தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர்க் கூடித் தேர்... (15)

ஊர்க் கூடித் தேர்... (15)

ஊர்க் கூடித் தேர்... (15)


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபலங்களை விழாக்களுக்கு அழைத்ததில் பலவித அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரொம்ப நாட்களுக்கு முன்பே அணுகினாலும், 'அவசியம் வரேன். ஆனா, இவ்ளோ முன்கூட்டியே உறுதிபடுத்த முடியாது; அந்த நேரம் எப்படியோ தெரியாது...' என்பர்.

சரியென்று ஒரு மாதம் முன் கேட்டால், 'அடடா... முன்பே சொல்லியிருக்கக் கூடாது? கடைசி நேரத்துல வர்றீங்களே...' என்று, சிலர் பிசிறுவர்.

அதுபோல, டாக்டர் அன்புமணியை ஒரு சமயம், விழாவின் மூன்று வாரங்களுக்கு முன் தொடர்பு கொள்ள, 'சொல்கிறேன்...' என்றவர், பிறகு, 'இப்போ லோக்கல்ல கொஞ்சம் பிரச்னை. அடுத்த ஆண்டு கட்டாயம் வரேன்...' என்றார்.

விடாமல் அடுத்த ஆண்டும் துரத்த, ஒப்புக்கொண்டு அனைத்து ஏற்பாடுகளுக்கும் அருமையாய் ஒத்துழைத்தார்.

அவரது நிகழ்ச்சி என்றதும் பெருவாரியாக வரவேற்பு இருந்தாலும், ஒரு சாராரிடையே எதிர்ப்பு. நம் ஊரில் தான் கட்சி பேதம் என்றால், பிழைக்கப் போன இடத்திலும் கூட விடாமல் இந்த விரோதத்தை வைத்து, விதைத்து வளர்த்துக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்.

'அவர் வந்தால், நிகழ்ச்சியை புறக்கணிப்போம்...' என, நம் நட்பில் ஒரு குழுமம் கிளம்பிற்று. அதையும் சரிக்கட்ட வேண்டியதாகியது.

விசா, டிக்கெட் அனுப்பி, முதல் நாள் மாலை, அரங்கில் அலங்கார ஏற்பாடுகள் நடக்கும்போது, அன்புமணியிடம் இருந்து அழைப்பு வந்தது.

'மோகன்தாஸ், சாரி... எங்கள் கட்சியின் காடுவெட்டி குருவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில், நான் அங்கு வந்தால், சரியாக இருக்காது. வர இயலாது...' என்றார், உருக்கமாய்.

விளம்பரப்படுத்திட்டு, வரவில்லை என்றால் பெயர் கெடும். அதை தவிர்க்க, அவரே ஒரு யோசனை சொன்னார்.

'வர முடியாத என் நிலைமையை சொன்னால் எல்லாரும் புரிந்து கொள்வர். நான் வீடியோவில் பேசி அனுப்புகிறேன்...' என்று, அனுப்பி வைத்தார்.

வழக்கம்போல அலை மோதும் கூட்டம். அந்த வீடியோவை ஒளிபரப்பியதால், எங்கள் தலை தப்பியது.

'ஆடியன்சை நான் பார்த்துக்கிறேன்...' என்று சொல்லி, அதன்படியே கலகலப்பாய் யாருக்கும் குறை தெரியாத அளவில் பின்னி எடுத்து விட்டார், தொகுப்பாளினி அர்ச்சனா.

வாழ்வில் ஒவ்வொருவரிடம் பழகும்போதும், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. யாரிடமாவது கருத்து வேறுபாடு அல்லது எதிர்ப்பு என்றால் என்னைப் பொறுத்தவரை, அது அந்த காரியத்திற்கு மட்டும் தான். அதை நீட்டிக் கொண்டு போவதோ, பகைப்பதோ இல்லை.

எங்கெங்கு யார் யார் எந்தெந்த காரியங்களில் ஒத்துப்போகின்றனரோ, அவர்களுடன் இணைந்து ஐக்கியமாவது என் வழக்கம். இது, எஸ்.வி.சேகரிடம் நான் கற்றுக்கொண்டது.

