தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உருகாத வெண்ணெய்!

உருகாத வெண்ணெய்!

உருகாத வெண்ணெய்!


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 14 காரடையான் நோன்பு

உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் நுாற்றேன், ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்... என்று, காரடையான் நோன்பு அன்று, பார்வதி தேவியை வேண்டுவர், சுமங்கலிகள்.

தமிழகத்தில், பாருக்கே அதிபதியான தேவியை, 'பார்பதி' என்றனர். அது பிற்காலத்தில், பார்வதி ஆனது. பார் என்றால் உலகம். பதி என்றால் தலைவி. வடமாநிலத்தவர் இவளை, கவுரி என்பர். இதற்கு, ஒளி பொருந்தியவள் என, பொருள்.

காரடையான் நோன்பின் புராணக்கதை அநேகமானவர்களுக்கு தெரியும். கணவன் சத்தியவானைக் காப்பாற்ற சாவித்திரி என்ற பெண்மணி, எமனிடமே போராடி அவனது உயிரை மீட்டாள். ஆனால், இதிலுள்ள தத்துவத்தை உணர்ந்து, அதைக் கடைப்பிடிப்பது தான் கஷ்டமான விஷயம்.

கணவர் மீது மனைவிக்கு பாசம் இருப்பது இயற்கையே. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், மாமியார், மாமனாரிடம் பாசமாக இருக்கின்றனரா என்றால், அது கேள்விக்குறி தான்.

இன்று, காரடையான் நோன்பிருக்கும் பலரது வீடுகளில், மாமனாரும், மாமியாரும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். சாவித்திரி தன் கணவர் உயிரை மட்டும் மீட்கவில்லை. பார்வையற்ற தன் மாமனார், மாமியாரின் கண் பார்வையையும், இழந்த பதவியையும் போராடி மீட்டுத் தந்தாள்.

முதல் போகத்தை கார் பருவம் என்பர். கார் பருவ அரிசியில் தயாரித்த மாவு, வெல்லம் மற்றும் காராமணி சேர்த்து அடை செய்து, கவுரி ஸ்லோகம் சொல்வதால் மட்டும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைத்து விடாது. வயதான காலத்தில் இயற்கையாக கோபம் கொள்ளும் மாமனார், மாமியாரையும் அனுசரித்து சென்றால் தான் அது சாத்தியம்.

'காட்டில் நானே துன்பப்படுகிறேனே, இதுகளையும் ஏன் இழுத்துக் கொண்டு திரிய வேண்டும்...' என்று, சாவித்திரி நினைத்திருந்தால், அவள், புராணத்தில் இடம் பெற்று இருக்க மாட்டாள். அதே போல, மருமகள் என்றால் தங்கள் வீட்டு அடிமை என நினைக்கும் மாமியார்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சத்தியவானின் தாயும், தந்தையும் தங்கள் மருமகள் மீது தாராளமான அன்பைச் செலுத்தினர். குடும்ப ஒற்றுமையே காரடையான் நோன்பின் தத்துவம்.

காரடையான் நோன்பன்று உருகாத வெண்ணெய் படைப்பர். இதற்கு காரணம் தெரியுமா?

கடவுள் என்பவர் கண்ணுக்கும் தெரிய மாட்டார்; எளிதில் உருகவும் மாட்டார். பக்தி என்ற நெருப்பை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். கோவிலில் தீபாராதனை காட்டுவதன் நோக்கமும், இது தான்.

'என் குடும்பத்தைக் காக்க கல் மனதுடன், இந்த உருகாத வெண்ணெய் போல் இருந்து விடாதே. மனம் உருகி கேட்கிறேன், நீயும் மனம் உருகு தாயே...' என்பதை, கவுரி தேவிக்கு குறியீடாகக் காட்டுவதே இதன் அர்த்தம். வெறுமனே அடைக்கு தொட்டுக் கொள்ள மட்டும் வெண்ணெய் இல்லை.

காரடையான் நோன்பு, மாசி மாதம் முடிந்து, பங்குனி பிறக்கும் நேரத்தில் வரவும் காரணம் இருக்கிறது. மாசியில், சூரியன் சனியின் ராசியான கும்பத்தில் இருக்கிறார். பங்குனியில் அவரது பிடியில் இருந்து விடுபட்டு, குருவின் ராசியான மீனத்திற்குள் பாதுகாப்பாக வந்து விடுகிறார்.

நம் குடும்பமும் இதுபோல் பாதுகாப்பாக இருக்க, இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர், நம் முன்னோர்.

சச்சரவற்ற குடும்பமாக இணைந்து வாழ, இந்த காரடையான் நோன்பு காலத்தில் உறுதியெடுப்போம்!

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us