PUBLISHED ON : ஆக 04, 2019

குற்றால அருவியில் வாசகர்கள் குதுாகலம்!
இந்த ஆண்டு, 'குற்றால டூரில்' கலந்து கொண்ட வாசகர்களில் பெரும்பாலானோர், இள வயதினர். இதன் காரணமாக, குளித்த அத்தனை அருவிகளிலும், ஆட்டம், பாட்டம் என்று துாள் கிளப்பினர்.
'தினமலர்- - வாரமலர்' இதழ் வாசகர்களுக்காக, கடந்த, 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், 31வது ஆண்டாக, 'குற்றால டூர்' நடத்தப்பட்டது.
முதல் நாளே, மதுரையில், வாசகர்கள் தங்க, ஓட்டல் ரத்னாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஓட்டலின் பொது மேலாளர், அழகப்பன் தலைமையிலான ஊழியர்கள், 'குற்றால டூர்' வாசகர்களை, அன்புடன் உபசரித்தனர்.
அனைத்து ஊர்களில் இருந்து வந்த வாசகர்களை, டாக்டர். சி.ஆர். ராமசுப்பிரமணியன், அவரது மனைவி ராஜகுமாரி ஆகியோர் வாழ்த்தி, குற்றாலத்துக்கு வழியனுப்பினர்; பேராசிரியர் கண்ணனும் உடனிருந்தார்.
மதுரையில் இருந்து கிளம்பிய, 'ஏசி' பஸ், இரண்டு மணி நேரம் பயணித்து, அடுத்து நின்ற இடம், ராஜபாளையம். ஆனால், பஸ்சில் இருந்தவர்களுக்கு, இரண்டு மணி நேரம், 20 நிமிடம் போல பறந்து போனது. காரணம், உள்ளே இருந்த, ஸ்ரீதேவி, பவித்ரா மற்றும் அஸ்வினி ஆகியோர் தலைமையில், ஆடிய ஆட்டங்களாலும், பாடிய பாட்டுகளாலும், நேரம் போனதே தெரியவில்லை.
ராஜபாளையம் ராஜேஸ்வரி எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் ஏ.ராமசுப்பிரமணிய ராஜா, கடந்த பல ஆண்டுகளாக, 'வாரமலர்' இதழ் வாசகர்களுக்கு, அருமையான பரிசு வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் அதை சிறப்பாக செய்தார். அவரது சம்பந்தி, ரவிராஜா உடனிருந்தார்.
யார் எதைச் செய்தாலும், 'வாழ்க வளமுடன்' என்று, மனதார பாடி மகிழ்வித்து கொண்டிருந்தார், வாசகி வேணி. கேட்பவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டனர். இப்படி வாழ்த்துவதோடு நின்று விடாமல், அனைவரையும் கேலி செய்து, நொடிக்கு ஒரு முறை, சிரிக்கச் செய்தார். அதிலும், அவரது காதல் கல்யாண கதையைக் கேட்டு சிரித்ததில், பஸ்சே குலுங்கியது.
இவருக்கு இணையாக, அனைவரையும் மனசு வலிக்காமல், கிண்டலடித்து, 'டூரை' கலகலப்பாக வைத்துக் கொண்டவர்களில் அஸ்வினி, ஸ்ரீதேவி மற்றும் கலைமகள் ஆகியோருக்கும் பங்கு உண்டு.
'டூரின் செல்லம்' என்று சொன்னால், அது, லலிதா லட்சுமி தான். வாசகியரிலேயே மூத்தவரான அவர், எந்த நேரமும் துறுதுறுவென்று ஏதாவது செய்து, அனைவரையும் மகிழ்வித்தார். இந்த, 'டூரில்' நிறைய வேடிக்கை விளையாட்டுகளை, மகள் ஸ்ரீநிதியுடன் சேர்ந்து நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளும் வழங்கி கவுரவித்தார்.
