PUBLISHED ON : அக் 04, 2020

முன்கதை சுருக்கம்: குருமூர்த்தி சிவச்சாரியரின் மகள் புவனேஸ்வரியை, தன் மகன் ராஜாராமனுடன் பெண் பார்க்க வருவதாக, சாம்பசிவம் கூறுகிறார். இதற்கிடையில், கார்த்திகேயன் என்பவனை காதலித்தாள், புவனேஸ்வரி.
வாசலுக்கும், உள்ளுக்குமாக அலைந்தான், ராஜாராமன். அக்கிரஹாரத்தின் இந்த கோடிக்கும், அந்த கோடிக்குமாக நீண்டிருந்த இரண்டு கட்டு வீடு, அது. முன்னால் ஓலை வேய்ந்த தாழ்வாரம். அதற்கடுத்து ஊஞ்சல். இரு பக்கங்களிலும், 10 - 10 பேர் படுக்கிற அளவிற்கு விசாலமான திண்ணைகள். இரு திண்ணைகளின் ஓரங்களிலும் சார்மனைகள்.
சுவரில், மாலையில் அகல் விளக்கு வைக்கும் பிறைகள். பலமான ஒற்றை கதவு. உள்ளே நுழைந்தால் ரேழி. பெரிய பெரிய நெற்குதிர்கள். எதிரில், ௮க்கு ௬ என்ற கணக்கில், ஒரு சின்ன அறை. அதன் கதவு, நாதங்கியால் பூட்டப்பட்டிருந்தது. ரேழியை கடந்ததும், கல்யாண கூடம். மிகப்பெரிய கூடம். கிட்டத்தட்ட, 20 துாண்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன.
கல்யாண கூடத்தைக் கடந்தால், சாப்பாட்டு அறை, அதை ஒட்டிய சமையலறை. அதனுள் இருந்த உக்கிரமான அறை. பின்னால் முற்றம். முற்றத்தின் நடுவில் பெரிதாய் கழுநீர் தொட்டி. இடப்பக்கம் குளியலறை. பெரிய விறகடுப்பின் மீது, இரண்டு ஆட்கள் இருந்தால் மட்டுமே துாக்க முடிந்த குண்டு தவலை. தோட்டமும், கிணறும், மரங்களும், பூச்செடிகளுமாக கத்தரி வெய்யிலுக்கு கூட சிலுசிலுவென்றிருக்கும்.
கழுநீர் தொட்டியையும், முற்றத்தையும் தாண்டிப் போனால், கீழண்ட வாசல் என, ஒரு மிராசுதாரின் பண்ணை வீடாக காணப்பட்டது. ராஜாராமனின் பரம்பரையே பணக்கார குடும்பம். ஜமீன் குடும்பம். தாத்தாவுக்கும் தாத்தா பல்லக்கில் போனாராம். தாத்தா, குதிரை மீதுதான் போவாராம்.
ராஜாராமனுக்கும், அவனது அப்பாவிற்கும் தனித்தனி கார்கள் இருந்தன. பெண்களின் வசதிக்காக, வீட்டு வாசலில், 'இனோவா' வண்டி ஒன்று எப்போதும் நின்றிருக்கும். மூன்று கார்களுக்கும் தனித்தனி டிரைவர்கள் இருந்தனர். வீடு நிறைய கழனியில் வேலை செய்பவர்களும், அரிசி புடைப்பவர்களும், நெல் குத்துபவர்களுமாக நிறைந்திருந்தனர்.
உற்றமும், சுற்றமுமாக வேளைக்கு, 50 பேர் சாப்பிட்டனர். தவிர, மணியக்காரர், கணக்குப்பிள்ளை, தாசில்தார், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என, வருவோர் போவோர் வேறு. அத்தனை பேருக்கும் காபி, மோர் என, பெரிய பெரிய வெள்ளி டம்ளர்களில் தான் வழங்குவர்.
குறையற்ற வாழ்க்கை, ராஜாராமனுடையது. ஒரே பையன் ஆனதால், அவனது அனைத்து விருப்பங்களும் நிறைவேறின. குறை இருக்க கூடாது என்று, பார்த்து பார்த்து செய்வார், சாம்பசிவம். அப்போதும், அவனது விருப்பத்தின்படி தான் சென்னை சென்றிருந்தார். அவர் போன காரியம், காயா - பழமா என்று தெரிந்து கொள்வதற்காகவே, வாசலுக்கும் உள்ளுக்குமாக நடையாக நடந்தான், ராஜாராமன்.
