தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விழுங்க முடியாத வெங்காயம்!

விழுங்க முடியாத வெங்காயம்!

விழுங்க முடியாத வெங்காயம்!


PUBLISHED ON : ஜூலை 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சார்... உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டும். பேச தயக்கமாகவும் இருக்கிறது...' என்று கூறினாள், காவ்யா.

எதிர் பிளாட்டுக்கு புதிதாக குடி வந்திருந்தனர் இளம் தம்பதியர் விஜயனும், காவ்யாவும்.

'என்னிடம் எதைக் கூற அவள் தயங்குகிறாள்... எது வேண்டுமானாலும் தயங்காமல் கூறலாம்...' என்று நான் கூறியவுடன், அவள், அந்த தகவலை பகிர்ந்து கொண்டாள்...

ஆறாவது மாடியில் குடியிருக்கும் குமரவேல், என் மகள் அர்ச்சனாவிடம், சமீப காலமாக அடிக்கடி பேசுகிறானாம். அவன், இதற்கான சந்தர்ப்பங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்வதாக தோன்றுகிறதாம்.

'தப்பா ஏதோ நடக்குதுன்னு நான் சொல்லல்லே... எனக்கு அந்த குமரவேல் பற்றி அதிகமா தெரியாது. ஆனா, உங்க குடும்பத்து மேலே இருக்கிற அக்கறையாலே இதை சொல்றேன்...' என்று கூறி, அவள் நகர்ந்து விட்டாள்.

அன்று மாலை-

மனைவியிடம் இதுபற்றி பேசிய போது, என் குரலில் கோபம் தென் பட்டது.

''நம்ம பொண்ணுக்கு என்ன வயசு?''

''இதென்ன கேள்வி... 14 முடிஞ்சு, 15 நடந்துகிட்டிருக்கு.''

''அவ நடவடிக்கையிலே இப்பல்லாம் ஏதாவது வித்தியாசம் தெரியுதா?''

''எனக்கு எதுவும் தெரியலே,'' என்று கூறியபோதே அவளிடம் ஒரு பதற்றம் தோன்றியது...

''என்ன ஆச்சு... ஏன் இப்படி கேட்கிறீங்க?''

''ஆறாம் மாடியிலே இருக்கிற குமரவேலோடு நம்ம பொண்ணு இப்பல்லாம் அடிக்கடி பேசறாளாம்.''

மனைவியின் முகத்தில் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஆசுவாசம் தென்பட்டது.

''அவரா... நம்ம மக வயசிலே அவருக்கும் ஒரு பொண்ணு இருக்கா,'' என்றார்.

''அப்படி இருந்தா, தன் பெண்ணிடமே அந்த ஆள் பேச வேண்டியது தானே?''

''என்னங்க இது... இந்த காலத்திலே பேசுவதையெல்லாம் வச்சு ஒரு முடிவுக்கு வர முடியுமா?''

''இந்தக் காலம் என்பதால் தான் பயமா இருக்கு. யாரையும் நம்ப முடியல்லே... இது மாதிரி சங்கடமான விஷயங்களை எல்லாம் நம்ம அர்ச்சனாகிட்டே என்னால பேச முடியாது. நீயே பக்குவமா எடுத்துச் சொல்லு.''

என்னை உற்றுப் பார்த்து, அரைகுறையாக தலையாட்டியபடி அங்கிருந்து அவள் நகர்ந்தாள்.

சில நாட்கள் சென்றன. தீபாவளிக்கு முன்தினம், எங்கள் பிளாட்டில் பொதுவான ஒரு கொண்டாட்டம் நடைபெற்றது. எல்லாரும் மகிழ்ச்சியாக தான் தென்பட்டனர். நான் மட்டும் அந்த குமரவேல் இருக்கும் திசையையே கவனித்து கொண்டிருந்தேன்.

அவனது மகன், தன் தோழியரை நோக்கி போக, அவன் சுவாரசியமாக, என் மகளிடம் பேசத் துவங்கினான்.

என்ன நடக்கிறது... என்ன விபரீதம் நடக்கப் போகிறது... மண்டைக்குள் பெரும் குழப்பம். 'அர்ச்சனா...' என்று, சற்று உரக்கவே கத்தி விட்டேன். அர்ச்சனா மட்டுமல்ல, வேறு சிலரும் கூட திரும்பிப் பார்த்தனர்.

