PUBLISHED ON : ஆக 06, 2017

டிராவல் பேக்கின் ஜிப்பை லாக் செய்தபடி, ''சுபா... இது, நமக்கு மறக்க முடியாத, 'ட்ரிப்'பா இருக்கப் போகுது...'' என்றேன்.
''கடைசியில, இந்த, 'ட்ரிப்'ல என்ன சொதப்பல் இருக்கப் போகுதோ யாருக்கு தெரியும்...'' என்றாள் என் மனைவி.
''புறப்படுறப்பவே ஏன் இப்படி அபசகுனமா பேசுற...'' என்று கூறி, மொபைலில், டிராவல்ஸ் வண்டியை அழைத்தேன்.
வீட்டை பூட்டி, பெட்டிகளுடன் வாசலில் காருக்காக காத்திருந்தோம். இரவு, ரயிலில் கோவை பயணம்; காலையில், அங்கு உறவினரின் மகள் திருமணம். அதன்பின், சின்ன கல்லாறு!
வெகு நாட்களாக எனக்குள் ஒரு ஆசை... மனிதர்கள் இல்லாத காட்டில், ஓரிரு நாட்கள், இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பது!
இவ்வளவு நாட்களுக்குப் பின், இப்போது, அதற்கு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
என் கல்லூரி நண்பன் கணேஷ், பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மென்ட்டில், ஏ.இ.,யாக, வால்பாறைக்கு மாற்றல் ஆகியிருந்தான். கடந்த மாதம், சென்னையில் ஒரு கல்யாணத்தில் பார்த்து பேசிக் கொண்டிருந்த போது, பாரெஸ்ட் கேம்ப் பற்றி பேச்சு வர, என் ஆசையை அவனிடம் கூறினேன்.
'அட... வால்பாறைக்கு வாடா... பக்கத்துல, 'பாரெஸ்ட்' ஏரியால, சின்ன கல்லாறுன்னு ஒரு இடம். சுத்தியும் காடு; நடுவுல அரசு தங்கும் விடுதி இருக்கு. சாப்பாட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள எல்லாம் வால்பாறையில இருந்து கொண்டு போயிருவோம். கூடவே ஒரு, 'குக்'கையும் ஏற்பாடு செய்துக்கலாம். நானும், என் குடும்பத்தோட வந்துடுறேன்; ரெண்டு நாள் காட்டுல இருந்துட்டு வரலாம்...' என்றான்.
சுபாவிடம் விஷயத்தை சொன்னபோது, 'ஏங்க... அந்த இடம், பாதுகாப்பானதா... யாருமே இல்லாம, தனியா ரெண்டு, 'பேமிலி' மாத்திரம் இருக்கிறதுன்னா பயமா இருக்காதா... மொபைல் போன் வேற எடுக்காதுன்னு சொல்றீங்க... விலங்குகள் வந்துட்டாலோ, திடீர்ன்னு உடம்புக்கு ஏதாச்சும் வந்துடுச்சுன்னா என்னங்க செய்றது...' என்று பல சந்தேகங்களை எழுப்ப, ஒருவாறு அதையெல்லாம் நிவர்த்தி செய்து, அவளை தயார்படுத்துவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது.
காலையில் கோவையை அடைந்தபோது நல்ல மழை; ஓட்டலில் அறை எடுத்து, குளித்து, கல்யாணத்திற்கு போய் வந்ததும், கணேஷை மொபைல் போனில் கூப்பிட்டேன்.
''மச்சான்... இங்க சரியான மழை; ஆழியார் வால்பாறை ரோட்டுல, பெரிய மரம் விழுந்து, வாகன போக்குவரத்து, 'கட்' ஆயிடுச்சு; அது சரியாக, சாயங்காலம் ஆயிடும். ஆறு மணிக்கு மேல, சின்னகல்லாறு பாரெஸ்ட் ரோட்டுல அனுமதிக்க மாட்டாங்க. அதனால, நீ, இன்னிக்கு ராத்திரி கோயம்புத்தூர்லேயே இருக்குறது தான் நல்லது; நாளைக்கு காலையில சீக்கிரம் கிளம்பி வந்துடுங்க,'' என்றான்.
ஏமாற்றத்தை என் முகத்தில் பார்த்த சுபா, ''என்னங்க ஆச்சு... 'ட்ரிப்' கேன்சலா?'' என்றாள். அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
''மழையால ரோடு, 'பிளாக்'காம்; இன்னிக்கு இங்க தான் இருக்கணும்; நாளைக்கு காலையில, நிலைமை எப்படி இருக்குன்னு பாத்துட்டு, முடிவு செய்யலாம்,'' என்றேன்.
இன்றைய பொழுதை இங்கே தான் கழித்தாக வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ''ஏங்க... நம்ம கிருஷ்ணமூர்த்தி மாமாவை போய் பாத்துட்டு வந்துடலாமா... அவரும் எத்தனை முறை கூப்பிட்டுட்டே இருக்குறாரு,'' என்றாள் சுபா.
