தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உய்யடா உய்! - வட்டார மொழி சிறுகதை

உய்யடா உய்! - வட்டார மொழி சிறுகதை

உய்யடா உய்! - வட்டார மொழி சிறுகதை


PUBLISHED ON : பிப் 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காவியிலே அரசியலும் உண்டு; ஆன்மிகமும் உண்டு. விடலைப் பையன்கள் முதல் வேட்டி கட்டுகிற கேரளத்தில், வெள்ளை வேட்டிக்கும், லுங்கிக்கும் இடைப்பட்ட, வீட்டிலும், வெளியிலும் அணியத்தக்க, பொது உடையாக ஆவதும் உண்டு. வீட்டோடு சாமியாராக இருக்கிற சிவபாணச் சித்தரின் காவி, கல் - குருணை நீக்கப்பட்ட அக்மார்க் ஆன்மிகக் காவி. ருத்ராட்சம் - காவி தவிர, நீண்ட ஜடாமுடி, தனக்குத் தானே பேசிச் சிரித்தல், உலகின் மீது ஒரு எளக்கநாட்டப் பார்வை, சிவபாண மோனம், அந்த நிர்விகல்ய சமாதித் திளைப்பில சொரிந்து கொள்ள ஆட்டுத் தாடி, மோனம் களைகையில், ஆசீர்வாதமாக உதிரும், 'உய்யடா உய்!' ஆகியவை அன்னாரது இன்ன பிற சாமுத்ரிகா லட்சணங்கள்.

பட்டினத்தாரின் பரம பக்தரான அவருக்கு, பொம்பளை புள்ளைகள் என்றாலே, பொண்டாட்டி மாதிரி வெறுப்பு. பிரம்ம ராட்சசிகளும், யக்ஷிகளும், பூமியில் பெண் உருவில் அவதரித்திருப்பதாகக் கருதுபவர் அவர். மொத்தத்தில், பெண் இனம் என்பதே, ஆண்களை மயக்கி, ரத்தம் குடிக்க கூடியது; கடவுளுக்குச் சமமான நிலைக்கு உயரக்கூடிய தகுதியுள்ள ஆண்களை, அப்படி ஆக விடாமல், சாமான்யர்களாகவே இருக்க வைப்பதும், சம்சாரச் சாக்கடையில் சுகமாகப் புரளும் பன்றிகளாக ஆக்குவதும், இந்த பெண் என்ற மாயப் பிசாசுகளே!

பெண்களுடனான சிற்றின்பத்தை விலக்கி, அதற்கு செலவாகும் சத்தை சிந்தாமல், சிதறாமல் சேமித்து, குண்டலினி யோகம் மூலம் மேலெழுப்புவதால் சித்த நிலை - சிவ நிலை அடையலாம் என்பதே, அவரது உபதேசத்தின் சாராம்சம். பிறவிப் பிணி நீக்கும் அருமருந்தான, இந்த அண்டக் கசப்புக் கஷாயத்தின் கேப்ஸ்யூல் வடிவமே அவரது, 'உய்யடா உய்!'

'எத்தனை பேர் நட்ட, எத்தனை பேர் தொட்ட...' எனத் துவங்கும் பட்டினத்தாரின் பிரபலமான பாடலே, சிவபாணத்தாரின் தேசிய கீதம். அதன் ஈற்றடியான, 'உய்யடா, உய்யடா, உய்'யிலிருந்து எடுக்கப்பட்டதே அன்னாரின் மேற்படி கொள்கை விளக்க ஸ்லோகம்.

இடம், பொருள், ஏவல்களுக்குக் கட்டுப்படாதவர் சித்தர். கல்யாண மண்டபம், எழவு வீடு, கோவில் வளாகம் எதுவாக இருந்தாலும் சரியே; தன்னைக் கண்டு, மருகேதி நிமித்தம் எழுந்து நின்று, கும்பிடோ, அரை வணக்கமோ செலுத்தி, சவுகரியம் விசாரிக்கிற மெய்யன்பர்கள் எல்லாருக்கும், கட்டை விரலை உள்ளுக்கு மடக்கி, நாலு விரல் அகலம் காட்டியபடி, 'உய்யடா உய்' ஆசீர்வாதம் தான். கல்யாண மாப்பிள்ளை, போன நிமுசம் தாலி கட்டி மனைவியாக்கியவளோடு காலுல விழுந்தாலும் அதே!