ராஜபாளையம் தாண்டி, குற்றாலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு இணையான, ஓட்டல், 'ப்ரீசில்' வாசகர்கள் தங்க வைக்கப் பட்டனர். முன்கூட்டியே அனைத்து அறைகளிலும், 'ஏசி'யை போட்டு வைத்து, குளு குளு குற்றால வாசகர்களை, மேலும், குளுமைக்கு உள்ளாக்கினர், ஓட்டல் அதிபரும், மேலாளர் மோகன்ராமும். கூடவே, வாசகர்கள் பெயர் பொறித்த, சோலார் வெளிச்சத்தில் மின்னும், 'கீ - செயின்' வழங்கி, ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினர்.
திண்டுக்கல், 'கீதா மெஸ்' சந்திரசேகரன் தலைமையில், கல்யாண சாப்பாடு போல, மதிய சாப்பாடு பரிமாறப்பட்டது. அப்போது ஆரம்பித்த விருந்து, அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கும் விதம் விதமாக தொடர்ந்தது.
அது மட்டுமல்ல, வாசகர்கள் குளிக்க சென்ற ஐந்தருவி, புலியருவி போன்ற இடங்களுக்கே, தங்களது வாகனத்தை எடுத்து வந்து, சுட சுட அல்வா, வெங்காய பஜ்ஜி மற்றும் டீ, காபி கொடுத்து அசத்தினர்.
நன்றாக சாப்பிட்டு, ஐந்தருவியில் அருமையான குளியலை போட்டு திரும்பிய வாசகர்களை, சின்னத் திரையையும், பெரிய திரையையும் கலக்கிக் கொண்டிருக்கும் நகைச்சுவை பேச்சாளர், ஞானசம்பந்தன், தன் பேச்சால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
'டூரில்' இவர் நடத்தும் நிகழ்ச்சியில், ஒரு விசேஷம் நிச்சயம் இடம்பெறும். அது, இவர் கொடுக்கும் தலைப்பில் வாசகர்கள் கலந்து கொண்டு பேசலாம்.
வாசகர்கள் ராம்குமார், சசிகுமார், ஹரிபிரசாத், டாக்டர் சுபாஷினி, ஆசிரியர் ரத்னா, பாரதி கண்ணம்மா, வேதநாயகி ஆகியோர், எதிரெதிர் அணியில் பங்கேற்று, பிரமாதமாக பேசி, கைதட்டலை பெற்றனர்.
'டூரின்' இரண்டாவது நாள் காலையில், பழைய குற்றால அருவியில் குளியல். காவல்துறை நண்பர்கள் உதவியுடன், நீண்ட நேரம் குளித்தவர்கள், 'டண் டணக்கா... ஏ டண் டணக்கா...' என்றெல்லாம் ஆடிப்பாடி குளித்தனர். அப்படி ஆடிப்பாடியவர்களில், கீதாஞ்சலி, மாலினி, சரிதா மற்றும் திவ்யா ஆகியோர் முக்கியமானவர்கள்.
காலை உணவை முடித்து, புலியருவில் குளியல். அங்கு அருவியில் மட்டுமின்றி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர். அன்று மாலை, குற்றால நாதர் கோவிலில், சிறப்பு தரிசனம்.
குற்றாலநாதர் சன்னிதியில், அனைவரும் அவரவர் பெயரில் அர்ச்சனை செய்வர் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைவரும் சேர்ந்து, 'எங்களது, இவ்வளவு பெரிய மகிழ்ச்சிக்கு காரணமான, அந்துமணி சார்... நீண்ட ஆயுளுடன், நிறைந்த புகழுடன், வாழ்வாங்கு வாழ வேண்டும்...' என்று வேண்டி, அவரது பெயரில் அர்ச்சனை செய்தனர்.
இது நெகிழ்ச்சியான விஷயம் என்றால், அனைத்து வாசகர்களுக்கும் மலர் மாலை அணிவித்து, மாலையும், கழுத்துமாக கோவில் நிர்வாகம் வரச் செய்தது, மகிழ்ச்சியான தருணம்.
