
கையிலிருந்த பேப்பரை கோபமாக வீசி எறிந்தான், ராகவன்.
''ச்சே... இந்த வீட்டில் பேப்பர் கூட நிம்மதியா படிக்க முடியாது. 'லோ கிளாஸ்' ஏரியாவுல வீடு வாங்க வேண்டாம்ன்னு படிச்சு படிச்சு சொன்னேன்,'' என, முணுமுணுத்தபடி சேரை தள்ளி விட்டு, குளியலறையை நோக்கி போனான்.
'தினமும், ஆபீஸ் போகும் முன், இதே, 'டயலாக்' கேட்டு கேட்டு, காது புளிச்சு போச்சு...' என்று, பதிலுக்கு முணுமுணுத்துக் கொண்டே, 'டவலை' கொடுக்க போனேன், நான்.
இந்த ஏரியாவில் வீடு வாங்கி, குடி வந்து, ஆறு மாதமாகிறது. சென்னையிலிருந்து பல கி.மீ., தள்ளியிருக்கிறது. கடற்கரை கூப்பிடு துாரம். இருவருக்கும் இரு சக்கர வாகனங்கள், காரும் உண்டு. பிள்ளைகள் இருவருக்கும், பள்ளி பஸ் வருகிறது.
நகரத்தின் இரைச்சல் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்று ஆசைப்பட்டு, இந்த இடத்தை நான் தான் தேர்வு செய்தேன். கணவருக்கு, இதில் துளியும் விருப்பம் இல்லை. மயிலாப்பூரிலேயே பிறந்து, வளர்ந்து, காலேஜ் போய், சந்தடியும், இரைச்சலும், சந்தும் பொந்தும் பழகிப்போன இவருக்கு, அமைதியான சூழல் பிடிக்கவில்லை.
நானோ, கிராமத்தில் பிறந்து, அங்கிருந்தே பக்கத்து சிறிய நகரத்தில், காலேஜுக்கு சைக்கிளில் போய் கழிந்தது. அதனாலேயே, சென்னையிலிருந்து தள்ளியிருக்கும் இந்த இடம், என் கிராமத்து பின்னணிக்கு பிடித்திருந்தது. என் வற்புறுத்தலுக்கு பிறகு, இந்த வீட்டை வாங்க, அவர் ஒப்புக்கொண்டார்.
ஒரு வருடம் அமைதியாகதான் கழிந்தது. அவரின் அலுவலகம், அங்கிருந்து பக்கம் என்பதால், சீக்கிரம் வீடு வந்து விடுவார். பிள்ளைகளுக்கும், காலையில் சீக்கிரமே பள்ளி துவங்கி, மாலை, 3:00 மணிக்குள் முடிந்து விடும். சுற்றிலும் வேலி போட்டு, தோட்டம்.
நாங்கள் வளர்த்த செடிகள், தினமும் காலையில் மொட்டு விட்டதா, பூ பூத்ததா என்று, ஆவலோடு ஓடி பார்க்கும் சந்தோஷம் என, மகிழ்ச்சி பொங்கும் குடும்பமாக தான் இருந்தது.
ஆறு மாதத்திற்கு முன், 15 குடும்பங்கள், பக்கத்து காலி மனைகளில் குடித்தனம் வந்தன. சின்ன, சின்ன ஓலை குடிசைகள் ஆங்காங்கே முளைத்தன. பக்கத்தில், ஐ.டி., கம்பெனியின் கட்டுமான பணிக்கு, வேலை செய்ய வந்தவர்கள் என்று தெரிய வந்தது.
கம்பெனிக்காரர்கள் அவர்களுக்காக, இரண்டு, மூன்று தண்ணீர் குழாய்கள் போட்டுக் கொடுத்திருந்தனர். அவர்கள் வந்ததும், கூடவே கூச்சலும், சண்டையும், சந்தடியும் குடியேறி விட்டன.
