PUBLISHED ON : நவ 07, 2010

நவாப் ராஜமாணிக்கம் என்பவர், அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாடக நடிகர். சொந்தமாக நாடகக் கம்பெனி வைத்து, தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தார். இவர், ஒருமுறை தன் நாடகத்தைக் கும்பகோணத்தில் நடத்திக் கொண்டிருந்தார். அதே நாட்களில், எம்.ஆர்.ராதாவும் கும்பகோணத்தில் தன் நாடகத்தை நடத்தி வந்தார்.
நவாப் ராஜமாணிக்கத்தினுடையது புராண-பக்தி நாடகங்கள்! ராதாவுடையதோ நாத்திகப் பிரசார நாடகங்கள். நவாப்பின் நாடகங்களுக்குத் தான் நல்ல கூட்டம்; வசூல். ராதாவுக்கு, 'கலெக்ஷன்' சரியில்லை.
ஒரு நாள், நேராக நவாப் ராஜமாணிக்கத்திடம் போனார் ராதா. 'எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பண உதவி வேண்டும்; கொடுங்கள்...' என்று கேட்டார். ராஜமாணிக்கத்திற்குக் கோபம் வந்து விட்டது.
'ஏன்யா... நான் பக்தி நாடகம் போடறேன்... எனக்கு எதிராக நீ நாத்திகப் பிரசார நாடகம் போடறே. அப்புறம் என்னிடமே வந்து பணம் கேட்கிறாயே?' என்று கேட்டார்.
'நான், 'கடவுள் இல்லை'ன்னு சொல்லி நாத்திக நாடகம் போடறதால தான், 'கடவுள் உண்டு'ன்னு சொல்லி பக்தி நாடகம் போடற உங்க நாடகத்துக்கு கூட்டம் வருது. என் மீது இருக்கிற கோபத்திலே, ஆஸ்திகர்கள் உங்க நாடகத்துக்கு வர்றாங்க. நாளைக்கே நான் என் நாடகத்தை வேற ஊருக்கு மாத்திட்டுப் போயிட்டா, அப்புறம் உங்க நாடகத்துக்கு எவனும் வர மாட்டான். அப்புறம், நீங்க ஈ ஓட்ட வேண்டியது தான். இப்ப என்ன சொல்றீங்க? பணம் கொடுக்கறீங்களா அல்லது நாளைக்கே நான் நாடகக் குழுவோட வேறு ஊருக்குப் புறப்படவா?' என்று கேட்டார் ராதா.
கொஞ்சம் யோசித்த நவாப் ராஜமாணிக்கம், பேசாமல் உள்ளே போய், ஒரு பெருந் தொகையைக் கொண்டு வந்து ராதாவிடம் கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
***
'என் பெயரில் வாங்கும் சொத்துக்களைக் கிரயப் பத்திரம் முடித்தே வாங்குவேன். 'ஒத்தி'க்கு வாங்குவது என்றிருந்தால்,
என் தம்பி பெயருக்கே வாங்குவேன்...' என்று, குடும்பத் தலைவர் ஒருவர் கூறுவாராம். அவர் இவ்வாறு கூறியது ஏன்? தாம் கையெழுத்திட்டு வாங்கிய தம்முடைய சொத்துக்களை ஒரு போதும் விடுதலை செய்யக்கூடாது; அவ்விதமான பொல்லாக் காலம் தமக்கு ஏற்படக்கூடாது என்று அவர் எண்ணிய திடமான எண்ணம் தான்.
அவர் தம் ஆயுள் வரை சொத்துக்கள் வாங்கினாரேயொழிய, விற்கவே இல்லை. அவருடைய சொத்தில் அணுவத்தனையேனும் அவருடைய கையை விட்டு நழுவவும் இல்லை. 'நான் இறுதி வரை வள வாழ்வு தான் வாழ்வேன்...' என்று, அவர் கொண்ட உள்ள உறுதியே உனக்கும் ஏற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதலின், நீ எப்போது எண்ணினாலும், நல்ல எண்ணங்களையே, வள வாழ்வு பற்றிய எண்ணங்களையே எண்ணவும் வேண்டும், பேசவும் வேண்டும்.
'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்று நீ கொள்ளும் ஐய எண்ணங்களும், அச்ச எண்ணங்களும் இறைவனின் அருட் கொடைகளை ஐயக் கண் கொண்டு பார்க்குமாறு உன்னைச் செய்து, இறைவனின் வெறுப்பை உனக்கு ஈட்டித் தந்துவிடும்!'
— 'எண்ணமே வாழ்வு' நூலிலிருந்து... ***