'ம்மா...' என்று, ஒவ்வொரு பசுவாக மாறி மாறி குரல் கொடுப்பதை கேட்ட, ராஜாராமனின் அம்மா ராஜம்மாள், சமையல் அறையை விட்டு வெளியே வந்தாள். மாட்டுக்கார செல்லனை கூப்பிட்டு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டச் சொன்னாள். சமையல்கட்டுக்கு திரும்ப இருந்தவள், ராஜாராமனை பார்த்து, ''என்னடா ராஜாராமா, இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி அலையற?''
''அப்பா வராறான்னு பார்க்கறேன்ம்மா.''
''அப்பா, மெட்ராசுக்குல்ல போயிருக்காரு.''
''தெரியும்மா... நான்தானே அனுப்பி வெச்சேன்.''
''நீ அனுப்பி வெச்சியா... எதுக்குடா... அப்பா, என்கிட்ட சொல்லவே இல்லையே.''
''காரியத்தை நல்லபடியா முடிச்சுட்டு, சொல்லலாம்ன்னு இருந்திருப்பாரும்மா.''
''என்ன காரியம்டா,'' குழப்பமாய் பார்த்தாள், அந்த அம்மாள்.
''எல்லாம் நல்ல காரியம் தான்ம்மா.''
''அதுதான் என்ன... எனக்கு தெரியாமல், என்கிட்ட சொல்லாமல் அப்பாவும், பிள்ளையும் என்ன பண்றீங்க?''
''உன்கிட்ட சொல்லாமல் முடியுமாம்மா, நடக்குமா... அதுவும் கல்யாண காரியம்னால் தெரியாமல் போகுமா?''
''கல்யாண காரியமா... யாருக்குடா?''
சற்று தயங்கி, ''எனக்குத்தாம்மா,'' என்றான்.
''என்னடா சொல்றே?''
''அன்னிக்கே சொன்னேனேம்மா... சென்னை, மயிலாப்பூர் கோவில்ல, ஒரு அழகான பெண்ணை பார்த்தேன்னு.''
''ஆமாம்.''
''அந்த பொண்ணு, யாரு, என்னன்னு விசாரிச்சு வந்து அப்பாகிட்ட சொன்னேன். பொண்ணு கேட்க போயிருக்காரு, அப்பா.''
''என்னடா இது... இத்தனை பெரிய விஷயத்தை, என்கிட்ட சொல்லாம... பொண்ணு யாருடா?''
''சென்னை, மயிலாப்பூர்ல கைலாசநாதர் கோவில்ல கைங்கர்யம். பேரு, குருமூர்த்தி சிவாச்சாரியார். அவரோட மூத்த பொண்ணை தான், நான் பார்த்தேன். அப்பேர்ப்பட்ட லட்சணம்மா. வெறும் லட்சணம் மட்டுமில்லை. லஷ்மியோட சரஸ்வதி சேர்ந்த உருவம்.
''எம்.எஸ்சி., படிச்சிருக்காம்மா. பெரிய வேலையில் இருக்கா. முதல்வர் கையால் விருதெல்லாம் வாங்கியிருக்கா. இத்தனை இருந்தாலும், குடும்பப் பாங்கும்மா. நீ பார்த்தேன்னு வச்சுக்கேயேன், உடனே, கையை பிடிச்சு வீட்டுக்கும் கூட்டிட்டே வந்துடுவ. அவளுடைய அப்பாவை பார்த்து பேச சொல்லித்தான் அனுப்பியிருக்கேன்.''
''இத்தனை நடந்திருக்கு, என்கிட்ட மூச்சு விடலையே அந்த பிராமணன்.''
''நான்தாம்மா சொல்ல வேண்டாம்னேன். நல்ல பதில் வரட்டும், தெரியப்படுத்தலாம்னேன்.''
''நல்ல பதில் வராம வேற என்னடா வரும். பேருக்கேத்த மாதிரி நீ ராஜாடா... ஏகப்பட்ட சொத்து, ஒரே பையன். பெண்ணை கொடுக்க கசக்கவா செய்யும்?''
''இல்லம்மா... உன் பிள்ளை உனக்கு ஒசத்தி. அவங்க பொண்ணு அவங்களுக்கு ஒசத்திதானேம்மா?''
''அப்படியே இருந்தாலும், இது, பழம் நழுவி பாலில் விழும் கதைதானேடா.''
''முதலில் பழம் நழுவட்டும். அப்புறம் பாலில் விழட்டும். அப்பா வந்து சொன்ன பிறகு தான் என் மனசுக்கு நிம்மதி வரும்.''
