PUBLISHED ON : டிச 15, 2013

மறைந்த தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, 'டிவி' செய்தி யாளர் ஒருவருக்கு, 20 பைசா கடன்காரராக இருந்திருக்கிறார். தூர்தர்ஷன் துவங்கிய போது, டாடாவை பேட்டிக்கு அழைத்தனர். பேட்டி அளிப்பவருக்கு, தூர்தர்ஷன் சார்பில், சன்மானம் அளிப்பது வழக்கம். பேட்டி முடிந்த போது, டாடாவுக்கு 200 ரூபாய் சன்மானம் அளிக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டதாக, ரசீதில் கையெழுத்து போட வேண்டும். அப்போது, தூர்தர்ஷனில் ரசீது கட்டணமாக, 20 பைசா வசூலிப்பர். ஆனால், அச்சமயம் டாடாவிடம் சில்லரை இல்லாததால், பேட்டி எடுத்த சசிகுமார், 20 பைசா கொடுத்து உதவினார்.
அதன்பின், பல ஆண்டுகளுக்கு பின், நிருபரை சந்தித்த டாடா, 'உங்களை, எங்கேயோ சந்தித்து இருக்கிறேன்...' என்றார். 'தூர்தர்ஷனில் உங்களை பேட்டி எடுத்திருக்கிறேன்...' என்று சொன்னார் சசிகுமார். உடனே, 'அடடே... நான் உங்களுக்கு 20 பைசா கடனாளி ஆச்சே...' என்று கூறி சிரித்த டாடா, 'ஆனால், இப்போதும் எங்கிட்ட பைசா இல்லை...' என்று கூறி சென்றுவிட்டார். — ஜோல்னா பையன்.

