
சினிமா தொழிலாளர்கள் அதிகம் பேர் புழங்கும் பகுதி அது. எதிரே இருந்த, மாவு அரவை நிலையத்துக்கு வந்த பெண்ணை பார்த்ததும், தன் கதைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று நினைத்தார். சிறிது நேரத்தில், அந்த பெண் போனதும், தெருவை பார்த்தார், வினு சக்கரவர்த்தி.
அவர் கண்ணில், 'ஹேர் டிரஸ்சர்' தேவராஜ் தட்டுப்பட்டார். அவரை அழைத்து, விஜி குறித்து விசாரித்தார்.
'அபர்ணா வீட்ல இருக்கு...' என்றார்.
உடனே, நடிகை அபர்ணாவுக்கு போன் செய்தார்.
'அந்த பொண்ணு... அது தான், மாவு மிஷினுக்கு வந்துதே, ஆங்... அது தான், அதை கொஞ்சம் அனுப்பி வைக்கறீங்களா, நம்ம படத்துல ஒரு சின்ன வேஷம்...'
வினு சக்கரவர்த்தி முன், வந்து நின்றாள், விஜி.
'உன் பேர் என்ன?'
'விஜயமாலா... விஜின்னு கூப்பிடுவாங்க...'
'சாராயம் விக்கிற பெண்ணா ஒரு படத்துல நடிக்கணும்...'
சின்ன வாய்ப்பாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு, அந்த வார்த்தைகள், காதில் தேனாக பாய்ந்தது.
'க்ளாமரா நடிப்பியா?'
ஒரு கணமும் தயங்கவில்லை, தன் சம்மதத்தை உடனே தெரிவித்தாள், விஜி.
நடிக்க வேண்டும், அவ்வளவு தான்.
'ஒரு பொண்ணுக்கு, சினிமாவில் நடிக்க இத்தனை ஆர்வமா...' என்று, வினு சக்கரவர்த்திக்கு பெரிய வியப்பு. சுதாரித்து, 'பெரிய விஷயம் இல்லம்மா... ஈஸி தான்... நான் சொல்ற மாதிரி நடிச்சா போதும்...' என்றார்.
மனதில் ஆயிரம் சந்தோஷ கற்பனைகள் ஓட ஆரம்பித்தன, விஜிக்கு.
நடிகை ஸ்மிதா பாட்டீலை ரொம்ப பிடிக்கும், வினு சக்கரவர்த்திக்கு. விஜியின் தோற்றம், அவருக்கு, ஸ்மிதா பாட்டீலை ஞாபகப்படுத்தியது. 18 வயதுக்குரிய, விஜியின் தேகப் பொலிவு, பட்டு போல தோன்றியது. என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தவர், 'பட்டு' என்பதை, 'சில்க்' என்றும், தன் அபிமான நடிகை ஸ்மிதாவின் பெயரையும் இணைத்தார்.
'நீதான் சிலுக்கு. யாராவது உன் பேர் என்னன்னு கேட்டால், 'சிலுக்கு ஸ்மிதா'ன்னு சொல்லு...' என்றார்.
நம்ப முடியவில்லை, விஜியால். புதிய பெயர், புதிய வாழ்க்கை. அதுவரை அனுபவித்துக் கொண்டிருந்த நரகத்தின் நொடிகள், இனிமேல் விடைபெற்று விடும் என்றே தோன்றியது. வானுக்கும், பூமிக்கும் எகிறி குதிக்காத குறை.
சென்னை, மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை, சிலுக்கு ஸ்மிதாவின் நெற்றியில் வைத்து விட்டார், வினு.
வினு சக்கரவர்த்தியின் காலில் விழுந்து நமஸ்கரித்தார், சிலுக்கு ஸ்மிதா. முன்பணமாக, 100 ரூபாயை, அவரது கையில் கொடுத்தார்.
சிலுக்கு ஸ்மிதாவின் வாழ்க்கை சக்கரம், வண்டிச் சக்கரம் படத்தில் இருந்து, சுற்ற ஆரம்பித்தது.
வண்டிச் சக்கரம் படத்திற்கு, முதலில் வைக்கப்பட்ட பெயர், வா மச்சான் வா. மூன்று ஆண்டுகளாக, வினு சக்கரவர்த்தியின் மனதுக்குள் ஊறியிருந்த கதை.