சொல்லி முடிப்பதற்குள், வாசலில் சாம்பசிவத்தின், கார் ஹாரன் ஓசை கேட்டது.
''அப்பா வந்தாச்சும்மா,'' பரபரத்தான்.
''நீ போடா. நான் குடிக்க ஜலம் கொண்டு வரேன்.''
உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தார், சாம்பசிவம்.
'என்னப்பா ஈஸ்வரா...' என்று கை கூப்பினார்.
அதற்குள், சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள், ராஜம்மாள்.
சொம்போடு வாங்கி மடமடவென்று குடித்து, சொம்பை ராஜம்மாளிடமே திருப்பி தந்தார். பின்னர், ராஜாராமனை ஏறிட்டார்.
அந்த கால அவகாசத்தை கூட பொறுக்காத ராஜாராமன், அவரை பார்த்து, ''போன காரியம் என்ன ஆச்சுப்பா?'' என்றான்.
''நம்ம சண்டிகேஸ்வரரும், சண்டிகேஸ்வரியும், நம்மை எப்போடா கைவிட்டிருக்கா... அவாளை நமஸ்கரிச்சு வேண்டிண்டு போனா, நடக்காம போயிடுமாடா?''
ராஜாராமனின் முகம் மலர்ந்தது.
''அப்போ, 'சக்சஸ்'ன்னு சொல்றீங்க?''
''ஆமாம், ௧௦௦ சதவீதம், 'சக்சஸ்'டா.''
''உங்களுக்கு ஏம்ப்பா அனுமாரோட முன்யோசனை வரல?''
''என்னடா சொல்ற?''
''கண்டேன் சீதையைன்னு சொல்லத் தெரியலையேப்பா... காரை விட்டு இறங்கும்போதே, 'சக்சஸ்'ன்னு சொல்லியிருக்க வேண்டாமோ?''
''இந்த சின்ன தாமசத்தை கூட உன்னால் தாங்க முடியல. மோகம் அந்த அளவுக்கு முத்திப் போயிருக்கு.''
''போங்கப்பா,'' என்று, தலை கவிழ்ந்தான்.
''நீ ஏண்டா தலை குனிஞ்சுக்கற... உங்கப்பா மட்டும் என்னவாம், என்னை பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாலயே...''
''போறும் ராஜம்... ஆரம்பிச்சுடாதே, அந்த பொண்ணோட தோப்பனாரை பார்த்தாலே போறும்டா, உடனே கையெடுத்து கும்பிடத் தோணும். அப்பேர்ப்பட்ட தெய்வ பக்தி. விஷயத்தை சொன்னதும், உருகிப் போயிட்டார். எல்லாம் ஈஸ்வர அனுக்கிரகம்ன்னு மெய்மறந்து சொன்னார்.''
''சரிப்பா... நீங்க என்ன சொல்லிட்டு வந்தீங்க?''
''நல்ல நாள் பார்த்து, பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன்.''
''பஞ்சாங்கம் கொண்டு வரட்டுமாப்பா?''
''அவசரத்தைப் பாரு... விட்டா, இப்பவே போய் உன் பையன் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி கூட்டிண்டு வந்துடுவான் போல இருக்கு, ராஜம்.''
''அப்பாவை போல தானே பையனும் இருப்பான்.''
''சந்தடி சாக்குல வாழைப் பழத்துல ஊசியா,'' என்றவர், ராஜாராமனை பஞ்சாங்கம் எடுத்து வரச் சொன்னார்.
பக்கங்களை புரட்டி, விரல்களை விட்டு கணக்கு போட்டு, ''வர்ற வெள்ளிக்கிழமை, நாள் ரொம்ப நன்றாக இருக்கு. ராகு காலம் முடிந்து கிளம்பினால், 4:00 மணிக்கெல்லாம் அவர்கள் வீட்டில் இருக்கலாம்... என்ன சொல்ற ராஜம்?''
''அப்படியே செய்யுங்கோ.''
''என்னடா ராஜாராமா?''
''சரிப்பா.''
''வர்ற வெள்ளிக்கிழமைக்கு இன்னும் நாலஞ்சு நாள் இருக்கேன்னு பார்க்கறியா?''
''போங்கப்பா,'' என்று வெட்கப்பட்டு உள்ளே போனாலும், அவன் மனது வெள்ளிக் கிழமைக்காக ஏங்க ஆரம்பித்தது.
— தொடரும்
இந்துமதி