எங்கள் வீட்டிற்கு எதிரேயே, ஒரு குழாய் போடப்பட்டிருந்தது. விடியற்காலை ஆரம்பித்து இரவு வரை, அந்த குழாயடியில் கூட்டம் அலை மோதும். குழாயடி சண்டை என்று கேள்விப்பட்டிருந்தேனே தவிர, இதுவரை நேரில் பார்த்ததில்லை. இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவர்கள் வந்த புதிதில், தினமும் காலையில், ஜன்னலருகில் நின்று வேடிக்கை பார்ப்பேன். போகப் போக தலை வேதனை சகிக்கவில்லை. ஒருவரையொருவர் குடத்தால் அடித்துக் கொள்வதும், கையை பிடித்து முறுக்குவதும், காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொள்வதுமாக, ஜன்னலையே திறக்க முடியாமல், மூடி வைக்க வேண்டியதாகி விட்டது.
எங்கள் காம்பவுண்டுக்கு நேரெதிர் குடிசை, சாலாவுடையது. அவளின் பக்கத்து குடிசை, புஷ்பாவுடையது. சாலாவுக்கு ஒரே பையன். 10 வயதிருக்கும். அருகில் இருக்கும் அரசு பள்ளியில், ஐந்தாவது படிக்கிறான். சாலாவின் புருஷனும், இவள் மாதிரி கட்டட தொழிலாளியாக இருந்தவன் தான். குடித்து, குடித்து குடல் அழுகி, போய் சேர்ந்தான்.
புஷ்பாவின் புருஷன், வேறு ஊரில் கட்டட மேஸ்திரியாக இருந்த போது, தன் கீழ் வேலை செய்த பெண்ணை, இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து, இவளை தள்ளி வைத்து விட்டான். பெண்ணும், பிள்ளையுமாக இரண்டு குழந்தைகள்.
புஷ்பா வேலை செய்து சம்பாதித்தால் தான், மூன்று பேருக்கும் இரண்டு வேளை கஞ்சியாவது குடிக்க முடியும். புஷ்பாவின் அம்மா, அப்பா இரண்டு பேருமே விபத்தில் இறந்து விட்டனர். நெருங்கிய சொந்தம் என்று யாரும் கிடையாது. சாலாவுக்கு, அம்மா உண்டு; அப்பா இல்லை.
சண்டை போட தராதரமே பார்ப்பதில்லை, சாலா. தினம், குழாயடி சண்டையின் நாயகி, அவள் தான். புஷ்பாவுக்கும், அவளுக்கும் எப்போதும் ஆகாது. புஷ்பா எப்போது தண்ணீர் பிடிக்க வருகிறாளோ, அப்போதுதான், சாலாவும் குடத்துடன் வருவாள்.
குழாயடியில் குடத்தை, புஷ்பா வைக்கும்போது, தன் குடத்தால் அதை இடித்து தள்ளிவிட்டு வைப்பாள், சாலா. மிஞ்சி போனால், அவளுக்கும், அவள் பையனுக்கும் ஐந்தாறு குடத்துக்கு மேல் தேவை இராது. ஆனால், சண்டை போடுவதற்காகவே அவள் தண்ணீர் பிடிக்க வருகிறாளோ என்று தோன்றும்.
எனக்கென்னவோ, புஷ்பாவின் மீதுள்ள பொறாமையாலேயே, சாலா, அவளோடு சண்டைக்கு போகிறாளோ என்று தோன்றும். அதற்கு காரணமும் இருக்கிறது.
புஷ்பாவுக்கு, 40 வயதுக்கு மேல் ஆகி, இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருந்தும், அவளுக்கு வயதானதே தெரியாது. கல்யாணமாகாத சிறு பெண் போலவே இருப்பாள். லட்சணமான முகம், கண், மூக்கு, பல் வரிசை, தலைமுடி என்று, அப்பழுக்கு சொல்ல முடியாத வடிவம்.
