தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 34. எனக்கு, 19 வயதில் காதல் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலையால் நாங்கள் பிரிந்து விட்டோம். அம்மா வீட்டிலிருந்து வேலைக்கு போனேன். என்னுடன் பணிபுரிபவர், 'உன்னையும், பையனையும் நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார். முதலில் மறுத்தேன்.

அதன்பின், 'பையனை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்...' என்று அடிக்கடி பேசி, என் மனதை மாற்றினார். திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. மூன்று ஆண்டுகள் யார் உதவியும் இன்றி, பையனை வளர்த்தேன். அதன்பின், பையனை மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்.

இப்போது, 'நீ, எனக்கு அம்மா இல்லை. எங்க பாட்டி தான் என்னோட அம்மா...' என்று பேசும் அளவுக்கு மாறி விட்டான், சின்ன பையன்.

நானும், பெரிய பையனும் அவனுக்கு வேலைக்காரங்க என்று சொல்லி, எங்களை மரியாதை இல்லாமல் பேசுறான். அவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அதில், நானும், பெரிய பையனும் வேலை செய்யணும். பணம் எதுவும் எங்களுக்கு குடுக்க மாட்டார். பெரியவன் ஆசைப்பட்டு எது கேட்டாலும் வாங்கி தர மாட்டார். அவனை ஒரு வேலைக்காரன் போல் நடத்துகிறார். அவருக்கு எடுபிடி வேலை செய்யவதற்காகவே வைத்துள்ளார்.

நான் ஏதாவது கேட்டால், உடனே சண்டை பிடிக்கிறார்.

என் அம்மாவிடம், 'என்னை கூட்டிக்கிட்டு போயிடுங்கள்...' என்று சொன்னால், 'நாங்கள் குடுத்த, எட்டு சவரன் நகை, ஒரு லட்சம் பணம் எல்லாத்தையும் வாங்கிட்டு வா...' என்கின்றனர்.

அக்கம் பக்கம் இருக்கிறவங்ககிட்ட உதவி கேட்டா, அவர் குணம் தெரிஞ்சு யாரும் உதவ மாட்டேங்கிறாங்க. சின்ன பையன் வீட்டில்தான் குடியிருக்கோம்.

சிறு வயதிலிருந்தே எனக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் உண்டு. இவருடன் வந்ததிலிருந்து கோவிலுக்கு, கடைக்கு எந்த விசேஷத்திற்கும் போகக் கூடாது. மீறி கேட்டால், 'நீ எவன பார்க்க போற...' என்று கேட்பார்.

கடவுள் மேல் ஆணையாக, எனக்கு, அப்படி எந்த பழக்கமும் இல்லை. நல்ல துணி போடக் கூடாது; தலை சீவக் கூடாது; எங்க வீட்டு ஆட்களிடம் பேசக்கூடாதுன்னு நிறைய நிபந்தனை போடுவார். மீறி எங்க சொந்தத்தோட பேசினால், போனில், 'ஸ்பீக்கர்' வைத்து, அவர் முன்புதான் பேசணும்.

எங்காவது போயிடலாம் என்று ஒரு நாள் கிளம்பினேன். 'எவன் கூட ஓடப் போற...' என்று கேட்டு, அடித்தார்.

என்னுடன் வருவதற்கு பெரிய பையன் தயாராக இருக்கான். சின்ன பையன் வர மறுக்கிறான். என்னாலும், பெரிய பையனாலும் அவனை விட்டு செல்ல முடியவில்லை, அம்மா.

இவருக்கு, முதலில் வேறு ஒரு கல்யாணம் நடந்து, ஒரு பெண் குழந்தை இருக்காம். இந்த விஷயம், எனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் தெரியும். அதுபற்றி கேட்டதுக்கு, 'அதை எதுக்கு உனக்கு சொல்லணும்...' என்று கேட்கிறார்.

'என் பணம், நகையை குடுங்க. நான் எங்க அம்மாவிடமே போகிறேன்...' என்றேன்.

'இந்த நகை, பணமெல்லாம் என் கால் துாசி. இது எல்லாம் ஒரு பொருளுன்னு கேப்பியா...' என்று சண்டை பிடிக்கிறார்.

