PUBLISHED ON : டிச 13, 2020

முன்கதை சுருக்கம்: தன்னை பெண் பார்க்க வருவதால், நாளை சந்திக்க முடியாது. பயப்படாமல். தைரியமாக இருக்கும்படி, கார்த்திகேயனிடம் கூறிய புவனா, தொலைபேசியை துண்டித்தாள். அவனுக்கு என்னவோ போல் இருந்தாலும், புவனா மீதான அபரிமிதமான நம்பிக்கையில் அமைதியாக இருந்தான்-
எப்போதுமே, அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து கொள்கிற வீடு தான் அது. 4:00 மணிக்கு எழுந்தாலே, குருமூர்த்தி சிவாச்சாரியாருக்கு நேரம் போதாது.
'நேரமாயிடுத்து, பர்வதம்...' என்று, பின் கட்டிற்கு ஓடுவார். கடகடவென்று ஜகடை சத்தம் கேட்க, வாளி வாளியாக கிணற்றிலிருந்து நீர் இறைத்து ஊற்றிக் கொள்வார். அதற்குள் நீண்ட மூங்கில் கொம்பின் நுனியில், அவரது மடி வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் எடுத்து நீட்டுவாள், பர்வதம்.
'என்னப்பா, ஈஸ்வரா...' என்றவாறு அவர், வேஷ்டியை உடுத்தி வருவதற்குள், விபூதி சம்படத்தையும், அரைத்த சந்தனத்தையும் தயாராக்கி வைத்த பின்னரே, சமையலறைக்குள் நுழைவாள், பர்வதம்.
குருமூர்த்திக்கு பாலை காய்ச்சி, சர்க்கரையற்று கொடுத்து, கோவிலுக்கு அனுப்பிய பின்னரே காபி போட ஆரம்பிப்பாள்.
ஆனால், அன்று அவள், குருமூர்த்தி சிவாச்சாரியாரின் சேவையை கவனிக்கவில்லை. கொடியில் காய்ந்து கொண்டிருந்த வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் கொம்போடு எடுத்து போய் கிணற்றடியில் வைத்தவள், ''இன்னிக்கு நீங்களே உங்களை பார்த்துக்கோங்கோ... எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு,'' என்றாள்.
''இன்னிக்கென்ன விசேஷம்?'' என்றார், சிவாச்சாரியார்.
''நன்னா இருக்கு போங்கோ... மறந்துட்டேளா... இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லையா?''
''ஆமாம். அதான் இன்னிக்கு கோவிலுக்கு கிளம்பிண்டிருக்கேனே.''
''அதில்லே... இன்னிக்குதானே, புவனாவை பொண்ணு பார்க்க வர்றா?''
''ஆமாம்... மறந்தே போய் விட்டேன்.''
''இதே மாதிரி மறந்து, சாயங்காலம் கோவிலுக்கு கிளம்பிடாதீங்கோ... கண்ணப்பனை, கோவிலை பார்த்துக்க சொல்லிட்டு வந்துடுங்கோ.''
''சரி.''
''அதே மாதிரி, புவனாகிட்டேயும் சொல்லிடுங்கோ.''
''என்னன்னு?''
''இன்னிக்கு ஆபீசுக்கு போக வேணாம்ன்னு.''
அவர் சொன்னதும், மறுத்தாள், புவனா.
''ஏம்ப்பா... சாயங்காலம்தானே அவா வரப்போறா... நான், 'பர்மிஷன்' வாங்கிண்டு, 3:00 மணிக்கெல்லாம் வந்துடறேன்.''
''இன்னிக்கு கூட என்னடீ ஆபீஸ்... ஒருநாள் கூட, 'லீவு' போட முடியாதா என்ன?'' என்றுமில்லாமல் பர்வதத்துக்கு கோபம் எட்டிப் பார்த்தது.