சாலாவுக்கோ, முகமே சிறிது கோணல். மேற் வரிசை பற்கள் இரண்டு துாக்கல். நல்ல கருப்பு. ஒருநாளும் எண்ணெய் தடவி, தலைவாரி அறியாள். அவள் காது படவே நிறைய பேர், புஷ்பாவின் அழகை பற்றி பேசியது, அவளுக்குள் எப்போதும் இருக்கும் சண்டை சுபாவத்தோடு, பொறாமையையும் துாண்டி விட்டிருக்கலாம். அப்படித்தான் நேற்று நடந்த சம்பவம் ஒன்று, என் எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. கட்டட வேலை கூட நடக்காது. கட்டி முடித்து பூச்சு வேலை செய்த இடத்திற்கு, தண்ணீர் ஊற்ற மட்டும் சிலர் தேவைப்படுவர். மேஸ்திரி தான் அவர்களை தேர்ந்தெடுப்பான்.
'சாலா, எங்க புஷ்பாவை காணும்...' என்று கேட்டான்.
'ம்... எங்கூட பொறந்த பொறப்பு பாரு... அவ எங்க போறான்னு என்கிட்ட சொல்லிட்டா போறா... எங்கே போனாளோ... எதுக்காம் இப்ப புஷ்பாவை தேடிக்கினு வந்த...' என்று, நொடித்தாள் சாலா.
'சிமெட்டிக்கு தண்ணீர் ஊத்தற வேலை இருக்கு; அவளை வரச் சொல்லலாம்ன்னு பார்த்தேன்...' என்றான், வரதப்பன்.
'ஏன், என்னை பார்த்தா, சிமெட்டிக்கு தண்ணீ ஊத்தற மாதிரி தெரியலயா, நா வரேன்...' என்றாள், சாலா.
'ஏம்மே, போன வாரம் உன்னைதானே கூப்டேன். பாவம், ரெண்டு பசங்களை வெச்சுகிட்டு பசியும், பட்னியுமாய் கிடக்குதே, இந்த வாரம் அதை கூப்பிடுவோம்ன்னு வந்தேன்...'
'ஆமா... என்னையெல்லாம் நீ கூப்பிடுவியா... அழகா, தளுக்கி, குலுக்கி சினிமா ஸ்டாரு கணக்கா இருந்தா கூப்புடுவ... யா...' என்று, கெட்ட வார்த்தை சொல்லி துப்பினாள், சாலா.
'உங்கிட்ட பேசினம் பாரு, என்னை சொல்லணும். பொம்பளையா நீ, துா...' என்று வெறுத்தபடி திரும்பினான், வரதப்ப மேஸ்திரி.
புஷ்பாவின் பையனும், சாலாவின் பையனும் ஒரே வயது. இருவரும் ஒன்றாக பள்ளி போய் வருவர். சாலா எவ்வளவோ திட்டியும், குட்டியும், அந்த பையன், புஷ்பாவின் மகனுடன் விளையாடுவதை விடவில்லை.
எப்போதாவது விளையாட்டில் இருவருக்கும் சண்டை வந்து, அது, சாலாவுக்கு தெரிந்தால் போதும்... அன்று முழுதும், புஷ்பாவையும், அவள் பிள்ளைகளையும் வறுத்தெடுத்து விடுவாள். வாயில் வரும் அசிங்கமான வார்த்தைகளை கேட்க பிடிக்காமல், எல்லாரும் வீட்டிற்குள் போய் கதவை சாத்திக் கொள்வர். நாங்களும், எங்கள் வீட்டு ஜன்னல் கதவுகளை சாத்தி வீட்டினுள் அடைந்து கொள்வோம்.
எப்போதாவது நேரம் கிடைக்கும்போது, வீட்டில் வந்து என்னோடு பேசுவது, புஷ்பாவின் வழக்கம். அப்போது, 'எப்படியாச்சும், இந்த பசங்களை படிக்க வச்சு வேலைக்கு அனுப்பணும்... என்னோட கதி இதுகளுக்கு வரக்கூடாது...' என்பாள்.
அவளுடைய ஊரில், ஆறாவது வரை படித்தாளாம். அப்பா - அம்மா இறந்து விட்டதால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாக சொன்னாள்.
'ஆமா, ஏம் புஷ்பா... அந்த, சாலா ஏன் எப்ப பார்த்தாலும் உன்னோட சண்டை போட்டுட்டே இருக்கா...' என்றேன்.