சுபாவின் உறவுக்காரர், கிருஷ்ணமூர்த்தி; வங்கியில் சீனியர் மேனேஜராக இருந்து, ஓய்வு பெற்றவர்; இவரது மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன் தவறி விட்டார். குழந்தைகள் கிடையாது. சென்னையில் இருந்தபோது, அடிக்கடி வீட்டிற்கு வருவார். குழந்தை இல்லாததால் சுபாவிடமும், என்னிடமும் மிகவும் பிரியமாக இருப்பார்; அதுவும், என்னிடம் கூடுதல் பிரியம்.
மனைவி இறந்த பின், தனியாக, அப்பார்ட்மென்டில் இருக்கப் பிடிக்காமல், அதை விற்று, கோவை, மாதம்பட்டி அருகே உள்ள, ஓல்ட் ஏஜ் ஹோமில், ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து வந்து விட்டார். அவ்வப்போது, ஏதாவது விசேஷங்களில் பார்க்கும் போது, அன்புடன் பேசுவார்.
'என்ன அண்ணா, 'லைப்' எப்படி போகுது...' என்று கேட்டால், 'எந்த பிரச்னையும் இல்ல; வேளா வேளைக்கு சாப்பாடு; இங்க, என் வயசுக்காரங்க நிறைய பேர் இருக்காங்க... அதனால, அமைதியா வாழ்க்கை போகுது; கோயம்புத்தூர் வந்தா கண்டிப்பா வாங்க; ஓல்ட் ஏஜ் ஹோம் லைப் எப்படி இருக்குன்னு பாருங்க...' என்பார்.
என்ன தான் சந்தோஷமாக இருப்பதாக காட்டினாலும், அடி மனதில், தனிமையின் ஏக்கம் இருப்பதை, அவர் முக வாட்டத்தில் இருந்து உணர முடியும்.
சுபா சொன்னதும், அவரை பார்த்தால் என்ன என்று தோன்றியது.
''சரி... அண்ணாவுக்கு போன் செய்து, வீட்ல இருக்காறான்னு கேளு...'' என்றேன்.
சுபா போன் செய்து பேசி, போனை ஒரு கையால் மூடி, ''அண்ணா உங்ககிட்ட பேசணுமாம்,'' என்று கூறி, என்னிடம் கொடுத்தாள்.
''ஹலோ சிவா...'' அவர் குரலில், அளவிட முடியாத மகிழ்ச்சி!
''இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தோம்... உங்க ஞாபகம் வந்துச்சு... அப்படியே உங்களையும் பாக்கலாம்ன்னு...''
''ரொம்ப சந்தோஷம்... எப்ப வேணும்ன்னாலும் வாங்க... ஆமா இப்போ எங்க இருக்கீங்க?''
''ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஓட்டல்ல ரூம் போட்டிருக்கு... நாளைக்கு காலையில பொள்ளாச்சி கிளம்பணும்...''
''ஈவினிங் வேற ஏதாச்சும், 'புரோக்ராம்' இருக்கா?''
''முக்கியமா ஒண்ணுமில்ல...''
''அப்போ ஒண்ணு செய்யுங்க... ரூமை காலி செய்துட்டு, இங்க வந்துருங்க; இன்னிக்கு ஒருநாள் என்னோட தங்கலாம்.''
''அது வந்து... காலையில கொஞ்சம் சீக்கிரம் கௌம்பணும்... உங்கள, 'டிஸ்டர்ப்' செய்ய வேண்டியிருக்கும்...''
''அதெல்லாம் ஒரு, டிஸ்டர்பன்சும் இல்ல... உடனே ரூமை காலி செய்துட்டு, டாக்சி பிடிச்சு வந்திருங்க... அட்ரஸ், 'வாட்ஸ் - ஆப்'ல அனுப்புறேன்,'' என்றார்.
ஏனோ மறுத்து பேச முடியவில்லை.
டாக்சி பேரூர் தாண்டி, மாதம்பட்டி பிரிவில் திரும்பியதும், மெயின் ரோட்டின் பரபரப்பு குறைந்து, வயல் வெளிகளும், சுற்றிலும் மலைகளும் என, ரம்யமான பகுதி கண்ணில் பட்டது; அருமையான காற்று; மழை லேசாக தூறியது.
அண்ணா சொன்ன ஹோம், வயல்களின் நடுவே இருந்தது. வரிசையாக தனித் தனியாக, 50 வீடுகள் இருக்கும். கார் உள்ளே நுழையும்போது, வயதான ஒருவர் கைத்தடியோடு, 'வாக்கிங்' போய்க் கொண்டிருந்தார். முதல் வரிசையில் உள்ள வீடுகளின் ஜன்னல்களில் இருந்து, சில கண்கள், யார் வந்திருப்பது என்று எட்டிப் பார்த்தன.
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டை அடைந்தபோது, தன் தந்தையை எதிர்பாத்திருக்கும் குழந்தையை போல், பரபரப்புடன் எங்களுக்காக காத்திருந்தார்.
''வாங்க... நீங்க வந்ததுல ரொம்ப மகிழ்ச்சி...'' என்றவாறு, கார் அருகில் வந்து, கையை பிடித்துக் கொண்டார்.