கதையை கேட்ட பாரதிராஜா, வினு சக்கரவர்த்தியையே, 'ஹீரோ' ஆக போட்டு எடுக்கிறேன் என்றார். அதற்குள், சிகப்பு ரோஜாக்கள் படத்தை இயக்கும் வாய்ப்பு வரவே, அதை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின், திருப்பூர் மணி, இந்த கதையை தயாரிக்க முன் வந்தார்.
புது அம்பாசிடர் கார்.
எண்: 1188. திரைக்கதை எழுத, மைசூர் புறப்பட்ட, வினு சக்கரவர்த்தியுடன், காரில் அமர்ந்திருந்தார், சிலுக்கு ஸ்மிதா.
படப்பிடிப்புக்கு, 10 நாட்கள் முன்பே, மைசூர் போய் விட்டனர். மைசூர் மகாராஜா ஊர்வலம் போகிற வீதியில், ஆசிர்வாத் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார், சிலுக்கு.
மைசூர் மார்க்கெட். அங்கு தான், சிலுக்கின் முதல் காட்சி படப்பிடிப்பு.
'மேக் - அப்' போட்டு, வந்து நின்றார், சிலுக்கு.
'எப்படியோ இருந்த பொண்ணை, எப்படிய்யா இப்படி ஆக்கினே...' என்று, வினு சக்கரவர்த்தியிடம் கேட்டு ஆச்சரியப்பட்டார், சிவகுமார்.
'ஹாலிவுட் நடிகை, சோபியா லாரன் மாதிரி, ஒரு ஆர்டிஸ்டை உருவாக்கிட்டீங்க...' என்று, தன் வாழ்த்துகளை கூறினார், நடிகை சரிதா.
'ஒன்பதே நாள்ல எப்படிய்யா இப்படி உருவாக்க முடிஞ்சுது...' என்று பிரமித்தார், திருப்பூர் மணி.
கள்ளுக்கடை.
'வரார் வரார் நம்ம ஆளு வரார்...' என்று சொல்லும், சிலுக்கின் முகத்தில் பூரிப்பு.
'உனக்காக, ஸ்பெஷல் சரக்கு வெச்சிருக்கிறேன்; உட்காரு...' என்று, சிவகுமாரை வரவேற்கிறார்.
'குடிக்கிறதுக்கு இருக்குது; தொட்டுக்கறதுக்கு...' என்கிறார், சிவகுமார்.
'நான் இருக்கேன் இல்ல...' என்று சிரிக்கிறார், சிலுக்கு.
சிவகுமாரும், சிலுக்கும் நடித்த அந்த காட்சி, ஒரே, 'டேக்'கில், ஓ.கே., ஆயிற்று.
படத்தின் இயக்குனர், கே.விஜயன்.
வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சந்திக்கும் தொழிலாளி ஒருவனின் கதை என்பதால், வண்டிச் சக்கரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சிலுக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை, ஏழு நாட்களில் படம் பிடித்தனர்.
சென்னை, வால்டாக்ஸ் சாலையில், 'சால்ட் குவார்ட்டர்ஸ்' என்ற இடம் உண்டு. பாமர மக்கள், சால்ட்டு கொட்டாய் என்பர். அங்கு, சாராய கடைகள் மிக பிரபலம்.
கவர்ச்சியான உடையுடன், நிறைய நகைகளுடன், கைகளில் சாராய பாட்டிலுடன் வெளியான, சிலுக்கின், 'ஸ்டில்' மிக பிரபலமானது. அங்கு கிடைத்த பாடல் தான், 'வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை...'
தமிழகத்தின் எல்லா சாராய கடைகளிலும், புலவர் புலமைப்பித்தன் எழுதிய,
'வா மச்சான் வா' என்ற பாடல் ஒலித்தது.
வண்டிச் சக்கரம் படத்தில், ஐந்தே காட்சிகளில் தான் நடித்தார், சிலுக்கு. ஆக., 29, 1980ல் படம் வெளியானது. தமிழக குடிமக்கள், சிலுக்கை கண்களில் நிறுத்தியபடியே, சாராயத்தை சுவைத்தனர். சிலுக்கின் பெயரும் பிரபலமானது.
- தொடரும்
பா. தீனதயாளன்