''வீணா எதுக்கும்மா, 'லீவு' போடணும். நான் தான், 3:00 மணிக்கெல்லாம் வர்றேன் இல்ல?''
''அவா, 3:00 மணிக்கு வந்துட்டா?'' மனைவியை பார்த்தார், குருமூர்த்தி.
''என்ன பார்க்கறேள்... சொல்லுங்கோ... அவா வர்ற நேரத்துக்கு இவளும் வந்தா நன்னாவா இருக்கும்?''
''சரிம்மா... 1:00 மணிக்கெல்லாம் வந்துடறேன். போறுமா?'' என்று முற்றுப்புள்ளி வைத்தாள், புவனா.
டிபன் பாக்ஸ், கைப்பை இரண்டுமில்லாமல் மொபைல் போனை மட்டும் எடுத்து, அலுவலகம் புறப்பட்டாள். என்றுமில்லாமல் வாயில் வரை வந்த பர்வதம், ''மறந்துடாதே... 1:00 மணிக்கெல்லாம் வந்துடு,'' என்றாள்.
''சரிம்மா,'' என்று தலையாட்டிய புவனா, அலுவலகம் வந்து, தன் கேபினுக்குள் நுழைந்ததும், கார்த்திகேயனை அழைத்தாள்.
''குட்மார்னிங்.'' கார்த்திகேயன் மணி பார்த்தான். காலை, 9:10. வழக்கமாக, 11:00 மணிக்கு மேல் தான் கூப்பிடுவாள்.
''இன்று என்ன இவ்வளவு சீக்கிரம்?''
''இன்னிக்கு காலைல, 4:00 மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்கு, ரவி வந்தார்.''
''ரவியா... எந்த ரவி?''
''கண்டுபிடிங்க பார்க்கலாம்?''
நினைவுகளில் தேடினான். ஊஹூம். ரவி என்ற பெயரில் யாருமில்லை. ஒருவேளை அவளுடைய நண்பனாகவோ, அலுவலகத்தில் யாரும் இருக்கலாமோ என்று பார்த்தான். அதுவும் இல்லை.
''இல்லை. முடியல.''
''மக்கு... மக்கு... ரவின்னா சூரியன்.''
''காலைல, 4:00 மணிக்கு சூரியனா?''
''இன்னும் புரியல இல்ல... எங்கம்மா எல்லாரையும் எழுப்பி விட்டுட்டாங்க.''
''எதுக்கு?''
''இன்னிக்கு வெள்ளிக்கிழமை. அதனால...''
''ஐயோ, கொஞ்சம் விளக்கமா சொல்லிடேன்.''
''இன்னிக்கு சாயந்திரம் என்னை பொண்ணு பார்க்க வர்றாங்கள்ல?''
''புவனா... ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தானே... இதுக்கென்ன அதிர்ச்சி... எப்படி இவ்வளவு தைரியமா இருக்க?''
''ஜோதிகிட்டயிருந்து ஒட்டிக்கிட்ட தைரியம்.''
''சமாளிச்சுடுவியா?''
''முடியாதா?''
''நம்பறியா?''
''நம்பிக்கை தான் வாழ்க்கை.''
''சரி, புவன். நான் உன்னை நம்பறேன்.''
''இன்னிக்கு மதியம், 1:00 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுவேன். நாளை காலை கூப்பிடறேன்.''
''நாளைக்கு சந்திக்கிறோமா?''
''கட்டாயம் சந்திக்கிறோம். சந்திச்சே ஆகணும்.''
''எங்கே?''
''நாளைக்கு முடிவு பண்ணலாம்.''
வீடு எளிமையாக அலங்கரிக்கப்பட்டது. முற்றத்தில் இருந்த அண்டா, குண்டானெல்லாம் மறைந்திருந்தது. வாசலில் பெரிதாக மாக்கோலம் போடப்பட்டிருந்தது. எப்போதுமே கூடத்து மூலையில் வைக்கப்பட்டிருக்கும் சுருட்டப்பட்ட பாய்களும், தலையணைகளும் காணாமல் போயிருந்தன.