'அத்த உடும்மா... அதுக்கு மனசுக்குள்ள இன்னா கஷ்டமோ... சொல்லிட்டு போகுது... ஒவ்வொருத்தர் ஒரு மாறி, என்னத்தை சொல்றது... பொழைக்கிறதுக்கு உழைக்கணும்; எல்லாத்தையும் பொறுத்துக்கணும். என்ன செய்யறது...' என்பாள்.
ஒருநாள் காலை, டிபன் சாப்பிட்ட பின், வேலைகளை முடித்து, 'டிவி'யின் எதிரில் உட்கார்ந்தேன். திடுதிப்பென்று யாரோ, 'ஓ'வென்று அலறும் சத்தம், அழு குரல்கள், ஓடும் காலடி ஓசையென்று, ஒரே சத்தமாக இருந்தது. எழுந்து வெளியே ஓடினேன். அந்த குடியிருப்பில் எல்லாரும் ஓடுவதும், பேசுவதும், அழுவதுமாக களேபரமாக இருந்தது.
தலைவிரி கோலமாக, புஷ்பாவின் இரண்டு குழந்தைகளையும், இரண்டு கைகளில் பிடித்தபடி, அலறி அழுதபடி ஓடிக் கொண்டிருந்தாள், சாலா. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒரு பையனை நிறுத்தி, ''என்னடா நடந்தது?'' என்று கேட்டேன்.
''யக்கா, புஷ்பாக்கா மேல சாரம் ஒடிஞ்சு விழுந்து, அவங்க செத்து போயிட்டாங்களாக்கா.''
எனக்கு இதயமே நின்று விட்டது போலிருந்தது.
'எம் புள்ளைங்க படிக்கணும்க்கா...' சோகம் ததும்பிய அந்த குரல், இன்னும் காதில் ஒலித்தது.
இரண்டு நாட்களாக அந்த குடிசை பகுதியே அல்லோலகலப்பட்டது. எல்லாருமாக சேர்ந்து, புஷ்பாவை மேலே அனுப்பி வைத்து விட்டனர். புஷ்பாவின் துாரத்து உறவுக்காரர்களான ஒன்று விட்ட சித்தப்பா, மாமாவின் பிள்ளை, அத்தைகள் என்று, அவள் இருந்தபோது வராத அத்தனை பேரும் வந்திருந்தனர்.
புஷ்பாவின் குழந்தைகள் இரண்டும், சாலாவின் பையனோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தும், விளையாடிக் கொண்டும் இருந்தன.
என் ஆச்சரியமெல்லாம் சாலாவை பார்த்து தான். புஷ்பாவின் மரண செய்தியை கேட்டதும், முதலில் ஓடி வந்து, அவள் மீது அழுது புரண்டவள், அவள் தான். இடி விழுந்தவள் போல், அவள் பக்கத்திலேயே தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தாள்.
அந்த குழந்தைகளை கூப்பிட்டு, என் வீட்டில் சாப்பாடு போட்டு, காபி கொடுத்து பார்த்துக் கொண்டேன். கூடவே சாலாவின் பையனும்.
மூன்றாம் நாள், புஷ்பாவின் குடிசையின் எதிரே உட்கார்ந்து, அவளது உறவினர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். குடிசை வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள், சாலா. விஷயம், புஷ்பாவின் குழந்தைகளை பற்றியது என்று ஊகிக்க முடிந்தது.
என்ன பேசுகின்றனர் என்று கேட்கும் ஆவலில், மொட்டை மாடியில் வந்து நின்றேன்.
''இத பாரு பா... எனக்கு, இந்த பசங்கள சோறு போட்டு காப்பாத்த வக்கில்லாம போகல... ஆனா, அம்மா இல்லாத பசங்க... எம் பொண்டாட்டி பஜாரி, அவகிட்ட இதுங்களை மாட்டி வுட எனக்கு மனசில்ல அதான்,'' என்றார், சித்தப்பா பிள்ளை.
''அண்ணே, உங்களுக்கே தெரியும், நானும் தினக்கூலி. ஒருநாள் வேலையில்லேன்னா சாப்பாடு கிடையாது. ரெண்டு வயித்துக்கு சோறு போட சக்தி இல்ல,'' என்றாள், அத்தை.
