தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/லிங்க வடிவ அம்மன்!

லிங்க வடிவ அம்மன்!

லிங்க வடிவ அம்மன்!


PUBLISHED ON : ஜூலை 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடவுளின் வடிவங்களில், உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகள் உண்டு. சிலைகள் அனைத்துக்கும் சரியான உருவமுண்டு. அருவம் என்பது, உருவமற்ற நிலை. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சிவனுக்கு, உருவம் கிடையாது.

மூலஸ்தானத்தில் எந்தச் சிலையும் இருக்காது. அருவுருவம் என்பது உருவமும், அருவமும் கலந்த ஒழுங்கற்ற நிலை. லிங்கத்துக்கு ஒரு வடிவம் இருக்கும். ஆனால், கண், காது, முகம் என எதுவும் இருக்காது.

பல கோவில்களில் அருவுருவமான லிங்க வடிவில் அருள்கிறார், சிவபெருமான். ஆனால், அம்பாளுக்கு அழகான உருவம் இருக்கும். அம்பாளும் எங்காவது லிங்க வடிவில் இருக்கிறாளா என்றால், பழனியில் இருந்து, 20 கி.மீ., (உடுமலையில் இருந்து, 18 கி.மீ.,) துாரத்திலுள்ள கொழுமம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

அமராவதி ஆற்றில், மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசியபோது, லிங்க வடிவ கல் சிக்கியது. அதை கரையில் போட்டுவிட்டு, மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலை வீச, அந்த கல் வந்துகொண்டே இருந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய அம்பாள், 'ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான்...' என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார், மீனவர். அவர்கள் அந்த இடத்துக்கு சென்ற போது, அந்த கல், மண்ணில் புதைந்து, ஒரு சிறுபகுதி மட்டும் வெளியே புடைத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவு தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே கோவில் கட்டி, மாரியம்மன் என, பெயர் சூட்டினர்.

இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள், மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையாவிளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

புதிய தொழில் துவங்கும் போதும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில், பூ வைத்து உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே, அதை செயல்படுத்தும் பழக்கம், இப்பகுதியில் நடைமுறையில் உள்ளது.

குதிரையாறும், அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால், 'கோட்டை மாரி' என்றும் இவளை அழைப்பர். குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர், 'குமணன் நகர்' எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால், 'குழுமூர்' எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே மருவி, 'கொழுமம்' என்றானது. கண் நோய் கண்டவர்கள், இங்கு தரப்படும் தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொள்கின்றனர்.

உருவமும், அருவமும் கலந்த இந்த அம்பாளை வேண்டினால், மழை பொழியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு போதுமான மழை பெய்ய, அம்பாளை வேண்டுவோம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us