'இதை ஆயுளுக்கும் மறக்க மாட்டோம்...' என்றனர். அதிலும், ஓதுவார்களை மிஞ்சும் குரலில், வாசகரான, ஐயப்பன், சன்னிதியில், இறை பாடலை பாடியது, நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும்.
பழமையும், பெருமையும் கொண்ட குற்றாலநாதர் கோவில், வாசகிகள் ராஜேஸ்வரி, சாந்தி, மீனா, கலைவாணி மற்றும் கலையரசி ஆகியோருக்கு பிடித்துப் போனது. அதேபோல், கோவில் அருகில் உள்ள மூலிகை ஓவியங்கள் நிறைந்த சித்திரசபை, அஸ்வர்த் - ஷீலா தம்பதியினருக்கு உற்சாகத்தை தந்தது.
அன்று மாலை, வாசகர்கள் நடத்திய பல்வேறு போட்டிகளால், அந்த இடம் மிகவும் கலகலப்பானது. மவுன மொழி விளையாட்டுப் போட்டியில், திவ்யா-, கீர்த்திகா காட்டிய அபிநயங்களால் சபை மகிழ்ச்சியில் குலுங்கியது.
'எப்போது, 'வாரமலர்' இதழ் வாசகர்கள் வருவார்களோ, அப்போது தான் ஆரம்பிப்போம் என்பது போல, அடம் பிடித்து காத்திருப்பது போலவே, இந்த ஆண்டும், 'சீசன்' ஆரம்பித்தது.
இதனால், வாசகர்கள் மெயினருவியில் குளிக்க போன போது, ஏராளமான கூட்டம். குளிப்பதற்காக, மக்கள் வரிசை நீண்டு கிடந்தது.
'யாமிருக்க கவலை ஏன்...' என்பது போல, காவல்துறை நண்பர்கள், வாசகர்களை அழைத்துச் சென்று, சிறப்பாக குளிக்க வைத்து, அனுப்பினர்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, சிற்றருவியில் வாசகர்கள் மட்டும் நீண்ட நேரம் ஆடிப்பாடி குளித்து மகிழ்ந்தனர். இப்படி குளிப்பும், களிப்புமாக மூன்று நாட்கள், மூன்று நிமிடமாக ஓடிப்போனது.
அடுத்து, அனைவரும் தற்காலிகமாக பிரியும் வேளை, மதுரையில் வந்தது.
தன், 50 ஆண்டு கால வாழ்க்கையில், முதல் முறையாக, 'டூருக்காக' தான் இருக்கும் ஊரை விட்டு வெளியே வந்திருந்தார், வாசகி ஜெயலட்சுமி.
'மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு, 50 ஆண்டு சந்தோஷத்தை இந்த மூணு நாள்ல அனுபவிச்சுட்டேன்... பிள்ளைக்கு சீக்கிரம் கல்யாணம் வச்சுருவேன், பத்திரிகை அனுப்புவேன்.
'கண்ணுகளா நீங்கல்லாம், உறவும், நட்புமாக வந்திருந்து, எம் புள்ள, கல்பனா கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்...' என்று சொன்ன போது, கலங்கியிருந்தது அவரது கண்கள் மட்டுமல்ல; அனைவரது கண்களும் தான்.
பிறந்த நாள் அது, கல்பானாவிற்கு சிறந்த நாள்!
'டூர்' வாசகர்களை, மகிழ்ச்சியில் எப்படி திக்கு முக்காடச் செய்வது என்று, விதம் விதமாக யோசித்து, அதை அமல்படுத்துவதில், அந்துமணிக்கு நிகர் அந்துமணி தான்.
இந்த ஆண்டு, 'டூரில்' கலந்து கொண்டவர்களில், கோவை, பீளமேடு வாசகி கல்பனாவும் ஒருவர். இவர், தாய் ஜெயலட்சுமியுடன் கலந்து கொண்டார்.
'டூரின்' போது, இவரது பிறந்தநாள் வருவதை, எப்படியோ தெரிந்து கொண்டார், அந்துமணி. இதை, வாசகிக்கே தெரியாமல், 'சர்ப்ரைஸ்' ஆக கொண்டாட முடிவு செய்து, கேக், தோரணம் மற்றும் பலுான்கள் என்று, பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து விட்டார்.
