
பா - கே
சென்னையில் உள்ள பெண்கள் படிக்கும் பிரபல கல்லுாரியில் நடந்த விழாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. பெண்கள் கல்லுாரி என்றதும், தானும் வந்து ஒட்டிக்கொண்டார், லென்ஸ் மாமா.
'பளபள' உடையில், சிட்டுக்குருவி போல் காட்சியளித்தனர், மாணவியர். விழாவின் துவக்கத்தில், சுய முன்னேற்றம் பற்றி பேச ஆரம்பித்தார், ஒரு பேச்சாளர்.
அவர் பேசியது:
தொப்பி செய்து விற்கும் கடை ஒன்றுக்கு, ஜான் ஜேக்கப் என்பவர், கடன் கொடுத்திருந்தார். கடனை பெற்ற, அந்த கடையின் நிர்வாகி, பெண்கள் அணியும் பலவிதமான தொப்பிகளை தயார் செய்து வைத்திருந்தார்.
எதிர்பார்த்தபடி, தொப்பிகள் வியாபாரம் ஆகவில்லை. ஒரு கட்டத்தில், வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல், பல மாதங்களாக, ஜான் ஜேக்கப்பை இழுத்தடித்தார், தொப்பி கடை உரிமையாளர்.
கடையில் வந்து உண்மை நிலவரத்தை கண்ட, ஜான், உரிமையாளர் மீது இரக்கம் காட்டினார். அந்த கடையின் பங்குதாரராக தன்னை இணைத்துக் கொண்டார். தன் பங்குக்கு, தான் கொடுத்த கடன் தொகையை அப்படியே வைத்துக் கொள்ள சொல்லி விட்டார்.
கடையின் பங்குதாரரான பின், மறுநாள் முதல் கடைக்கு வந்தார். பெரிய பூங்காவுக்கு அருகில் இருந்தது, அந்த கடை. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்து, தினமும் அங்கு வந்து செல்வோரை உன்னிப்பாக கவனித்தார். கடையில் இருந்த மற்றவர்களுக்கு இது வினோதமாக இருந்தது. இருப்பினும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
ஒரு வாரத்திற்கு பின் அவர், கடைக்கு வந்தார். ஒரு வாரமாக, பெண்கள் அணிந்து வந்த விதவிதமான தொப்பிகளை பார்த்து குறிப்பெடுத்ததை, தொப்பி செய்பவர்களிடம் கூறி, அதுபோன்று செய்யச் சொன்னார்.
அவை தயாரானதும், புதுமாடல் தொப்பிகளை, பார்வைக்காக வைக்க சொன்னார். வியாபாரம் சூடு பிடித்தது. பூங்காவிற்கு வருவோர், தங்களுக்கு தேவையான தொப்பியை, 'ஆர்டர்' கொடுக்க, அவை, மறுநாளே செய்து தரப்பட்டது.
காலத்திற்கு ஏற்ப, தன் கற்பனையை புகுத்தியும், ஏற்கனவே பார்த்த மாடல்களில் சில மாற்றங்களை செய்தும், புது புது தொப்பிகளை தினம் வடிவமைக்க, 'ஐடியா' கொடுத்தார். இவரது சிந்தனை போக்கு, மிக சிறப்பாக வேலை செய்யவே, தொப்பிக்கு வெளியூரிலிருந்தும், 'ஆர்டர்'கள் குவிந்தன.
அமெரிக்காவில் பிரபல தொப்பி தயாரிப்பு நிறுவனமாக, 'ஸ்கை மேக்கர்ஸ்' மலர்ந்திட, ஜான் ஜேக்கப் என்ற மனிதனின் முயற்சி தான் காரணம். சிறிய சிந்தனை, சிறிய முயற்சி, அதற்கு தரப்படும் முக்கியத்துவம், மாபெரும் வெற்றிகரமான தொழிலுக்கு வழி காட்டுகிறது.
நம் ஊரில் விற்பனையாகும், 'மெடிமிக்ஸ்' சோப்பு பற்றிய ஒரு தகவலும் இது போன்றது தான். இந்த சோப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர், சாதாரண மூலிகை மருத்துவராக இருந்தவர் தான். தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி, இவரை சந்தித்தார்.
அப்போது, உடன் வேலை செய்யும் பலருக்கு, அடிக்கடி ஏற்படும் சரும நோய் பற்றி கூற, அதற்கு மருந்தாக, இந்த சோப்பு கட்டியை தயார் செய்து தந்துள்ளார், மருத்துவர். அது நல்ல பலன் தரவே, குடிசை தொழிலாக தயாரிக்கப்பட்ட இச்சேவை, பிற்காலத்தில், பல்வேறு மருந்துகளின் கலவை சேர்த்து, 'மெடிமிக்ஸ்' என்ற பெயரில் உருவானது.
