PUBLISHED ON : செப் 02, 2018

நம் கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது பண்டிகைகள். அவற்றை சிறப்பாக கொண்டாட, சில அவசியமான டிப்ஸ்...
* பண்டிகைக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணிகள் மற்றும் மளிகை பொருட்கள் முதலியவற்றை பட்டியல் போட்டு வையுங்கள்; வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ப அவசியமான செலவுகளை செய்யுங்கள்
* வேலைகளை நாமே இழுத்துப் போட்டு செய்வதை விட, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை பங்கேற்க செய்தால், அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் நல்லது
* பண்டிகை வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே, வீட்டை சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்குதல் போன்ற வேலைகளை முடித்து விட்டால், கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம்
* பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன், பட்சணங்கள் செய்ய தேவையான பொருட்களை தயார் செய்துவிட வேண்டும்
* வீடு சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது; நாமும் நல்ல உடையுடன் பளிச்சென இருக்க வேண்டும்
* பூஜை அறையில், கண்ணன் படத்தை அலங்கரித்து வைக்க வேண்டும். குழந்தை கண்ணனின் பிஞ்சு பாதங்களை வாசல் படியிலிருந்து பூஜை அறை வரை கோல மாவில் வரைய வேண்டும்
பலகாரங்கள் செய்யும்போது, எண்ணெய் பொங்கி வழிவதை தவிர்க்க, சில டிப்ஸ்:
* இரண்டு கொய்யா இலைகளையோ, இஞ்சியை தோல் நீக்கி, சிறு துண்டையோ அல்லது புளியை உருட்டி, காயும் எண்ணெயில் போடலாம். எந்தவிதமான பலகாரமாக இருந்தாலும், மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்தால், அதிக எண்ணெய் குடிக்காது
* வாணலியில் மாவை வறுத்து, பலகாரம் செய்தால், மொறு மொறுவென்று இருக்கும்
* தேன்குழல் செய்யும்போது, உருளைக் கிழங்கை வேக வைத்து சேர்த்தால், சுவையும், மொறு மொறுப்பும் கூடும்
* சீடை, முறுக்கு, தட்டை எது செய்தாலும், மாவில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்தால், சுவையும், மணமும் கூடும்.
* சீடை மாவில், உப்பு கரைத்த தண்ணீர் விட்டு பிசைந்தால், சீடை வெடிக்காது; எண்ணெய் ரொம்பவும் காயக்கூடாது
* முறுக்கு செய்யும்போது, கடலை மாவை குறைத்து, பொட்டுக் கடலை மாவை சேர்த்தால், மொறு மொறுப்புடன் இருக்கும்
* பொட்டுக் கடலை பொடியில் இனிப்புகள் செய்தால், சுவையாக இருப்பதுடன், சீக்கிரமும் செய்யலாம். நெய்யும், சர்க்கரையும் குறைவாக சேர்க்கவும்
* பச்சரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, மாவாக்கி, வறுத்து சீடை செய்தால் வெடிக்காது
* முள்ளு முறுக்கு செய்யும்போது, எள்ளுக்கு பதிலாக ஓமம் சேர்த்தால், மணமாக இருக்கும்; ஜீரணமும் ஆகும்
* ஓமப்பொடி செய்யும்போது, ஓமத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, வடிகட்டி மாவில் போட்டு பிசையலாம். ஓமத்தை வறுத்து, பொடித்தும் மாவில் சேர்க்கலாம்
* தட்டு அல்லது தாம்பாளத்தில் வெண்ணெய், துாள் உப்பு இரண்டையும் போட்டு நன்கு குழைத்து, முறுக்கு மாவில் சேர்த்து பிசைந்தால், மாவு நல்ல பதமாக இருக்கும்.
* ரிப்பன் பக்கோடா செய்யும்போது, அரிசி மாவு, கடலை மாவுடன் இரண்டு ஸ்பூன் உளுந்த மாவையும் சேர்த்தால், எண்ணெய் அதிகம் குடிக்காது; கரகரப்பு கூடும்
* கடலை உருண்டை செய்யும்போது, வெல்லப் பாகுடன் சர்க்கரை சிறிது சேர்த்தால், சுவை கூடும்; கரகரவென்று இருக்கும்
* சீடை, முறுக்கு செய்யும்போது, மாவில் சிறிது தேங்காய் பால் கலந்தால், சுவை கூடும்.