வெறும் ஆசியோடு நில்லாமல், சந்தர்ப்பம் வாய்த்தால், அந்த தேவகானம் மட்டுமின்றி, பட்டினத்தாரின் ஏனைய பாசுரங்களையும், எட்டுக்கட்டை சுதியில் எடுத்துவிட்டு, அதற்கு பதவுரை, தெளிவுரை, பொழிப்புரை சகிதம் உபன்யாசங்களையும் நிகழ்த்திடுவார். சுருங்கக் கூறின், பட்டினத்தாரின் டிங்கிடிப் பாடல்களைப் பரப்புவதும், அதன் மூலம், டிங்கிடி எதிர்ப்பு விழிப்புணர்வை உருவாக்க, அயராது பாடுபட்டுத் தோற்பதுமே அவரது வாழ்க்கை எனலாம்.

கிட்டத்தட்ட, 67 ஆண்டுகளுக்கு முன், தாம் அவதரித்த, இப்போது ஐந்து தலக்கெட்டுகளைக் கண்ட, நூற்றாண்டுச் சிலுவானம் வயதான புராதன வீட்டிலேயே, சித்தர் இன்னமும் குடிகொண்டிருக்கிறார். அந்த காலத்தில், சித்தூர் தாலுக்கா முச்சூடுக்கும் உடமஸ்தராக (உரிமையாளராக) இருந்த சோண்டத்து ஜமினின், உள்ளூர் அள்ளக்கையாக இருந்த அவரது அப்பாறு கட்டிய வீடு அது. அவ்வப்போதைய மராமத்துகளும் உட்புற நவீனமயமாக்கல்களும் மட்டும் பிந்தைய தலக்கெட்டுகளால் செய்யப்பட்டவை. கட்டியது முதல் நாளிது வரை, ஊரில் உள்ள ஒரே கேரள பாணி நாலுகெட்டு வீடு அதுதான். இதனால், நாலுகெட்டு வீட்டுக்காரர்கள் எனக் குறிப்பிடப்படும் பெருமையையும், பரம்பரை பரம்பரையாகக் கொண்டிருந்தது அக்குடும்பம். இங்ஙனம், அந்த வீட்டால், மனிதர்கள் பெயர் பெற்றுக்கொண்டிருந்தது மாறி, ஒரு மனிதரால் அவ்வீடு பெயர் பெறும்படியாக, 'சித்தர் வீடு' என வழக்கானது, பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே.

ஏணிப் படிகளில் ஏறிச்செல்ல வேண்டிய, மெத்தை எனப்படும் அதன் மேல் தளப் பகுதியில், விசாலமானதொரு அறையே, சிவபாணச் சித்தர் அவர்களின் மெய்ஞானக் குகை. கீழ்த் தளத்தில் குடியிருக்கிற அவரது பூர்வாஸ்ரமங்களில் மகன்கள், மருமகள்கள் எல்லாரும், பண்ணையம் பார்க்க தோட்டத்துக்கும், லோகப் பிரசித்தி பெற்ற கட்டிப்புடி சாமியாரிணியின், கான்வென்ட்டில் படிக்கிற பேரக்குழந்தைகள், கோடை விடுமுறையில் அவரவர் அம்மாத்தா ஊர்களுக்கு ஒறம்பறைக்கும் போயிருகுக.