- இந்த தகவல்களை கூறி, 'எதிலும் மேம்போக்காக இல்லாமல், சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனித்தால், ஏதாவது ஒரு, 'பொறி' நமக்கு கிடைக்கும். அதை பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம்...' என்று கூறினார், அந்த பேச்சாளர்.
இதையடுத்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று அறிவித்தனர். ஒரு நல்ல அறிவுரை கேட்ட திருப்தியுடன், அங்கிருந்து கிளம்பினேன்.
ப
புத்தகம் ஒன்றில் படித்தது:
நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார், ஒருவர். முதல் மனைவி, அவ்வளவாக அழகில்லை என்பதால், அவள் மீது, சிறிதளவும் அன்பு இல்லாமல் இருந்தார். அவள் எது கேட்டாலும் வாங்கி கொடுக்கவே மாட்டார். முழுமையாக வெறுத்தார்.
எனவே, இன்னொரு பெண்ணை, இரண்டாவது மணம் புரிந்தார். அவளும், பேரழகி கிடையாது. என்றாலும், அவள் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்பதால், அவளையும் விலக்கி வைத்தார். ஆனாலும், அவள் மீது அவருக்கு பாசம் இருக்கதான் செய்தது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அவளது ஆலோசனையை பெறுவார்; விருப்பப்பட்டு ஏதாவது கேட்டால், எப்போதாவது வாங்கி கொடுப்பார்.
மூன்றாவதாக, வேறொரு பெண்ணை, மணம் செய்தார். பேரழகியாக இருந்ததால், அவள் மீது சதா அவருக்கு சந்தேகம் இருந்தது. அத்துடன், வெளியே எங்காவது அழைத்து போகவும் தயங்கினார்; யாருடனாவது ஓடிப்போய் விடுவாளோ என்ற பயம் இருந்தது. எனினும், இவள் மீது பாசம் இருக்கதான் செய்தது; அடிக்கடி வந்து பார்த்து செல்வார். தேவையானவற்றை வாங்கி கொடுக்கவும் செய்தார்.
பின்னர், நான்காவதாக, மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண், இவரை விடவும் மிக இளமையாக இருந்ததால், அவள் மீது அளவுக்கு அதிக பாசத்துடனும், அவள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கியும் கொடுத்தார்.
திடீரென்று அவர், நோய்வாய்பட்டார். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அவரது நான்காவது மனைவி, தன் பெட்டி, படுக்கைகளை எடுத்து கிளம்பினாள்.
பதறிப்போய் இவர் கேட்டபோது, 'படுக்கையில் விழுந்து விட்ட உங்களோடு, இனி, என்னால் குடும்பம் நடத்த முடியாது...' என்று கூறி, கிளம்பி விட்டாள்.
வருத்தமடைந்த அவர், மூன்றாவது மனைவியை அழைத்தார். உடம்புக்கு முடியாமல் போன தனக்கு, தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
'உடம்புக்கு முடியாமல் போய்விட்ட நிலையில், உங்கள் மனைவியாக இருந்து பயனில்லை; என்னை விரும்பும் வேறொருவரை மணந்து சந்தோஷமாக வாழப் போகிறேன்...' என்று கூறி, சென்று விட்டாள்.
மனமுடைந்து போன அவர், இரண்டாவது மனைவியை அழைத்து, உதவுமாறு கேட்டார்.
அவளோ, 'என்னிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டதற்காக இரக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேண்டுமென்றால் பார்த்துக் கொள்கிறேன்...' என்றாள். அதன்படியே உதவியாக இருந்து, பின், அவளும் கிளம்பினாள்.
இனி மிச்சம் இருப்பது, முதல் மனைவி மட்டும் தான். அவளிடம் மருந்துக்கு கூட அன்பு செலுத்தியதே இல்லை என்பதால், அவளை உதவிக்கு அழைக்க, கூச்சமாக இருந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று நினைத்து, பேசாமல் படுக்கையிலேயே கிடந்தார்.
இந்நிலையில், அவரது முதல் மனைவி வந்தாள்.
'உடம்புக்கு முடியாமல் இருக்கும் உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்; அனுமதித்தால் செய்கிறேன்...' என்றாள்.
அதை கேட்டதும், அவர், வெலவெலத்து போனார்.
'உண்மையான அன்பு எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல், பொய்களையும், வெளி வேஷத்தையும் உண்மை என்று நம்பி விட்டேனே...' என்று வருத்தப்பட்டார்.
ஒன்றுக்கும் மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு, இது ஒரு பாடம் என்று நினைத்துக் கொண்டேன்.