
முன்கதை சுருக்கம்: குருமூர்த்தி சிவாச்சாரியாரிடம், சாம்பசிவம் என்பவர் போன் செய்த விஷயத்தை குமரேசன் கூற, அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டார். வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வருவதாக சாம்பசிவம் சொல்ல, புவனேஸ்வரி வந்ததும், அன்று, 'லீவ்' போடுமாறு கூறுகிறார். மாலை, 3:00 மணிக்குள் அலுவலகத்தலிருந்து வந்துவிடுவதாக கூறுகிறாள், புவனா -
சிறிது கூட மனம் கலங்கவில்லை, புவனேஸ்வரி. சற்றும் தடுமாறவில்லை. தன்னை மீறி எதுவும் நடந்து விடாது என்கிற அசாதாரணமான தைரியம் ஏற்பட்டது.
'படிக்காத ஒரு பெண், எவ்வளவு தைரியமாய், துணிச்சலாய் நிலமையை சமாளித்திருக்கிறாள். சாதுர்யமாக பேசி கையாண்டிருக்கிறாள். தனியாக கிளம்பி, சென்னை வந்திருக்கிறாள்.
'ஜோதிக்குள்ள அந்த தன்னம்பிக்கையும், தைரியமும், விவேகமும், செயலாற்றும் திறனும், எனக்கும் இருக்க வேண்டும். அதே பக்குவத்தோடு கையாள வேண்டும்.
'பெண் பார்த்து விட்டு போவதால் என்ன குடி முழுகிவிடப் போகிறது?
'அப்பாவை எதிர்த்து போராடி, எத்தனை விஷயங்களில் ஜெயித்திருக்கிறோம். பெரியவளானதும், படிப்பை நிறுத்தியபோது, பள்ளி முடித்து கல்லுாரியில் சேரும்போது, வேலைக்கு போன போது என, எத்தனை முறை போராடி இருக்கிறோம். ஆனால், அவை அனைத்திலும் மற்றவர்களின் உதவி இருந்தது.
'ஆனால், இப்போது, கார்த்திகேயன் விஷயத்திற்கு, அவர்களில் ஒருவரது அங்கீகாரம் கூட கிடைக்காது. அப்பா மட்டுமின்றி அவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது, நான் மட்டுமே போராட வேண்டிய விஷயம். தனியொருவளாக ஜெயிக்க வேண்டிய விஷயம்.
'உணர்ச்சிவசப்படாமல், அவசரப்படாமல், நிதானமாக அணுக வேண்டும். புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். சாமர்த்தியமாக காய் நகர்த்த வேண்டும்.
'செயல்பட்டே ஆகவேண்டும். ஜெயித்தே ஆக வேண்டும். கார்த்திகேயனை அடைந்தே ஆகவேண்டும். அவனின்றி வாழ்க்கை இல்லை. எதிர்காலமில்லை. ஏன், நானே இல்லை. புவனா என்கிற இந்த பெண் இல்லை...' என, திட்டவட்டமான முடிவிற்கு வந்த பின், திடமானாள்; தீர்க்கமானாள்.
இதை எப்படி எதிர்கொள்வதென யோசித்து, விடை தேடினாள்.
'சரி, முதலில் வெள்ளிக்கிழமை வருகிறவர்கள் யார், எப்படிப்பட்டவர் என தெரிந்து கொண்டு, பின்னர் தீர்மானிக்கலாம்...' என, அமைதியானாள்.
புவனேஸ்வரியின் நடவடிக்கைகளிலோ, முக பாவத்திலோ எந்தவொரு மாறுதலையும் காணாத குருமூர்த்தி சிவாச்சாரியார் உற்சாகமானார். சுற்றியிருந்த சொந்த பந்தங்களிடம், பெண் பார்க்க வரப்போகிற வைபவத்தை பற்றி சொல்லலாமா, வேண்டாமா என்று, யோசித்தார்.
''பர்வதம்...'' என்று, மனைவியை அழைத்தார்.
புடவை தலைப்பில் கைகளை துடைத்தபடி வந்த அந்த அம்மாள், மெல்லிய குரலில், ''சொல்லுங்கோ...'' என்றாள்.
''இல்ல... பொண்ணு பார்க்க வர்ற விஷயத்தை மத்தவாளுக்கெல்லாம் சொல்லலாமா, வேண்டாமா?''
''இப்ப எதுக்கு சொல்லணும்... முடிவாகட்டுமே... அப்புறம் சொல்லிக்கலாமே.''
''அதில்லே, அவா பணக்காரா... கார்ல தான் வருவா... வாசல்ல கார் வந்து நின்னா தெரியாம போயிடுமா... மாடியில மன்னி இருக்கா; பெரியவா... சொல்லாம போனா நன்னா இருக்குமா... மன்னிக்கு சொன்னா, பக்கத்துலயே நீலகண்டன்; அடுத்து, பரமேஸ்வரன் - உன் தம்பி, என் தங்கைகள் எல்லாரும் இருக்காளே.''
