PUBLISHED ON : ஜூலை 29, 2018

சிந்தனை செய் மனிதா!
வாழ்க்கை
ஒரு வெள்ளைச் சுவர் - அதில்
வண்ண ஓவியங்களை
வரைய வேண்டியது
நாம் தான்!
வாழ்க்கை
ஒரு வளம் நிறை நிலம் - அதில்
உழுது விதைத்து நீர் பாய்ச்சி
பயிர் வளர்க்க வேண்டியது
நாம் தான்!
வாழ்க்கை
ஒரு விளக்கில்லாத வீடு - அதில்
தீபங்களை ஏற்றி
ஒளியை பெற வேண்டியது
நாம் தான்!
வாழ்க்கை
ஒருநாள் முற்றுப்புள்ளி காணும்...
அதற்குள் அதை
வளமாக்க வேண்டியதும்
ருசிக்க வேண்டியதும்
ரசிக்க வேண்டியதும்
நாம் தான்!
நாம் விலங்குகளோ
பறவைகளோ
பூச்சிகளோ அல்ல...
மனிதர்கள்!
வெற்றிகளையும்
சாதனைகளையும்
படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்...
படைக்க வேண்டியவர்கள்!
ஏற்றிச் செல்லும் வண்டிகள்
இயந்திரமாக இருக்கலாம்
பயணம் செய்யும் மனிதர்கள்
இயந்திர வாழ்க்கையா
வாழ்வது?
உண்டு உறங்கி
மடிவதற்காக
உண்டானதல்ல
இந்த வாழ்க்கை - அதை
உணர்ந்து கொள்
உயர்ந்து நில்!
சிந்தனை செய் மனிதா...
நீ
செயற்கரிய
செய்யப் பிறந்தவன்.
செய்... ஜெகம் புகழ வாழ்!
- தங்கவேலு மாரிமுத்து, திண்டுக்கல்.