''அதனாலதான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். சென்னை தாம்பரத்துல, அனாதை பசங்களை காப்பாத்தற ஆசிரமம் ஒண்ணு இருக்கு. அப்பா - அம்மா இல்லாத பசங்களை சும்மாவே எடுத்துக்கறாங்க... அங்க சேத்து உட்ரலாம்; நீங்கல்லாம் என்ன சொல்றீங்க?'' என்றார், மாமா.
எல்லார் முகத்திலும் ஒரு ஆறுதல். இந்த பிள்ளைகளின் பொறுப்பு யார் தலையில் விழுமோ என்ற பயம் நீங்கி, அனைவர் முகத்திலும் நிம்மதி.
'நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுடலாம், அண்ணே...' என்றனர், அனைவரும் ஒரே குரலில்.
''டேய், குமரேசா... உன் துணி மணி, தங்கச்சி துணி மணி எல்லாத்தையும் ஒரு பையிலே போட்டு எடுத்தா... நாம பட்டணம் போறோம்ல... அங்க போயி, நீயும், உன் தங்கச்சியும் சேர்ந்து, கவல இல்லாம இருக்கலாம். கிளம்புங்க,'' என்றார், மாமா.
''நில்லுங்க,'' என்று சீறியபடி, பத்ரகாளி போல் ஓடி வந்தாள், சாலா.
''ஏதோ சொந்தகாரங்க கூடிப் பேசி, ஒங்கள்ள யாரு வீட்டுலயாவது கொண்டு வெச்சு சோறு போடுவீங்கன்னு பாத்துகிட்டிருந்தேன். இந்த மாரி புள்ளைங்கள அனாதை ஆசிரமத்துல சேக்கரதுக்கு, 'பிளான்' போடுவீங்கன்னு நெனச்சு கூட பாக்கல... சொந்தக்காரங்க உங்களாலயே சோறு போட்டு, காப்பாத்தி, படிக்க வைக்க முடியலேன்னா, ஊரு பேரு தெரியாத எடத்துல எப்படி வெச்சுப்பாங்களோ...
''அம்மான்னு அழுதா, அழாதடா கண்ணுன்னு தொடைக்க, யார் இருப்பாங்க... புள்ளைங்க பசிச்சுதுன்னா யாரை கேட்பாங்க... நோவு நொடி வந்தா, யாரு பாப்பாங்க... இவ்ளோ பேரு இருந்துகினு, அதுங்களை அனாதைன்னு எங்கெயோ தள்ளிவுட யோசனை பண்றீங்க... என்னால அதுங்களை அனாதைன்னு சொல்ல முடியலை...
''நா உயிரோட இருக்கச் சொல்ல, அதுங்க எப்புடி அனாதையாகும்... புஷ்பாவும் என்ன மாரி ஒரு பாவப்பட்ட ஜென்மம்... அவ பசங்களை, அனாதையா உட்டுட்டா, சாமி எனக்குதான் தண்டனை குடுக்கும். இனிமே, புஷ்பாவோட புள்ளைங்க, எம் புள்ளைங்க... நானும், எம் புள்ளையும் குடிக்கிற கூழோ, கஞ்சியோ, அதுங்களுக்கும் ஊத்தறேன்...
''செத்து போனவ பாவம், இந்த புள்ளைங்களை படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டா... எம்புள்ளையோட அதுங்களும், ஸ்கூல் போவட்டும்... இந்த ஒடம்புல சக்தி இருக்கற வரைக்கும், அதுங்களை பட்டினி போட மாட்டேன்... ஒங்க வேலையை போய் பாருங்க,'' என்று, இரண்டு குழந்தைகளையும், கையில் பிடித்தபடி, தன் குடிசைக்குள் நுழைந்தது, அந்த, 'லோ கிளாஸ்!'
மாலதி வெங்கட்ராமன்
ஊர்: குடியாத்தம், வேலுார் மாவட்டம், வயது: 78,
நிறைய படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். இவரது படைப்புகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகி உள்ளன. சிறுகதை போட்டியில் பரிசு பெறுவது, இதுவே முதல் முறை. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற துாண்டுதலை, இந்த பரிசு ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.