எனக்கு, சேகருடன், 35 ஆண்டு நட்பு. சேகருடனான நெருக்கத்தை அவரது, 3,000 மற்றும் 5,000 நாடக சிறப்பு மலரில் ஆரம்பித்து, பல சந்தர்ப்பங்களில், 'சேகரின் குணம் - மனம் - காரம்' எனும் தலைப்பில் எழுதியிருக்கிறேன்.

உதவியாளர் வைத்துக் கொள்வதில்லை, சேகர். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அவரை நேரடியாக அணுகலாம். பழகியவர்களின் எந்த விசேஷம் அல்லது விழா என்றாலும், ஊரிலிருந்தால் அவசியம் கலந்து கொள்வது இவரது சிறப்பு.

'நாரதர்' என்ற பத்திரிகையின் எடிட்டராக இருந்தார், சேகர். அப்போது, எழுத்தில் வளர்ந்து வரும் நேரத்தில் தொடர் எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்து, அதை அட்டை படத்தில் வெளியிட்டு உற்சாகப்படுத்தியது மறக்க முடியாது.

சேகரின் நகைச்சுவையும், ஞாபக சக்தியும் அதிசயிக்க வைக்கும். சரமாரியாக உடனுக்குடன் பொங்கும் நகைச்சுவை, இன்று, நாடக உலகின் சூப்பர் ஸ்டாராக அவரை வைத்திருக்கிறது.

நாடக குழுவினர் ஒருவித காய்ச்சலுடன் வசனங்களை அசை போட்டுக் கொண்டிருக்க, சேகர் மட்டும் ஜாலியாக, மேடையின் பின்புறம் நண்பர்களிடம் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்.

அவர், காட்சி வரும்போது, ஓடிப்போய் நடித்து விட்டு வந்து மறுபடியும் பேச்சை தொடருவார். நாடகம் முடிந்ததும், காரில் ஏறி ஓடிவிடாமல் வாசலுக்கு வந்து நின்று, ரசிகர்களின் விமர்சனங்களை எதிர்கொள்வது இவரது இயல்பு.

நாடக குழுவை வெளிநாடு அழைத்துப் போய் நாடகம் போடுவதில் உள்ள பொருளாதார சிரமங்களை கருத்தில் கொண்டு, வசனத்தை முன்பே அனுப்பி, அந்தந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து, நடிக்க வைப்பார். தான் மட்டும் போய், அவரது கதாபாத்திரத்தை அவர்களுடன் நடித்து, நாடகம் போடும் உத்தியை ஆரம்பித்து வைத்தவர், சேகர். அது, மற்றவர்களாலும் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

என் ஒருங்கிணைப்பில், நான்கு முறை வந்து நாடகம் நடத்தியிருக்கிறார், சேகர். சினிமா உலகில் புகழ் மற்றும் பண போதை தலைக்கேறாத வெகு சிலரில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் ஒருவர். எளிமை, தன்னடக்கம், இனிய பழக்க வழக்கங்கள் உள்ளவர். போட்டி, பொறாமை, சதி, புறங்கூறல், கவிழ்த்தல் போன்றவை இவரிடம் இல்லாதிருப்பது வியக்கக்கூடிய விஷயங்கள்.

பகட்டின்மை, பிறர் நோகும்படி பேசாமை, வலிய சென்று உதவுதல், என்றும் எல்லாருக்கும் நல்லவராக இருத்தல் இவரது சிறப்பு அம்சங்கள். ஒருமுறை பழகிவிட்டால், மறக்க மாட்டார். ஏவி.எம்.,முடன் ஐக்கியமாகி, 25 ரஜினி படங்களுடன் பிற முன்னணி நாயகர்களையும் இயக்கியவர், இப்படி சாதாரணமாய் பழகுவது வியப்பு.

ஆனால் -

தான் விரும்பிய, வாழ்க்கையையே அர்ப்பணித்த சினிமாவே வேண்டாம் என்று பிள்ளைகளை வேறு துறைகளுக்கு அனுப்பியிருக்கிறார், முத்துராமன். அதற்கு காரணம்...

தொடரும்

என். சி. மோகன்தாஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us