரவர் இன்ப, துன்பங்கள், அனுபவங்கள், குடும்ப உறவுகள், வேலை என நண்பர்களின் பேச்சுக்கள் எல்லாவற்றை பற்றியும் இருந்தது.
சிறகடித்துப் பறந்தது மனம். விலாசங்கள் தெரிந்து கொண்ட மனம் விசாலமானது. எதையும் பகிர்ந்து கொள்ளும் துணிவு, தடைகளை துண்டித்தது.
''ரங்கநாதன் சார்... ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' என்றேன்.
''கஷ்ட, நஷ்டங்களிலும், சுகத்திலும் பங்கு கொள்ளக் கூடியவர்கள் நண்பர்கள் தான்,''என்று கூறி சிரித்தாள் விஜி.
''நட்பு என்பது நிரந்தர படைப்பு; காலங்கள் தோறும் தொடர்ந்தபடியே இருக்கும். யுகங்கள் மாறினாலும் நட்பு மாறாது,'' என்றார் ரங்கநாதன்.
உண்மை தானே!
ஆ.லோகநாதன்