இது, கல்பனாவிற்கு தெரியாது. 'ஒரு நிமிஷம் வாயேன்...' என்று, அவரது கண்களை கட்டி அழைத்து வந்து, திறந்து விட்டனர். மொத்த கூட்டமும், 'ஹாப்பி பர்த் டே...' பாட்டு பாடி வாழ்த்த, ஆனந்த கண்ணீர் விட்டு, அந்துமணியை மானசீகமாக கையெடுத்து கும்பிட்டார், கல்பனா.
புத்தகமல்ல, பொக்கிஷம்!
'தினமலர் - வாரமலர்' இதழ் சார்பாக, 31வது ஆண்டாக, வாசகர்களுக்கான, 'குற்றால டூர்' வெற்றிகரமாக நடந்தது.
வாசகர்கள் குடும்பத்திற்கு, அந்துமணி தரும், அன்பு பரிசு தான், இந்த, 'குற்றால டூர்!'
கடந்த ஆண்டுகளில் நடந்த, 'டூரின்' சுவாரசியமான அனுபவங்களை, தொகுத்து எழுதப்பட்டது தான், 'பசுமை நிறைந்த நினைவுகளே' என்ற புத்தகம்.
வாரமலர் இதழ் வரலாற்றிலேயே, அதிக வாரங்கள் வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற கட்டுரை தொடரின் தொகுப்பே, இப்புத்தகம்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவையும், வித்தியாசமாக நடத்தினார், அந்துமணி.
'வாசகர்கள் தான், எங்கள் முதலாளி. ஆகவே, குற்றாலத்தில் வைத்து, ஞானசம்பந்தன் வெளியிடட்டும். 'டூருக்கு' வந்த வாசகர்கள் பெற்றுக் கொள்ளட்டும்...' என்றார்.
அதன்படியே பட்டிமன்ற நடுவரும், நகைச்சுவை பேச்சாளருமான, ஞானசம்பந்தன் வெளியிட, 15 வாசக குடும்பத்தினரும் நுாலை பெற்றுக் கொண்டனர்.
புத்தகத்தை புரட்டிப் பார்த்த, ஞானசம்பந்தன், 'இது புத்தகமல்ல; மொத்த குற்றாலத்தையும் படம்பிடித்துக் காட்டும் பொக்கிஷம். குற்றாலத்தில் வசிப்பவர்களுக்கு கூட தெரியாத, அரிய பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு நாள் குற்றாலத்தில் தங்கலாம் என்று வருவோர், இந்த புத்தகத்தை படித்தால், ஒரு வாரம் தங்குவர்.
'அதற்கான வழிகாட்டியாக திகழ்கிறது, இப்புத்தகம். பக்கத்திற்கு பக்கம் பல சுவாரசியமான தகவல்களும், படங்களும் நிரம்பியுள்ளன...' என்றவர், தொடர்ந்தார்...
'தன் வாசகர்களை, ஒருவர், இந்த அளவு நேசிக்க முடியுமா என்று, ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போது, ஆச்சரியப்பட்டு போனேன். பிறகு, 'அது, அந்துமணியால் மட்டுமே முடியும்...' என்ற முடிவுக்கு வந்தேன். நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை, புத்தகத்தை படித்துப் பார்த்தால், உங்களுக்கே புரியும்.
'இது ஒரு, காலப்பெட்டகம் மட்டுமல்ல; பல்வேறு கருத்துக்களை சுமந்திருக்கும், கருத்துப் பெட்டகமும் கூட. இந்த நுாலை எழுதியுள்ள, நுாலாசிரியர், எல்.முருகராஜ், இது போல, தொடர்ந்து இன்னும் பல நுால்கள் எழுத வேண்டும்...' என்றார்.
தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான இந்த புத்தகம் வேண்டுவோர், 1800 425 7700 என்ற 'டோல் ப்ரீ' எண்ணுக்கு, தொடர்பு கொள்ளவும்.
