PUBLISHED ON : மார் 12, 2017

'வாட் யூ வான்ட்...'' வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்காமல், அவள் அணிந்திருந்த உடை மற்றும் அலங்காரத்தை கண்டு மிரண்டு விட்டான், கார்த்திகேயன். பதிலை, ஆங்கிலத்தில் சொல்ல, மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து யோசித்தான். மறுபடி, அவள் அக்கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, ''இன்டர்வியூவுக்கு கூப்பிட்டிருக்காங்க,'' என்று, தமிழிலேயே சொன்னான்.
''இடப்பக்கமாய் போய், வலது புறம் உள்ள அறையில் உட்காருங்க,'' என்றாள், ஆங்கிலத்தில்!
அவள் உச்சரித்த அழகை ரசித்தவன், ''தேங்க்யூ,'' என, சொல்லி, அவள் சொன்ன இடத்திற்கு சென்றான்.
அங்கு இவனைப் போல, ஆண்களும், பெண்களுமாக, பத்திருபது பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளும், அமர்ந்திருந்த தோரணையும் அவன் மனதுக்குள், தாழ்வு உணர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்களும், இவன் வந்ததை கண்டு, சந்தோஷப்பட்டதாக தெரியவில்லை. நட்புக்கு கூட புன்னகை சிந்தவில்லை. மெல்ல, பக்கத்திலிருந்த, 'குஷன்' நாற்காலியில் உட்கார்ந்தவன், குனிந்து, தன் உடையை பார்த்தான்.
தங்கையிடம் கெஞ்சி கூத்தாடி, அவள் தேய்த்து தந்த உடையைத் தான் அணிந்திருந்தான். ஆனாலும், அது அவர்களுக்கு மத்தியில் பொவிழந்து தெரிந்தது. அவனுக்கு தன் பெற்றோர் நினைவு வந்தது...
சான்றிதழ்களையும், தங்கை தேய்த்து தந்த ஒரு செட் உடையை எடுத்து பையிற்குள் வைத்து, பேருந்து நிலையத்திற்கு போகும் வழியில், டீக்கடை வைத்திருக்கும் அப்பா, அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று வந்தான்.
இரண்டு பக்க குவளைகளை, உயர தூக்கி பிடித்து, டீ விளாவிக் கொண்டிருந்த அப்பா, இவன் வருவதை பார்த்து, ''வாடா...'' என்றதோடு சரி. தன்னுடைய வேலையில், கண்ணும், கருத்துமாக இருந்தார். சிறிது தள்ளி, கண்ணில் நீர் வழிய, வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தாள், அம்மா.
இவனை பார்த்ததும், வழியும் கண்ணீரை முந்தானையில் துடைத்து, ''அப்படியே பையனுக்கு டீயை போடுய்யா...'' என்று சொல்லி, ''கார்த்தி... அஞ்சு நிமிஷம் இருடா... வெங்காய பஜ்ஜி ரெடியாயிடும்; சாப்பிட்டு போ...'' என்றாள்.
''வேணாம்மா, எனக்கு நேரமாகுது,'' என்று சொன்னாலும், அதற்குள், அப்பா கொண்டு வந்து கொடுத்த டீயை, ஊதி குடிக்க ஆரம்பித்தான். குடித்து முடிக்கும் வரை, மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த அம்மா, டம்ளரை கீழே வைத்தவுடன், தன் சுருக்குப்பையை அவிழ்த்து, சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டவனுக்கு, 'சே... எத்தனை முறை, அம்மாவிடம் பணம் வாங்கிட்டோம்... இன்னும் ஒரு வேலை கிடைத்தபாடில்லயே...' என்று வருத்தம் ஏற்பட்டது.
'தன் மகனை, எப்பாடு பட்டும் பட்டப் படிப்பு படிக்க வைத்து விடணும்...' என்ற இவர்களின் வைராக்கியத்திற்காகவே தான் படித்தான். எப்படியோ, பி.ஏ., பட்டத்தை வாங்கி விட்டான். வெளியே வந்த பின் தான் தெரிந்தது, இந்த படிப்பு, பத்து பைசாவிற்கு மதிப்பு இல்லை என்பது.
எப்படியும் வேலையில் உட்கார்ந்து விட வேண்டும் என்று, விடாமல் வேலைக்கு விண்ணப்பங்களை அனுப்புவான். அங்கு போன பின் தான் தெரியும்... நேர்முக தேர்விற்கு வந்திருப்போரில் தன்னுடைய தகுதி, மிக மிக சாதாரணம் என்று!
ஒவ்வொரு முறையும் இன்டர்வியூவிற்கு அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல, 50 ரூபாயாவது தேவைப்படும். இப்போது, கோயம்புத்தூருக்கு வர, இவன் ஊரிலிருந்து பொள்ளாச்சி வந்து, அங்கிருந்து கோவைக்கு வரவேண்டியிருந்தது. இன்டர்வியூ, காலை, 9:00 மணி என்று போட்டிருந்ததால், நேற்று இரவே கோயம்புத்தூர் வந்து, வசதி குறைவான லாட்ஜில் தங்கி, காலையில், தங்கை தேய்த்து கொடுத்த அந்த ஒரு, 'செட்' உடையை போட்டு வந்திருந்தான்.