ஓரங்களில் இழை கோலம் போடப்பட்டிருந்தது. அது மறையாமல் நடுவில் கோடு போட்ட ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. சுவர் ஓரமாக நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வந்திருந்தன. சுவாமி அறையில் குத்து விளக்குகள் எரிந்தன.
சமையல் கட்டிலிருந்து, 'ஜிர் ஜிர்' என்று பஜ்ஜிகள், வாணலி எண்ணெயில் மிதந்தன. ஒரு பேஸின் நிறைய, ரவா கேசரி; ஆரஞ்சு வர்ணத்தில் வறுத்த முந்திரிகளாலும், காய்ந்த திராட்சைகளாலும் நிரம்பின. வியர்த்து கொட்டிக் கொண்டிருந்தாள், பர்வதம்.
மாடியிலிருந்து இறங்கி வந்த பெரியம்மா, ''நீ நகரு, பர்வதம். மீதி அடுப்பை நான் பார்த்துக்கறேன். நீ போய் மூஞ்சியலம்பி, நெற்றிக்கு இட்டுண்டு, புடவை மாத்திக்கோ,'' என்றாள்.
அடுக்களையை விட்டு பர்வதம் நகர போனபோது, ''புவனா தயாராயிட்டாளா?'' என்றாள்.
''இதோ பார்க்கறேன் மன்னி...''
அறையினுள் நுழைந்தபோது, மிக சாதாரண புடவை மற்றும் அலங்காரத்தில், புவனா இருப்பதை கவனித்தாள்.
''என்ன புவனா இது... இந்த புடவையில் இருக்க... பட்டுப் புடவை கட்டிக்கோ.''
''வேண்டாம்மா... கசகசன்னு வேர்த்துக் கொட்டும். இது போறும்மா.''
''சொன்னா கேளு... அம்பாள் புடவை எத்தனை இருக்கு வீட்ல... தீபாவளிக்கு வாங்கின பட்டு வேற இருக்கு... பளீச்ன்னு ஒண்ணை எடுத்து கட்டிக்கோ... கழுத்துக்கு நெக்லஸ் போட்டுக்கோ... காதுல ஜிமிக்கி தொங்கணும்... அப்பா, செண்டு பூ எடுத்து வந்திருக்கார். தலை நிறைய பூ வச்சுக்கோ.''
''அம்மா... நான் இப்படியே இருக்கேம்மா.''
''கூடாது... இப்ப நீ இருக்கிறது, ஆபீஸ் போறதுக்கு சரி. பொண்ணு பார்க்க வர்றதுக்கு இல்ல... அப்பாவை கூப்பிடட்டுமா?''
''வேணாம்... நீ சொன்ன மாதிரி, 'டிரஸ்' பண்ணிக்கறேன். நீ கொஞ்சம் குமரேசனை உள்ள அனுப்பிட்டு போ.''
''குமரேசன் எதுக்குடீ... தங்கைகள்ல ஒருத்திய வரச்சொல்றேன்.''
''வேணாம்... குமரேசனையே அனுப்பு.''
''சரி. நீ சீக்கிரம் தயாராகு.''
அவள் தயாராகி முடிப்பதற்கும், கதவை தட்டி குமரேசன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
''கூப்ட்டியாக்கா?''
''ஆமாண்டா.''
''உன்னால எனக்கொரு உதவி ஆகணும்.''
''என்னக்கா?''
''செய்யறேன்னு சொல்லு, அதுக்கப்புறம் சொல்றேன்.''
''நீ கேட்டு செய்யாமல் இருப்பேனாக்கா?''
''யாருக்கும் தெரியாமல், மாப்பிள்ளையோட மொபைல் நம்பர் வாங்கித் தா.''
''சரிக்கா,'' உற்சாகமாக புன்னகைத்தான், குமரேசன்.
— தொடரும்
இந்துமதி