''எப்படி இருக்கீங்க... உடம்பு நல்லபடியா இருக்கா...'' என்றேன்.
''அதுக்கு என்ன... நல்லா இருக்கு,'' என்று சொல்லி, மகிழ்ச்சியுடன், ''என்னை பாக்க கூட, 'கெஸ்ட்' வராங்கன்னு நெனச்சா, ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' என்றார்.
எதிர்வீட்டில் ஒரு மாமாவும், மாமியும் எட்டிப் பார்த்தனர்.
''ராஜகோபால்... இது, என் சொந்தக்கார பொண்ணு... இவர், அவ வீட்டுக்காரர். என்னை பாக்க வந்திருக்காங்க,'' என்று, எதிர்வீட்டு மாமாவிடம் உரக்கச் சொன்னார், பெருமையுடன்!
அவரின் சந்தோஷமும், குழந்தை போன்ற குதூகலமும், எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
''வாங்க... இதுதான் என் அரண்மனை,'' என்றார்.
ஒரு சின்ன ஹால், அதை ஒட்டியுள்ள சமையலறையில், ஒரு இண்டக் ஷன் ஸ்டவ். அடுத்த அறையில் சின்ன பூஜை ஷெல்ப்; பாத்ரூம் இணைப்போடு, இரண்டு பெட்ரூம்கள். ஒவ்வொன்றிலும் ஒரு நபர் மட்டும் தூங்கும் விதமான கட்டில். வீடு சின்னதாக இருந்தாலும், 'நீட்'டாக இருந்தது.
''போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க... அப்படியே ஒரு ரவுண்டு போய்ட்டு, மெஸ்ல போய் சாப்பிடலாம்,'' என்றார்.
வெளியே வந்ததும், ஹோமின் ஒவ்வொரு இடத்தையும் ஆர்வத்தோடு காட்டியதுடன், வழியில் எதிர்ப்பட்ட எல்லாரிடமும், ''இவ, என் சொந்தக்கார பொண்ணு சுபா... இது சிவா; என்னை பாக்க வந்திருக்காங்க...'' என்று, பெருமையாக சொன்னார்.
''ஓ... உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்; அடிக்கடி வாங்க...'' என்று, பலர் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாலும், சிலரின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
''இது எனக்கு மறக்க முடியாத நாள்...'' என்றார் கிருஷ்ணமூர்த்தி.
அத்துடன், ஹோமின் ரொடீன் வாழ்க்கை, பொழுது போக்கு அம்சம், அங்குள்ள, சில சுவாரசியமான மனிதர்களை பற்றியும், இரவு சாப்பிட்டு வீட்டிற்குள் வந்ததும், அவ்வப்போது தோன்றும் வெறுமை என, நிறைய விஷயங்களை பேசினார்.
ஹோமில் நாங்கள் சந்தித்த சிலருக்கு குழந்தைகள் இல்லை... சிலரின் குழந்தைகள், அமெரிக்காவில் இருப்பதாகவும், பலர் குழந்தைகள் இருந்தும், அனாதைகளாக உணர்வதாக தெரிந்தது. இன்னும் சிலருக்கு வீட்டில் மருமகள் பிரச்னை. என்ன தான் வசதியாக இருந்தாலும், எல்லாருக்கும் ஏதோ ஒரு சோகமும், மனிதர்களுக்கும், உறவுகளுக்கும் ஏங்குவது தெரிந்தது. காசு, பணம் எத்தனை இருந்தாலும், நல்ல உறவுகள் இல்லாமல், வாழ்க்கை முழுமை அடைவதில்லை என்பதை, கண்கூடாக உணர்ந்தேன்.
அங்கு இருந்த சில மணி நேரத்தில், அவரது சந்தோஷத்தை பார்க்கும்போது, 'இதைவிட, வேறு எந்த, 'ட்ரிப்'பும், மனதிற்கு திருப்தி தந்திருக்க முடியாது...' என்று தோன்றியது. 'ஒருநாள், 'விசிட்' ஒரு ஆத்மாவிற்கு இத்தனை சந்தோஷத்தை கொடுக்க முடியுமா...' என்றும் ஆச்சரியமாக இருந்தது.
இரவில் கணேஷின் போன் வந்தது... ''மச்சான்... ரோடு கிளியர் ஆயிடிச்சு; காலையில சீக்கிரமே கிளம்பிடுங்க... அட்லீஸ்ட் ஒரு நாளாச்சும், மனுஷங்க தொல்லை இல்லாம இருக்கலாம்,'' என்றான்.
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று, உன்னிப்பாக பார்த்தாள், சுபா.
'மனிதர்கள் இல்லாத இடத்தை விட, மனிதர்களுக்காக ஏங்கும் இடத்தில், இரண்டு நாள் இருப்பது முக்கியம்...' என்று தோன்ற, ''சாரி மச்சான்... அதுக்குள்ள இங்க ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு... இங்கேயே ரெண்டு நாள் இருக்கணும்; அடுத்த முறை வர்றேன்,'' என்று சொல்லி, போனை, 'கட்' செய்தேன்.
சுபாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
எஸ்.சிவாஸ்
