PUBLISHED ON : நவ 24, 2019

முருகன் கோவில்களில், ஆண்டுக்கு ஒருமுறை, திருக்கல்யாணம் நடத்துவது வழக்கம். ஆனால், மூன்று முறை திருமணம் செய்யும் அதிசய முருகன், பெரம்பலுார் அருகிலுள்ள, செட்டிகுளத்தில் அருள்பாலிக்கிறார்.
செட்டிகுளத்தில் இருந்த அரச மரத்தின் அருகே, ஒருநாள் நள்ளிரவில் பேரொளி தோன்றியது. அந்த இடத்தில் தானாக தோன்றிய சிவலிங்கத்திற்கு, தேவர்கள் சிலர் பூஜை செய்தனர். இதை கண்ட வணிகர் ஒருவர், மன்னன் பராந்தக சோழனிடம் தகவல் தெரிவித்தார்.
அரண்மனைக்கு விருந்தினராக வந்திருந்த, குலசேகர பாண்டியனுடன் அங்கு சென்றார், மன்னர். அங்கு, சிவலிங்கம் ஏதும் இல்லை. அப்போது, கையில் கரும்புடன் ஒரு முதியவர் வந்தார்; சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டினார். அவர் யார் என, விசாரித்த போது, அருகிலுள்ள குன்றில் ஏறி, முருகனாக காட்சியளித்து, மறைந்தார்.
இதன் அடிப்படையில், தண்டாயுதபாணி என்ற பெயரில், குன்றின் மீது முருகனுக்கும், ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரில், சிவனுக்கும் கோவில்கள் எழுப்பப்பட்டன.
கையில் கரும்பு ஏந்தியும், குடுமி வைத்தும், முருகன் இங்கு வந்ததால், அதே அமைப்பில் மூலவர் சிலை வடிக்கப்பட்டது. வெளியே கரடு முரடாக இருந்தாலும், உள்ளே சுவையான சாறை கொண்டுள்ளது, கரும்பு. இதுபோல, மனிதன், வெளித்தோற்றத்தில் எப்படி இருந்தாலும், உள்ளே நல்ல மனதை கொண்டிருக்க வேண்டும் என்பதை இவர் உணர்த்துகிறார். சித்திரை மாத பிறப்பன்று, இங்குள்ள, 240 படிகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகியை, இந்த முருகன் சாந்தப்படுத்தினார். உக்கிரம் குறைந்த அவள், அருகிலுள்ள, சிறுவாச்சூரில், மதுரகாளியம்மன் என்ற பெயரில் தங்கினாள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டி அன்று, முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், பங்குனி உத்திரத்தன்று, குழந்தையை கரும்புத்தொட்டிலில் வைத்து, கோவிலை வலம் வந்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முருகன் கோவில்களில், ஆண்டுக்கு ஒருமுறை தான் திருக்கல்யாணம் நடக்கும். ஆனால் இங்கு, பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் போது, 5, 7 மற்றும் 9ம் நாட்களில் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை நீங்க, இந்த வைபவத்தில் பங்கேற்கின்றனர்.
பெரம்பலுார் -- திருச்சி சாலையில், 15 கி.மீ., துாரத்தில், (திருச்சியில் இருந்து, 44 கி.மீ.,) ஆலத்துார் உள்ளது. இங்கு பிரியும் சாலையில், 8 கி.மீ., துாரத்தில் செட்டிகுளம் இருக்கிறது.
தி. செல்லப்பா