
முன்கதை சுருக்கம்:
புவனாவை கார்த்திகேயன் காதலிக்கும் விஷயம், ஊர் முழுவதும் பரவி, ஜாதி மக்கள் மாமாவுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். அங்கு செல்லும் ஜோதி, புவனா - கார்த்திகேயனுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்க, அவர்களும் சம்மதிக்கின்றனர். நிம்மதி பெருமூச்சுடன், வீட்டிற்கு கிளம்பினாள், ஜோதி-
''எங்க போயிட்டு வர்ற ஜோதி?'' பொன்னப்பரின் குரல், பெரிதாக ஒலித்தது.
அதைக் கேட்டு, பூவாயியும், செல்லாயியும், கூடத்துக்கு வந்து, துாண் ஓரமாக நின்றனர்.
மாமனின் குரலுக்கு பயப்படவில்லை, ஜோதி. மனதிற்குள் தெளிவாகவும், திடமாகவும் இருந்தாள்.
''ஏரிக்கரை பக்கம் போயிட்டு வந்தேன்.''
''எதுக்காக?''
''சும்மா, மாமா...''
''சும்மா எதுக்காக போவணும்?''
''காலாற ஒரு நடை மாமா.''
''காலாற நடையா... இல்லாட்டி, வாயார பேச்சா?''
''மா... மா...''
''காட்டோரம் நீ, 'மீட்டிங்' போட்டதா சொன்னாங்க.''
''மா... மா...''
''உன் மனசுக்குள்ள பெரிய அரசியல்வாதின்னு நெனைப்பா... உன்னை நீ, ஜெயலலிதான்னு நினைச்சுக்கிட்டிருக்கியா?''
''இல்ல, மாமா... வந்து...''
''சீர்திருத்தமெல்லாம் பேசறியாம்?''
''... ...''
''எம் மவனுக்கு, எங்க, எப்படி, யாரை கட்டி வைக்கணும்ன்னு, எனக்குத் தெரியும். அதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியவன் நானு; நீ இல்ல. தலை இருக்க, வால் ஆடக்கூடாது. புரிஞ்சுக்க...''
''இல்ல, மாமா... சின்ன மாமா ஆசைக்கு, நீங்க குறுக்க நின்னதே இல்லையே...''
''எதுக்கு ஆசைப்படணும், எதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு ஒரு வரைமுறை இருக்குதில்ல.''
''திருமணம், வாழ்க்கை மாமா...''
''அதையேதான் நானும் சொல்றேன். அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு ஆசைப்படறேன். நம்ம வீட்ல ஆடு, மாடு, கோழி, வான் கோழியெல்லாம் கூட இருக்குது. அடிச்சு நாம பிரியாணி வைப்போம். குழம்பு வைப்போம். மணக்க மணக்க பிரியமா சாப்பிடுவோம். அந்த வாசனையே நம்ம நாக்குல எச்சில் ஊற வைக்கும்.
''இதையெல்லாம் அந்த ஐயிரு பொண்ணு தாங்குமா... நம்ம வூட்டுல, 365 நாளும் கவுச்சி வேணும். அமாவாசை, கிருத்திகை, புரட்டாசி, ஆடி, வெள்ளி, செவ்வாய் எதுவும் பாக்குறதில்ல. அது, ஐயிரு வூட்டு பொண்ணு மட்டுமல்ல, கோவில் குருக்கள் வீட்டு பொண்ணு...
''தொட்டதுக்கெல்லாம் நாள், நட்சத்திரம் பாப்பாங்க. சுத்த பத்தமா சாமி கும்பிடுவாங்க... நம்ம வூடுங்களுக்குள்ள வரவே தயங்குவாங்க; நம்மளையும் உள்ள வுட மாட்டாங்க. அப்படிப்பட்ட பொண்ணு, இங்க எப்படி வாழும்... எப்பவும் மூக்கை மூடிக்கிட்டே இருக்குமா?''
''மாமா... இதெல்லாம் அவுங்க பிரச்னை... ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து சமாளிச்சுக்குவாங்க... அதுவுமில்லாம, அந்தப் பொண்ணு இங்க வாழப் போறதில்ல...''
''வந்து போகாம இருக்க முடியுமா... நாலு நாள் தங்காம காலம் போயிருமா... உனக்கு தெரியாது, இதெல்லாம் சொன்னாலும் புரியாது. என் மவனை மாதிரியே நீயும் ஆவேசத்துல பேசற.''
''... ...''
''எதுக்காக ஜாதியெல்லாம் பிரிச்சு வச்சாங்க... பழக்க வழக்கத்துனால தான்... ஒருத்தருக்கொருத்தர் ஒத்துப் போவணுமின்னு தான்... ஒத்துப் போவாததை வீட்டுக்குள்ள சேக்கக் கூடாது. வேலில போற ஓணானை புடிச்சு மடில கட்டிக்கக் கூடாது.''
அவள் வாயடைத்து நின்றாள்.
அவரே மேலும் தொடர்ந்தார்...
''எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்கு தெரியும். எதை செய்யணும், எதை செய்யக் கூடாதுன்னு எனக்கு தெரியும். ஆதியிலிருந்து ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னே சம்பந்தம் பண்ணினவங்க நாம. ஒண்ணா வாழ்ந்தவங்க. அதே மாதிரி தான் இப்பவும் நடக்கணும்!
''என் மவனுக்குன்னு நீதியை மாத்தறவன் இல்ல, நானு. பாதைய திசை திருப்பி விடுறவன் இல்ல. அதனால, கார்த்திக்கு திருமணம்ன்னு ஒண்ணு நடந்துச்சின்னா, அது ஒங்கூடத்தான்! நீ யாருகிட்ட, எங்க போயி, 'மீட்டிங்' போட்டாலும் சரி, பேசினாலும் சரி, நீ தான் என் மருமவ. அதுல எந்த மாத்தமும் கிடையாது. அந்த தேவரே வந்து சொன்னாலும், நா மாற மாட்டேன்.''
''நீங்க மாற மாட்டீங்க, மாமா... ஆனா, நா மாறிட்டேன்... எனக்கு, உங்க மகன் வேணா; வேற ஒருத்திய மனசுல வச்சுக்கிட்டு எங்கூட எப்படி குடும்பம் நடத்துவாரு?''
''இதெல்லாம் ஆம்புளைங்களுக்கு சகஜம் தான்...''
''இருக்கலாம். ஆனா, எனக்கு வேணா... என்னால சகஜம்ன்னு ஏத்துக்க முடியாது.''
''பொலி போட்ருவேன்... என்ன நினைச்சுக்கிட்டு பேசுற?''
''போட்ருங்க, மாமா... நல்லது... செத்துப் போயிடறேன்...''
''பொலி போட்ருவேன்னு சொன்னது, ஒண்ணயில்ல. எம் மவன. அவனால தான இத்தன சங்கடம். மாமான்னு அவனையே சுத்தி வந்த நீ, எத்தினி தைரியமா பேசுற... வேணாங்குற... என்ன நெனைச்சுக் கிட்டிருக்க... என் பேச்சை மீறினா, நா என்ன செய்வேன்னு தெரியுமில்ல உனக்கு?''
''ஐயய்யோ...'' என்று, ஜோதியின் அருகில் ஓடி வந்தாள், பூவாயி.
''எனக்கிருக்கிறது ஒத்த மவன். அம்மா, ஜோதி... அவனக் கொன்னுடாதம்மா... அவன், எனக்கு வேணும்மா... உன்னைக் கெஞ்சி கேட்டுக்கறேம்மா... காலப் புடிச்சு கேட்டுக்கறேன்...''
சடாரென்று சரிந்து, ஜோதியின் கால் பாதங்களில் விழுந்தாள், பூவாயி.
அதை சற்றும் எதிர்பார்க்காத ஜோதி, ''ஐயோ... அத்தை, என்ன காரியம் செய்யுறீங்க... எந்திரிங்க அத்தை...'' என்று பதறி, ஓரடி பின்னால் நகர்ந்து, அத்தையின் தோள்களை பற்றி துாக்க முயன்றாள். ஆனால், அசையவில்லை பூவாயி. அவள் பாதங்களையும் விடவில்லை.
''மாட்டேன்... என் மவனுக்கு உயிர் பிச்சை தரேன்னு நீ சொல்ற வரைக்கும், நா உன் காலை வுட மாட்டேன்.''
''அத்தே...'' என்று, தானும் சரிந்து, பூவாயியின் எதிரில் தரையில் உட்கார்ந்தாள்.
கண்கள் கண்ணீரை பெருக்கின.
''உங்க உப்ப தின்னு, வளர்ந்த ஒடம்பு அத்தை... உங்க குடும்பத்துக்கு துரோகம் செய்யுமா... அதுவும், மாமான்னா எனக்கு உசுரு அத்தை... உசுரே உசுருக்கு துரோகம் செய்யுமா... கெடுதல் நினைக்குமா... எந்திரிங்கத்தை,'' என்று எழுப்பினாள்.
எழுந்து நின்ற பூவாயியின் கண்களை துடைத்து விட்டாள்.
''நீங்க, பெரிய மாமா, சின்ன மாமா மூணு பேருந்தான், என் ஒலகம்... அதனால, உங்க மூணு பேருக்கும் ஒண்ணுன்னா, நா துடிச்சுப் போவேன். எதுவும் வர விடமாட்டேன். எல்லாம் நல்லபடியா முடியும். தைரியமா போங்கத்த...''
''நெசமாத்தா சொல்றியாம்மா?''
''நெசமாத்தான்... சத்தியமாத்தான்... உங்க மேல, மாமா மேல, சின்ன மாமா மேல சத்தியம். என் உசுரக் குடுத்தாச்சும் இந்த குடும்பத்த காப்பாத்துவேனே தவிர, குருவிக் கூட்டை கலைக்கிற மாதிரியான பாவத்த செய்ய மாட்டேன்.''
''உன்ன நம்பி போறேம்மா.''
''தைரியமா போங்கத்தை...''
வாயடைத்து போன பொன்னப்பர், தன் மனைவியையும், ஜோதியையும் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
- தொடரும்.
இந்துமதி