''நீங்க சொல்றது வாஸ்வதவம் தான். மன்னியை கூப்பிடாமல் இருக்க முடியாது. மச்சினமார்களையும் விட முடியாது. நாத்தனார்களை விட்டா தப்பா போகும்... என் தம்பியும் அப்படித்தான். நாம பாட்டுக்கு வீடு நிறைய மனுஷாளை சேர்த்துட்டு, குதிராம போயிட்டா... என்ன பண்றதுன்னு தான் தயங்கறேன்.''
''அவாளா வேணும்ன்னு தானே தேடிண்டு வந்து கேட்டா... கோவிலுக்கே வந்து பேசினாரே, அந்த மனுஷன்... வேணாம்னா வந்திருப்பாரா... குதிராம போறதுக்கு சந்தர்ப்பமே இல்ல...''
''அப்படின்னா... போய் சொல்லிட்டு வந்துடுங்கோ... இன்னும் ஒரு நாள் தானே இருக்கு.''
''சரி.''
துண்டை உதறி தோள் மீது போட்டு, மாடிப்படி ஏறினார். மன்னியிடம் சொல்லி, வரும்படி அழைத்து விட்டு, தம்பிகளின் வீட்டு படியேறினார். வரிசையாக அத்தனை பேரையும் அழைத்து விட்டார்.
'வெறும் பெண் பார்க்கத்தானேண்ணா வரா. வந்து பார்த்துட்டு போகட்டுமே... அதுக்கு எதுக்கு கூட்டம் சேர்க்கணும். நிச்சயதார்த்தம் வைப்போமில்ல, அன்னிக்கு பார்த்துக்கலாமே?' என, அனைவரும் ஒன்றுபோல் அதையே சொல்ல, அவருக்கும் சரி என்று பட்டது.
வீட்டில் வந்து கூறினார்.
அதை கேட்டதும், பர்வதம்மாளுக்கு ஒருவித நிம்மதி ஏற்பட்டது.
''நான், நாளை சாயந்திரம் சீக்கிரம் ஆபீஸ் விட்டு போகணும்,'' என்றாள் புவனேஸ்வரி.
''ஏன்?'' என்றான், கார்த்திகேயன்.
''என்னை பொண்ணு பார்க்க வராங்களாம்.''
''வர்றதா நான் சொல்லலையே?''
''ஆமா... நீங்க என்னை புதுசா பார்க்க போறீங்களாக்கும்?''
''ஒவ்வொரு நாளும் நீ எனக்கு புதுசு தான். வானம் மாதிரி. நட்சத்திரங்கள் மாதிரி. பூ பூக்குற மாதிரி...''
''கவிதை...'' என்று, சிரித்தாள் அவள்.
''என்னிக்குமே நீ எனக்கு கவிதை தான்... புதுக்கவிதை.''
''ஐயோ... போதும், 'பீ சீரியஸ்!' நாளைக்கு நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும். சந்திக்க முடியாதுன்னு தெரியப்படுத்தத் தான் போன் பண்ணினேன்.''
''நிஜமாவே சொல்றியா புவன்?''
''நிஜமாகத்தான் சொல்றேன்.''
''என்ன புவன்... இப்படி ஒரு குண்டைத் துாக்கிப் போடுற?''
''குண்டுமில்ல, பீரங்கியுமில்ல... அப்பா, அம்மான்னு இருந்தா, திருமண வயசுல பொண்ணு இருந்தா, பொண்ணு பார்க்க வரத்தானே செய்வாங்க?''
''இவ்வளவு சுலபமா சொல்ற?''
''இதுக்கு ஏன், 'டென்ஷன்' ஆகணும் கார்த்தீ... முடிவு நம்ம கைல இல்ல இருக்கு.''
''உனக்கு பயமா இல்லையா?''
''இல்ல.''
''நீ, 'ஸ்டிராங்'கா இருக்கியா?''
''இருக்கேன்.''
''நம்மை மீறி எதுவும் நடக்காதுன்னு நிச்சயமா தெரியுமா?''
''தெரியும்.''
''நாம் என்ன செய்யப் போறோம்?''
''முதல்ல நாளைக்கு வர்றது யாரு, என்னன்னு விபரம் தெரிஞ்சுக்கலாம்; அப்புறம், 'ஆக் ஷன்' எடுக்கலாம்.''
''என்ன ஆக் ஷன்?''
''சஸ்பென்ஸ். நாளை அவுங்க வந்துட்டு போகட்டும். என்ன செய்யலாம்ன்னு முடிவெடுத்துட்டு சொல்றேன். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம். தைரியமா இருங்க. சனிக்கிழமை சந்திப்போம். பை...''
பதில், 'பை' கூட எதிர்பார்க்காமல் கைபேசி துண்டிக்கப்பட்டது.
என்னவோ போல் தான் இருந்தது, கார்த்திகேயனுக்கு. ஆனால், புவனேஸ்வரி மீதிருந்த அபரிமிதமான நம்பிக்கையில் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான்.
— தொடரும்
இந்துமதி