ஒரு நேரம், 'உனக்கும், உன் பையனுக்கும் இதுவரை சாப்பாடு போட்டு, துணி எடுத்து குடுத்ததுக்கு சரியா போச்சு...' என்று திட்டுகிறார்.

பெரிய பையன், கடையில் வேலை செய்துவிட்டு, இரவில் வீட்டில் வந்து அழுகிறான். பையனை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகிறார். யாருடனாவது விளையாடினால் அடிக்கிறார்.

இந்த பிரச்னையிலிருந்து நாங்கள் மீண்டு வர, வழி சொல்லுங்க அம்மா. எனக்கு நல்ல பதில் சொல்லுங்க, அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

முதல் கணவரை சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விட்டதாக எழுதியிருக்கிறாய். சட்டப்படி விவகாரத்து பெற்று விட்டாயா? விவாகரத்து பெற்றிருக்கவில்லை

என்றால், உன்னுடைய இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது மகளே.

மகனின் சுதந்திரம் அதிமுக்கியம் என்றால் கொடுமைக்கார கணவரை பிரிய தயாராகு.

'எட்டு சவரன் நகையும் ஒரு லட்சம் பணமும் முக்கியமா அல்லது உன் மகள் மற்றும் பேரனின் உயிர் முக்கியமா...' என, அம்மாவிடம், 'சென்டிமென்ட்'டாக கேள்வி கேள். 'சென்டிமென்ட்' தாக்குதலில் நிலை குலைந்து போகும் அம்மா, உன்னையும், உன் மகனையும் எற்றுக் கொள்ள தயாராவாள்.

உன்னையும், மகனையும் அழைத்து செல்ல உன் அம்மா வந்தால், அவரை மிரட்டுவார், கணவர்.

அதனால், நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா... நீயும், மகனும் மகளிர் காவல்நிலையம் சென்று, இரண்டாம் கணவர் மீது புகார் கொடுங்கள்.

நகையும், பணமும் கொடுத்து, உங்களை சுதந்திரமாக வாழவிட, இரண்டாம் கணவரை காவல்துறை மூலம் நெருக்கடி கொடு.

'இனி, உன்னையும், மகனையும் தொந்திரவு செய்ய மாட்டேன்...' என, இரண்டாம் கணவரிடம் எழுதி வாங்குங்கள்.

நீ, பிளஸ் 2 படித்திருந்தால் கூட, எதாவது ஒரு கடையில் வேலை பார்க்கலாம். உன் மகனை, படிக்க பள்ளிக்கூடம் அனுப்பு.

உன் இரண்டாவது திருமணம், சட்ட ரீதியானது என்றால், நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறு.

காவல்நிலையம் மூலம் எட்டு சவரன் நகையும், ஒரு லட்சம் பணமும் திரும்ப கிடைத்தது என்றால், நகையை நல்ல விலைக்கு விற்றுவிடு. மூன்று லட்சம் ரூபாய் கிடைக்கும். ரொக்கப்பணத்துடன் சேர்த்து, வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக போடு. மாதம், 2,600 ரூபாய் வட்டி கிடைக்கும்.

அம்மா வீடு, சொந்த வீடு என்றால் வாசலில் ஒரு பெட்டிக்கடை வை. தினம், அதில் குறைந்தது, 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். மகனை நன்றாக படிக்க வை. மீண்டும் ஒரு ஆண் துணை தேடாதே.

ஒரு கோழையாய் கொடுமைக்கார கணவரை அணுகாதே. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டாதே. எதிராளியின் இரு கன்னங்களையும் பழுக்க வை. பெண்கள், ரவுடித்தனம் பண்ணமாட்டார்கள்; பண்ணினால் ஊரே இரண்டு பட்டு போகும்.

இரண்டாம் கணவருக்கு பிறந்த மகனும் உன் கூட வர தயாராய் இருந்தான் என்றால், அவனையும் உன்னுடன் இணைத்துக்கொள். வர மறுத்தால், மூளைச்சலவை செய்து அவனை மாற்று. இரண்டாம் கணவரை, இரண்டு மகன்களும், மனைவியும் இல்லாத தனி மரமாக்கு. வெற்றி உனதே மகளே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us