தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உறவுப் பாலம் அமைப்போம்!

நண்பருக்கு, மூன்று சகோதரிகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. விடுமுறை மற்றும் விசேஷங்களுக்கு, குடும்பத்துடன் சகோதரிகள், அவர் வீட்டுக்கு வருவது வழக்கம். சகோதரிகளிடம் சந்தோஷமாக சிரித்து பேசுவார், நண்பர். ஆனால், 10 ரூபாய் கூட தன் கைப்பட கொடுக்க மாட்டார். பதிலாக, அவர் மனைவி தான் நாத்தனார்களுக்கு பண உதவி செய்வார்.

அவர்களும், 'அண்ணி... அண்ணி...' என, நண்பரின் மனைவியிடம் அன்பாக பேசுவர். நண்பரிடம் இதுபற்றி கேட்டேன். 'என் கையால் நான் லட்ச ரூபாய் கொடுத்தாலும், என் சகோதரிகளுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. அதுவே என் மனைவி, 100 ரூபாய் கொடுத்தால் கூட, 'நம் அண்ணி நமக்காக தர்றாங்க...' என்று சந்தோஷப்படுவாங்க. இதனால், நாத்தனார் உறவு பலப்படும்.

'என் மனைவியின் சகோதர - சகோதரிகளுக்கு என் கையால் உதவி செய்வேன். இப்படித்தான் எங்கள் உறவுப் பாலம் பலமாக இருக்கிறது...' என்று கூறி சிரித்தார், நண்பர். எல்லாரும் இப்படி உறவுப் பாலத்தை பலப்படுத்தி வைத்துக் கொள்ளலாமே!

—பி. ராமகிருஷ்ணன், அறந்தாங்கி.

பூக்கள் வாங்கும்போது உஷார்!

தோழியின் பெண்ணுக்கு, தலையில் அரிப்பு. அலர்ஜி மாதிரி இருக்கவே, தோல் டாக்டரிடம் சென்று காட்டினோம். பொடுகு, பேன் பிரச்னை எதுவும் இல்லை. ஆனாலும், இந்த அலர்ஜி எப்படி வந்தது என்பதை அறிய, சில பரிசோதனைகளை செய்ய, பரிந்துரைத்தார்.

பரிசோதனை முடிவுகளோடு டாக்டரிடம் சென்றபோது, 'உங்கள் பெண்ணுக்கு தினமும் பூ வைத்து விடுவீர்களா?' எனக் கேட்டார். 'ஆமாம்...' என்றோம். 'பூக்கள் எங்கிருந்து வாங்குகிறீர்கள்?' என்றார்.

'பூக்கடையில் தான் வாங்குகிறேன்...' என்றாள், என் தோழி. 'பூக்கடைகளில் பூ வாடாமல் இருப்பதற்காக, பச்சை நிற சாயம் நனைத்து வைத்து இருப்பர் அல்லது பச்சை சாயம் சேர்த்த நுாலால் கட்டியிருப்பர். அந்த சாயத்தில் உள்ள கெமிக்கல், முடிகளில் இறங்கி உங்கள் மகளுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

'இதை இப்படியே விட்டால் முடி உதிர்வு, தலையில் புண் மற்றும் உடலில் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும்...' என்று, எச்சரித்தார். அதன்பின், டாக்டரின் பரிந்துரைப்படி அதற்குரிய மருத்துவம் பார்த்து குணமாகி விட்டது. எனவே, கடைகளில் உதிரி பூக்களாக வாங்கி, நீங்களே தொடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இப்படி பச்சை நிற சாயம் பூசிய எந்த பூக்களையும் வாங்கி சூடாதீர்கள்.

கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

1906ன் அவசியம் தெரியுமா?

சமீபத்தில், வீட்டு எரிவாயு சிலிண்டரிலிருந்து, வாயு கசியும் வாசனை வந்தது. அன்று, ஞாயிற்று கிழமை என்பதால், காஸ் ஏஜன்சியை தொடர்பு கொள்ள முடியவில்லை. 'கூகுளில்' தேடியதில், 1906 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு பதில் வந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டதும், 'மெக்கானிக் உடனே வருவார். எரிவாயு குழாய் மாற்றுவது போன்ற விஷயங்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள். மற்றபடி சர்வீஸ் இலவசம்...' என்றார், ஒருவர்.

அரை மணி நேரத்தில், மெக்கானிக் வந்து, 'வாஷரை' மாற்றி, வாயு கசிவை சரி செய்தார். பணம் எதுவும் வாங்காமல் கிளம்பியவர், 'இந்த அவசர எண், காஸ் சிலிண்டர் ரசீதின் பின்பக்கம் இருக்கிறது. நீங்கள் கவனிக்கவில்லையா...' என்று கேட்டார்.

ரசீதை எடுத்து பார்த்ததும், அந்த எண் இருந்தது. இவ்வளவு நாளாக இதை கவனிக்கவில்லையே என்று என்னை நானே நொந்து கொண்டேன். ஒரு மணி நேரத்திற்கு பின், 1906 எண்ணிலிருந்து போன் செய்து, 'மெக்கானிக் வந்தாரா, பிரச்னை சரியானதா...' என்று கேட்டனர்.

இது, மத்திய அரசு சேவை. 24 மணி நேரமும் கிடைக்கும். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.

ஜெ. கண்ணன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us