''உடனே வீட்டுக்கு வா,'' என்றேன். திகைப்புடன் அவள் என்னை தொடர்ந்தாள்.

''அந்த குமரவேலுடன் உனக்கு என்ன வெட்டிப் பேச்சு... உன் வயசு பெண்களோட பேச வேண்டியது தானே... நான் ஏற்கனவே உனக்கு சொல்லி இருக்கிறேனா இல்லையா... வெளி மனுஷங்ககிட்டே அதிகமா தொடர்பு வச்சிக்கக் கூடாதுன்னு!''

அர்ச்சனாவின் முகம் சுருங்கியது. ''சொன்னீங்கப்பா...'' என்றவள், வெளியேறி விட்டாள். திகைப்புடன் பால்கனி வழியாக பார்த்தபோது, அவள், என் மனைவியுடன் இருப்பதும், கூடவே அவளது பள்ளித் தோழிகள் சிலர் இருப்பதையும் பார்த்து மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது.

மீண்டும் அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மனம் வரவில்லை. மிகவும் பசித்தது. கோபமோ, பயமோ உண்டாகும் போதெல்லாம், பசி உணர்வு ஏற்பட்டு விடுகிறது.

டைனிங் டேபிளில் உட்கார்ந்து, எனக்கு நானே சாதத்தை பரிமாறிக் கொண்டேன். எனக்கு பிடித்த சின்ன வெங்காய சாம்பார். கொஞ்சம் அதிகமாகவே ஊற்றி சாப்பிட துவங்கினேன்.

நாலைந்து கவளங்கள் விழுங்கியவுடன், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்ட உணர்வு.

இந்த வெங்காயம் உள்ளே போகாமல் ஏன் தொண்டையிலேயே நிற்கிறது... மூன்று டம்ளர் தண்ணீர் குடித்த பிறகும் நிலைமை சரியாகவில்லை. கழுத்தை பலவிதங்களில் ஆட்டிப் பார்த்தும், ஒரு பலனுமில்லை.

நல்ல வேளையாக, ராஜி வந்து சேர்ந்தாள். ''நம்ம அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கா... என்ன பசியா... என்னை கூப்பிட்டிருக்கலாமே.''

சைகையில் நான் விளக்க, சில நிமிடங்களுக்கு பின் தான் அவளால் நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தது. ''ஓ... வெங்காயம் தொண்டையில் மாட்டிக்கிச்சா... இப்ப சரியா யிடும்,'' என்றபடி ஒரு வாழை பழத்தை உரித்து கொடுத்தாள்.

வாழை பழத்தோடு வெங்காயம் உள்ளே சென்று விடும் என்ற அவள் நம்பிக்கை சரியாகவில்லை. தொண்டையில் வலி மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

என் பின் கழுத்துப் பகுதியை ஒரு தட்டு தட்டினாள், ராஜி. வெங்காயம் வெளிவந்து விடும் என்ற அவளது எண்ணம் கைகூடவில்லை. கொஞ்சம் எண்ணெய் கொடுத்து குடிக்கச் சொன்னாள். இதிலும் பலனில்லை.

என் தலைக்கு பின்னால் மீண்டும் எதையோ செய்வதற்காக, தன் இரண்டு கைகளை அங்கு எடுத்துச் சென்றவள், எதையோ நினைத்து, தலையை உலுக்கிக் கொண்டாள். 'முதல்ல அந்த ரெண்டு பல்லையும் கழற்றிக் கொடுங்க... சொல்யூஷனில் போட்டு வைக்கலாம்...' என்றாள்.

என் கீழ்புற பல் ஒன்றும், மேல்புற பல் ஒன்றும் விழுந்து விட்டிருந்தன. என் நண்பனான பல் டாக்டர், செயற்கை பற்களை பொருத்தினான்.

கீழே இருந்த பல்லை கழற்றிக் கொடுத்தேன். பிறகு மேற்புற கடைவாயில் பல் பொருத்தப்பட்ட பகுதியில் விரலை துழவியபோது, அங்கே அந்த செயற்கை பல்லைக் காணோம்.

அப்படியானால் உணவோடு சேர்ந்து அந்த பல்லும் தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

உடனடியாக நான்கு தெரு தள்ளியிருந்த காது, மூக்கு, தொண்டை டாக்டரை அணுகினோம். 'வாய்க்குள் டார்ச் அடித்து பார்ப்பார் டாக்டர். பின், போர்செப்ஸ் உதவியுடன் அந்த பல்லை வெளியே எடுப்பார்...' இப்படித்தான் எண்ணினேன்.