அதை போட்டுக்கொள்ளும் போது, நாகரிகமானவனாகத் தான், அவனுக்கு தோன்றியது. ஆனால், இங்கு வந்த பின், மற்றவர்கள் போட்டிருந்த உடைகளை பார்த்த போது, தான் அணிந்திப்பது, கம்பெனி கீழ் மட்ட ஊழியர்கள் போடுவதை விட, தாழ்வாக இருப்பதாக, மனதுக்கு பட்டது.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு, அங்கு உட்கார்ந்திருந்த அனைவரும் பரபரப்பாயினர். பெண்கள், தங்களுடைய ஒப்பனைகளை சரி செய்தனர். ஆண்கள், எங்காவது மடிப்பு கலைந்து போயுள்ளதா என்று உடைகளை, பார்த்துக் கொண்டனர்.
இவர்களின் பரபரப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல், வெளியே வந்த ஆபீஸ் பையன், 'கம்பெனி தான் பெரிசு... டீ வாங்கறதுன்னாலும், வெளியே போய் தான் வாங்க வேண்டியிருக்கு...' என்று, தனக்குள் முணங்கியபடி சென்றான். அங்கு உட்கார்ந்திருந்தோர், அவனை ஒரு வித அசூயையுடன் பார்த்தனர்.
ஆனால், கார்த்திகேயன் மட்டும் அதை உன்னிப்பாக கவனித்தான். அவ்வார்த்தை, அவன் மனதை அசைக்க, இப்போது, தன் மனம் லேசாக இருப்பதாக உணர்ந்தான். அவனது பார்வை, அங்குள்ளவர்கள் மீது படிந்தது. சற்று முன் இருந்த தாழ்வு மனப்பான்மை குறைந்தது போல் இருந்தது.
இன்டர்வியூ, விறுவிறுப்பாய் நடந்தது. ஒவ்வொருவரும் உள்ளே சென்று, வெளியே வர, வெளியிலிருப்போர், அவர்கள் முகத்தை பார்த்து, பரபரப்பாயினர். கடைசி ஆளாக அழைக்கப்பட்டான், கார்த்திகேயன்.
உள்ளே வந்தவன், தன் சான்றிதழ்களை வாங்கி பார்த்த மேனேஜரையும் அங்கு உட்கார்ந்திருந்த மூவரையும், உன்னிப்பாக கவனித்தான். வேறு எதுவும் சிறப்பு தகுதிகள் இல்லாத இவன் சான்றிதழ்களை, சம்பிரதாயமாக பார்த்த மேனேஜர், அதை அவனிடமே திருப்பிக் கொடுத்து, ''நாங்க பதில் போடுறோம்,'' என்று, வழக்கமான பதிலை சொன்னார்.
சட்டென்று, ''நான் வேலைக்காக, இப்ப உங்க முன் நிக்கல,'' என்றவனை, நால்வரும், ஏறிட்டு பார்த்தனர்.
''சார்... முதல்ல, நான் இங்க வேலைகாகத் தான் வந்தேன். வெளியில காத்திருந்த போது, ஆபீஸ் பாய், 'ஒரு டீ வாங்கணும்ன்னாக் கூட, வெளியில போய் வாங்க வேண்டியிருக்கு'ன்னு சொன்னதை கேட்டேன்.
''நான், நாளையில இருந்து, காலை, மதியம், மாலை என, உங்க ஆபிசுக்கு, டீ கொண்டு வந்து கொடுக்கறேன்; இதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க,'' என்றான். அவர்களுக்கு ஆச்சரியமாகி விட்டது. இதுவரை, இப்படி ஒரு கோரிக்கை வைத்து, எந்த இளைஞனும் வந்ததில்லை. ''சரிப்பா, எப்படி கொண்டு வருவே... டீ கொண்டு வர்றதுக்கு பொருட்கள் வேணாமா...'' என்று கேட்டார் மேனேஜர்.
''சார்... அதெல்லாம் என் கவலை; முதல்ல நீங்க அனுமதி கொடுங்க,'' என்றான்.
தங்களுக்குள் பேசிக் கொண்டவர்கள், 'நீ, எப்படி இதை செய்றேன்னு பாத்துட்டு சொல்றோம்...' என்றனர்.
வெளியே வந்த கார்த்திகேயன், தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்து, அருகில், எங்கு பேக்கரி இருக்கிறது என தேடினான். அரை கி.மீ., தள்ளி, ஒரு பேக்கரி இருப்பது தெரிந்து; அங்கு போனான்.
பேக்கரி முதலாளியிடம், தன்னை, டீ கடைக்காரரின் மகன் என்று அறிமுகப்படுத்தியவன், நடந்த விஷயங்களை எல்லாம் கூறி, உங்கள் கடையிலிருந்தே, நான் டீ கொண்டு போக விரும்புகிறேன் என்று சொன்னான். அவர்களும் ஒத்துக் கொள்ள, மாலையில், அந்த அலுவலகத்தில் பணி புரிந்த, 15 பேருக்கும் டீ, அவர்கள் மேஜைக்கே வந்தது; ரிசப்ஷனில் இருந்த பெண்ணுக்கும், இவனே கொண்டு போய் கொடுத்தான்.
அவனுடைய சுறுசுறுப்பு மற்றும் எண்ணத்தை பாராட்டி, தன் சொந்த பணத்திலிருந்து, 1,000 ரூபாய் கொடுத்து, ''உன் தொழிலை துவங்கு,'' என்றார், மேனேஜர்.
நான்கைந்து மாதங்கள் ஓடியிருந்தன; அந்த அலுவலகம் மட்டுமின்றி மேலும் சில கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்கிறான். இப்போது உடைகளோ, அவர்களின் ஆங்கிலமோ அவனை பயமுறுத்தவில்லை, 'இன்னும் ஒரு ஆண்டில், சொந்தமாய் கடை போட்டு விடவேண்டும்...' என்ற வைராக்கியமே அவனுள் உந்து சக்தியாய் இருக்கிறது.
தாமோதரன். ஸ்ரீ
