
வாழப்போகும் பெண்களின் தலையில், சுமையை ஏற்றாதீர்!
என் தம்பிக்கு, வசதியில்லாத இடத்தில் தான், பெண் எடுத்தோம். நல்ல குடும்பம், பெண் நன்றாக படித்திருந்ததால், அவர்கள் வசதிக்கு ஏற்றாற்போல், திருமணம் மற்றும் நகை செய்யுங்கள் என்று கூறினோம்.
திருமணம் முடிந்து சிறிது நாட்களுக்கு பின், தம்பி மனைவி கருவுற்றாள்.
'தற்போது, வேலைக்கு செல்ல வேண்டாம், உடல் நிலை பாதிக்கும்; குழந்தை பிறந்த பின் வேலைக்கு போகலாம்...' என்றோம்.
அப்போது தான், அனைவருக்கும், 'ஷாக்' கொடுத்தாள், தம்பி மனைவி.
மாதா மாதம், 30 ஆயிரம் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு, வங்கி கடன் கட்டவேண்டும்... அவளது தம்பி படிப்பு, இவளின் படிப்பு மற்றும் கல்யாணம் என, அனைத்து செலவும், இவள் தான் செய்துள்ளாள்.
பிள்ளைத்தாச்சி பெண்ணை வேலைக்கு அனுப்பவும் முடியவில்லை; அனுப்பாமல், அவர்களின் கடனை எங்களால் கட்டவும் முடியாமல் திண்டாடுகிறோம்.
'மருமகளின் சம்பளத்தை கேட்டால், அசிங்கம். வங்கி கணக்கில், அவளே வைத்துக் கொள்ளட்டும்...' என்று சொல்லி விட்டார், அம்மா. இது, அவளுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது.
பெற்றோரே... தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல், அவர்களின் தலையிலேயே கடனை ஏற்றி, செலவு செய்ய வைத்து, திருமணம் செய்து கொடுப்பது மிக கொடுமை. நகை நட்டு, சீர் செனத்தி குறைவாக கொடுத்தாலும் பரவாயில்லை, கடனுடன், பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டாம்.
ஏதோ சிறிய தொகை என்றாலும் பரவாயில்லை. சம்பளத்திற்கு சரிசமமாகவோ, அதற்கு அதிகமாகவோ, இ.எம்.ஐ., கட்டவேண்டும் என்ற கட்டாயத்துடன், தம் பெண்ணையும் அவமானப்பட வைத்து, புகுந்த வீட்டினரையும் சங்கடத்திற்கு உள்ளாக்குவது, ஏற்புடையது அல்ல.
- ஹர்சினி, சென்னை.
'குட் சமாரிடன்' சட்டம்!
பொதுவாக, காயமடைந்த அல்லது ஆபத்தில் உள்ளோரில் உதவுபவர்களுக்கு, அடிப்படை சட்ட பாதுகாப்பு அளிப்பது, 'குட் சமாரிடன்' சட்டம். பொதுமக்களிடையே, இந்த சட்டத்தை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. பலருக்கும் பயன்படும் என்பதால், இங்கே பகிர்கிறேன்:
இச்சட்டத்தின் படி, நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது வழியில், வாகன விபத்து, கொலை, கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவத்தை கண்ணெதிரே காண நேர்வதாக வைத்துக் கொள்ளுங்கள்...
அதை, காவல் துறையில், நீங்கள் பதிவு செய்ய விரும்பினால், உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை, காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது, இந்த சட்டம்.
அதேபோல், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை, மருத்துவமனையில் சேர்க்க நினைப்போரும், தங்களின் பெயர், முகவரியை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை; முதற்கட்ட சிகிச்சைக்கான தொகையையும் செலுத்த வேண்டியதில்லை.
இது மாதிரியான சம்பவங்களில் உதவக் கூடியவர்களின் பெயரை கூட, பதிவு செய்யக் கூடாது என்கிறது, 'குட் சமாரிடன்' சட்டம். அது மட்டுமல்ல, மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளை பாதிக்கப் பட்டோரிடமும் கேட்கக் கூடாது என்கிறது.
'குட் சமாரிடன்' சட்டத்தின் படி, 911 எனும் எண்ணுக்கு அழைத்து, தம் கண்ணெதிரே காணும் அசம்பாவிதங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிப்பவர்கள், 'குட் சமாரிடன்...' அதாவது, 'உதவக்கூடிய நல்லிதயங்கள்' என, அழைக்கப்படுகின்றனர்.
டி. ரூபாதேவி, சென்னை.
பெரியவர்கள், பெரியவர்கள் தான்!
தோழி வீட்டில், பேரக் குழந்தை பிறந்து, ஒரு மாதம் ஆகியிருந்தது. பிரசவித்த பெண்ணையும், குழந்தையையும் பார்க்க, 83 வயது, மூதாட்டி உறவினர் வந்திருந்தார்.
கை, கால்களை கழுவி, வாய் கொப்பளித்த பின், குழந்தையை துாக்கி மடியில் வைத்து கொஞ்சினார்.
பொதுவாக, பிறந்த குழந்தையை முதலில் பார்க்க வருவோர், அதன் வாயில் சர்க்கரையை வைப்பர்; தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு அவ்வாறு செய்யக் கூடாது என்பதால், பிரசவித்த பெண்ணின் வாயில், வெள்ளை சர்க்கரைக்கு பதில், நாட்டு சர்க்கரையைச் சிறிதளவு போட்டார்.
அத்துடன், தன் வீட்டில் செய்த லேகிய பவுடர், குளியலுக்கு, மஞ்சள் துாள், வீட்டில் தயாரித்த கண் மை, பத்திய உணவுக்கான வத்தல்கள், உரை கல், கை வைத்திய மருந்து பொருட்கள், உரமின்றி பயிரிட்ட பழ வகைகள் மற்றும் பத்திய காய்கறிகளையும் கொடுத்தார்.
பிறந்த குழந்தைக்கு, புது துணிகளை போட்டால், தோல், 'அலர்ஜி' வருமென்று, மெல்லிய வெள்ளை துணியில் தைத்த மேல் சட்டைகளை, நான்கைந்து முறை தண்ணீரில் நனைத்து காய வைத்ததை எடுத்து வந்திருந்தார்.
துாக்கம் கெட்டு, பெண்ணை பார்த்துக் கொள்ளும் தோழிக்கு, தெம்பு குறையாமல் இருக்க, சத்து மாவு கஞ்சி... தோழி வேலை செய்யும் நேரத்திலும், பிரசவித்த பெண் துாங்கும் நேரத்திலும், பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் தோழியின் கணவர், புத்தக பிரியர் என்பதால், படிக்க, சில புத்தகங்களையும் கொடுத்தார்.
விடைபெற்று செல்லும்போது, சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி, குழந்தையின் பெயரில், காசோலை ஒன்றை கொடுத்து, வங்கியில் புது கணக்கு ஒன்றை துவக்க அறிவுறுத்தினார்.
இதை பார்த்த எங்கள் எல்லாருக்கும் மனம் நெகிழ்ந்தது. என்ன இருந்தாலும், பெரியவர்கள் பெரியவர்கள் தான்.
லட்சுமி வாசுதேவன், கோவை.