பரிசோதித்த டாக்டர், எக்ஸ் - ரே, ஈ.சி.ஜி., சோதனைகளை மேற்கொள்ள சொன்னார். எக்ஸ் - ரேயை பார்த்துவிட்டு, 'உணவுப் பாதையின் கீழ் பகுதியில் பல் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது, நுரையீரலின் நுழைவு பகுதியின் அருகே அது இப்போது இருக்கிறது. நிலைமை தானாக சரியாகவில்லை என்றால், நாளைக்கு ஓர் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மார்பு பகுதியை அறுத்து ஒரு மைனர் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கலாம்...' என்றார். மார்பு பகுதியை அறுத்து ஓர் அறுவை சிகிச்சை என்பது, 'மைனர் ஆபரேஷனா?'

அடுத்த நாள் அறுவை சிகிச்சை நடந்தது. பல்லை வெளியே நீக்கி விட்டனர். தொண்டையின் கீழ் பகுதியில் பல்லின் இருபுறமும் இருந்த சிறிய உலோக கம்பிகள் மாட்டிக் கொண்டிருந்தன. அதனால் தான் எளிய முறைகள் பலனளிக்கவில்லை.

ராஜியின் அண்மை நிம்மதியாக இருந்தது. கூடவே ஒரு குறுகுறுப்பு.

''வீட்ல அர்ச்சனா கூட யாரு இருக்காங்க... உங்க அம்மா இன்னும் ஊருக்கு போகலை தானே?''

போகவில்லை என்பது போல தலையசைத்தாள் ராஜி. சிறிது நேரம் மவுனத்தில் கழிந்தது. பின், ''பிரச்னை வெங்காயத்தால் தான்னு நீங்க தப்பா நினைச்சுகிட்டீங்க,'' என்றாள்.

''ஆமாம்... என் பல்லாலே தான்,'' என்றேன்.

ராஜி என்னை உற்று பார்த்தபடி, ''பிரச்னை வெளியே இல்லைன்னு சொல்ல வந்தேன்,'' என்று கூறியபடி, வென்னீர் எடுத்து வர வெளியே சென்றாள்.

என்ன சொல்கிறாள்... அதைத்தானே நானும் சொன்னேன். சட்டென ஓர் உறுத்தல் உண்டானது. 'பிரச்னை வெளியில் இல்லை...' என்பதற்கு ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றின.

'சொன்னீங்கப்பா...' என்று அர்ச்சனா அழுத்தமாக கூறியதற்கும் வேறொரு அர்த்தம் இப்போது புலப்பட்டது. 'சொன்னீங்கப்பா... ஆனா, சொன்னதோட சரி. நீங்களே அதன்படி நடக்கறதில்லை...' என்று அவள் கூற நினைத்தாளோ?

எதிர் பிளாட் காவ்யாவுடன் தினமும் நான் கொஞ்ச நேரம் பேசத்தானே செய்கிறேன்.

அர்ச்சனா கூறிய, 'சொன்னீங்கப்பா...' என்பதற்கு இன்னொரு அர்த்தமும் தோன்றியது. 'மீதி பேருடன் அதிகம் பேசக் கூடாதுன்னு சொன்னீங்க... அப்போ யாருடன் அதிகம் பேசணும்; அதை சொன்னீங்களாப்பா?'

சுரீர் என்றது. மகளுடன் நான் ஆத்மார்த்தமாக எதை பேசியிருக்கிறேன்... மேலோட்டமாக சில வாக்கியங்கள் மட்டும் தான். ஒருவேளை என் வயதுள்ள குமரவேல் மனம் விட்டு அவளிடம் பேசுகிறானோ... நான் வெளிப்படுத்தாத பாசத்தை அவன் காட்டுகிறானோ!

இப்போதெல்லாம் நான், அர்ச்சனா, குமரவேல் மற்றும் அவனது மகள் ஆகிய எல்லாருமே தினமும் கொஞ்ச நேரம் பேசிக் கொள்கிறோம். தவிர, வீட்டிலும், அர்ச்சனாவுடன் நான் அதிக தகவல்களை பகிர்ந்து கொள்வதை, ராஜி கொஞ்சம் வியப்பாகவே கவனிக்கிறாள்.

அருண் சரண்யா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us