
* ச. சக்திவேல், திருப்பூர்: நம் அமைச்சர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது, 'கோட் - சூட்' அணிந்து செல்கின்றனரே... நம் பாரம்பரிய உடையை அணிய மறுப்பது ஏன்?
அவர்களுக்கு, 'கோட் - சூட்' அணிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது! அதை விடுங்கள்... அங்குள்ள சீதோஷ்ண நிலை, நம் உடைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டாமா?
நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இதில் ஏன் மண்டையை குழப்பி, அரிய நேரத்தை வீண் செய்கிறீர்!
அலமேலு ராஜகோபால், சென்னை:'முரசொலி' நாளிதழ் ஒன்றை, தினமும் கருணாநிதியின் சமாதியில் வைக்கின்றனராமே... இது என்ன பகுத்தறிவு?
'தமிழர் தலைவர்' என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்ட, தி.க., வீரமணியிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்! போகட்டும்... நெஞ்சார்ந்த உணர்வுடன், தி.மு.க.,வினர் செய்துள்ளனர். மாதக் கடைசியில் அவற்றை பழைய பேப்பர் கடையில் போட்டு, ஏதோ டீ செலவுக்காவது அந்த காவலாளிக்குப் போகட்டுமே என்ற, உயர்ந்த எண்ணம் தான் காரணம்!
* கே.எஸ்.நேசன், சென்னை: கூவம் நதியில், குடும்பத்துடன் படகு சவாரி செய்வது போல கனவு கண்டேன்...
இது, 1947க்கு முன், கண்ட கனவாக இருக்கப் போகிறது. இப்போது என்றால், இறங்குமிடத்தில், 4 - 5 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்!
கே.ஆர்.எஸ்.சம்பத், புத்துார்: அந்துமணியாருக்கு அவசரத்துக்கு சமைக்கத் தெரியுமா?
ஓ... தாளிச்சு கொட்டிய மோர் சோறு, கத்தரிக்காய் வதக்கல்! நான் கூறும் சமையலை, 6 நிமிடத்தில் முடித்து விடலாம்! (செய்முறை தேவையென்றால், தனியாக கடிதம் எழுதுங்கள்!)
* ஒய்.ஜெயந்தி, கோவை: பெண் குழந்தைகள் பிறப்பு, இந்தியாவில் எப்படி உள்ளது? இதன் விளைவு, எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்?
ஆணா, பெண்ணா என, 'ஸ்கேன்' செய்து பார்க்கக் கூடாது என்ற சட்டம் உள்ளது. ஆனால், சில திருட்டு மருத்துவமனைகள், காசுக்கு ஆசைப்பட்டு இதை செய்து, பெண் என்றால் கலைத்து விடுகின்றன. மூன்று ஆண் குழந்தைகளுக்கு, ஒரு பெண் என்ற வீதத்தில் தான், பிறப்பு உள்ளது. இப்படியே போனால், எதிர்காலத்தில் ஆண்கள், வரதட்சணை கொடுக்கும் நிலை வந்தாலும் வந்துவிடும்!
மு. சாந்தி ராஜன், சென்னை: இன்னும் சில மாதங்களில், அஞ்சல் அட்டை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாமே!
நல்லது, நாட்டின் வளர்ச்சிக்கு! ஒரு அஞ்சல் அட்டையின் விலை, 50 பைசா; அச்சிடச் செலவு, 7 ரூபாய்! இப்போது தான், 'இ - மெயில்' வந்து விட்டதே... ஏன் கவலைப்பட வேண்டும்!