விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகும் டைட்டானிக் நாயகி!
விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகும் டைட்டானிக் நாயகி!
PUBLISHED ON : அக் 14, 2012

'டைட்டானிக்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர், கேத் வின்ஸ்லெட். இவருக்கு, நீண்ட நாட்களாகவே, விண்வெளி பயணத்தின் மீது, தீராத ஆசை இருந்தது. இந்த ஆசை, விரைவில் நிறைவேறவுள்ளது. உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தொழில் அதிபருமான, சர் ரிச்சர்ட் பிரான்சன், என்பவர் தான், இவரது ஆசையை நிறைவேற்றி வைக்கப் போகிறார்.
பிரான்சனுக்கு சொந்தமான, 'விர்ஜின்' நிறுவனம், வரும் 2014ல், விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வங்கி கணக்கில், கோடிக்கணக்கான பணமும், மனதில், அசாத்தியமான தைரியமும் உள்ளவர்கள், இந்த சுற்றுலா பயணத்துக்காக, முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து, கேத் வின்ஸ்லெட்டும் செல்லப் போகிறார்.
கேத் வின்ஸ்லெட்டுக்கு கிடைத்த, இந்த அதிர்ஷ்டத்துக்கு காரணம் யார் தெரியுமா? அவரது லேட்டஸ்ட் காதலர், நெட் ராக்நார்ல். இவரும், ரிச்சர்ட் பிரான்சனும், நெருங்கிய உறவினர்கள். இதனால் தான், கேத்தின் விண்வெளி கனவு, கை கூடியுள்ளது. காதல், எப்படியெல்லாம், எதற்கெல்லாம், உதவுகிறது பாருங்களேன்.
— ஜோல்னா பையன்.
