
மதுரை அருகேயுள்ள சமயநல்லுாரில் வாழ்ந்தவர்கள், ராமஸ்வாமி- - திரிபுரசுந்தரி தம்பதி. அம்பிகை வழிபாட்டில் தலை சிறந்த அத்தம்பதிக்கு பொருட்செல்வம் இருந்தும், பிள்ளை செல்வம் இல்லை.
'தாயே, மீனாட்சி... எங்கள் மனக்குறையைத் தீரம்மா... குழந்தை பிறந்ததும், அக்குழந்தையை உனக்கே சமர்ப்பணம் செய்கிறோம்...' என்று வேண்டினர்.
ஒருநாள், மீனாட்சி கோவிலுக்கு, ராமஸ்வாமி முன்னால் செல்ல, சர்க்கரைப் பொங்கல், வடை முதலான நைவேத்ய பொருட்களுடன், மேல கோபுர வாசலை நெருங்கினார், திரிபுரசுந்தரி.
அப்போது, இரண்டு பிச்சைக்காரக் குழந்தைகள், 'ரொம்பப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் குடும்மா...' என, கேட்டனர்.
அம்பாளுக்கு நைவேத்யம் முடித்து தருவதாக கூறியும், 'அம்மா... அதுவரைக்கும் தாங்காது. பசி உயிர் போறது. எங்களை அந்த மீனாட்சியாவே நெனச்சு, குடுங்கம்மா...' என்றனர்.
திரிபுர சுந்தரியும் உள்ளம் நெகிழ்ந்து, குழந்தைகளிடம் தந்து விட்டார். அவர்களும் பசியாற உண்டு, வாழ்த்திச் சென்றனர்.
விபரம் அறிந்த ராமஸ்வாமி, கடுங்கோபம் கொண்டார். தரிசனத்தை முடித்து, வீட்டிற்கு போய் விட்டார்.
'தேவீ... என் பக்தி, உண்மையானதாக இருந்தால், உன் பிரசாதம், என் வீடு தேடி வர வேண்டும். காப்பாற்று அம்மா...' என, பிரார்த்தித்தவாறே வீடு சென்றார், திரிபுரசுந்தரி.
சற்று நேரத்தில், திண்ணையில் இருந்த ராமஸ்வாமியிடம், 'இந்தாருங்கள், அம்பாள் பிரசாதம்...' என்றபடி பழம், தேங்காய், பூக்கள், சர்க்கரைப் பொங்கல், வடை முதலியவற்றை நீட்டினான், சிறுவன் ஒருவன்.
வாங்க மறுத்தார், ராமஸ்வாமி.
'பிரசாதங்களை வாங்கிக் கொள்ளுங்கள்... அச்சிறுவனின் பின்னாலேயே போய், அவன் யாரென்று விபரமறிந்து வாருங்கள்...' என்றார், திரிபுரசுந்தரி.
பிரசாதங்களை வாங்கி வைத்து, சிறுவனின் பின்னாலே போனார், ராமஸ்வாமி.
மேல கோபுர வாசலில் வந்து நின்ற அவனை, ராமஸ்வாமி நெருங்குகையில் மறைந்தான்.
வீடு திரும்பி, நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
'அந்த இரு குழந்தைகளும், பசியால் தவித்ததால், என் கையில் இருந்ததை தந்தேன். அது தெய்வத்திற்கே செய்ததாக அர்த்தமாகியது அல்லவா...' என்றார், திரிபுரசுந்தரி; ராமஸ்வாமியும், அதை ஒப்புக்கொண்டார்.
அன்னை மீனாட்சியின் அருளால், ராமஸ்வாமி தம்பதிக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ராம-, லட்சுமணன் என, பெயரிட்டனர். ஏற்கனவே செய்த வேண்டுதல்படி, ராமன் எனும் குழந்தையை, அன்னைக்கு சமர்ப்பித்து, சன்னிதியிலேயே விட்டுச் சென்றனர்.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட, அன்னை மீனாட்சியால் வளர்க்கப்பட்ட குழந்தை தான், மீனாட்சி மைந்தன் எனும், ஸ்ரீகுழந்தையானந்த ஸ்வாமிகள்.
இரக்க உள்ளம் கொண்டவருக்கு இறைவன் கருணையால் இன்னல்கள் தீரும்; அவதார புருஷரையும் அருளும் என்பதை விளக்கும் வரலாறு இது.
பி. என். பரசுராமன்