மெய்ஞானக் குகைக்குள் மேற்சொருகிய கண்களோடு, சித்தர் அவர்கள் பத்மாசனமிட்டிருந்தார். எதிரே பக்திப் பரவசத்தோடு அவரது அமெச்சூர் சீடன் தேவாங்கு, சுகாசனமிட்டிருந்தான். (சுகாசனம் என்றால் அதுவும் ஏதோ இடுப்பொடிக்கிற அஷ்டகோணல் ஆசனம் என மிரண்டுவிட வேண்டாம். சாதாரண சம்மணத்துக்குத்தான், யோக மொழியில் அந்த கவுரவப் பெயர்.)

சீனா பானா சித்தர் அவர்களின் சக்தி பீடமான சிவபாணத்துக்கு கருமருந்தான, அட்டப்பாடிப் பொட்டலத்தை வினியோகம் செய்பவன் தேவாங்கு. தற்போது அகழி என்ற பெயரிலும் அறியப்படுகிற அட்டப்பாடி மலைச்சாரல், 'வாற்று' (வடிசல்) எனப்படும் பட்டைச் சாராயம் காய்ச்சுதலுக்கும்; சிவபானம் என சித்தர் மொழியிலும், கோரக்கர் மூலிகை என சித்த வைத்தியத்திலும், மோகன மூலிகை என யோக சூத்திரங்களிலும் கூறப்படும், கஞ்சாவின் விளைச்சலுக்கும் பெயர் பெற்றது. வாற்று கடத்தல், கஞ்சா கடத்தல் என்று, குடிமக்கள் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள தேவாங்கு, அங்கிருந்துதான் சரக்குகளைக் கடத்திவந்து வினியோகம் செய்வான்.

அப்படி அவன் கொண்டு வந்திருந்த, பொட்டலங்களை, அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து எடுத்து, இரு உள்ளங்கைகளிலும் ஏந்தி, பூஜைக்கு கொடுப்பது போல, பவ்யத்துடன் நீட்ட, சித்தரின் மேற்சொருகிய கண்கள் அடிப்பார்வைக்கு மாறின. 'ஆஹாஹா... அட்டப்பாடி மோகினி வந்துட்டாளா? அருமை, அருமை!' எனப் புளகாங்கித்துக்கொண்ட அவர், தோள் துண்டை எடுத்து, இடுப்பில் கட்டி, 'எல்லாம் வெளிமயக்கே; இறைவா, கச்சி ஏகம்பனே!' என்று கை கூப்பி வணங்கி, பொட்டலங்களைத் தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்ட பின், பிரசாதம் வாங்குவது போல பயபக்தியோடு பெற்றுக் கொண்டார்.

முற்றும் உலர்ந்து விடாமல் வதங்கிய சருகாக இருக்கும் இலைகளை, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சம்பிரதாயப்படி இடது கையில் கொட்டி, சாஸ்திரப் பிரகாரம் வலது கைப் பெருவிரலால் தேய்த்து, நசுக்கி, பக்குவப்படுத்தலானார்.

பீடி ஒன்றை முனை கிள்ளி, ப்ரம்மபத்திர (புகையிலை) தூளை உதிர்த்துவிட்டு, அதன் வெற்றுக் கூட்டுக்குள் தீக்குச்சி முனை உதவியோடு, மேற்படிக் கருமருந்தை பரகாயப் பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) செய்வித்ததும், சிவபாணம் தயார்.

'சித்தருக்கெல்லாம் சித்தன், என்னப்பன் ஆதியோகியான சிவனோட பாணம் இது. அதனாலதான் இதுக்கு சிவபாணம்ன்னு பேரே ஆச்சு...' என்றபடி, அதே குச்சியில் கொளுத்திக்கொண்டு, உள்ளங்கைக்குள் கங்கு முனை உள்ளபடியாக, பெருவிரல் கவட்டுக்குள் பிடித்து, இரு கைகளையும் குவித்து மூடி, புகையை ஆழ இழுத்து உறிஞ்சினார். பச்சிலை கருகும் வாசனை, விரலிடுக்குகளில் கசிந்து பரவ, சித்தர் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.

''போதைலயே ராஜ போதை இதுதான்டா தேவாங்கு! அகில லோகத்துலயும் இத மிஞ்சறக்கு வேற போதை கெடையாது. தேவலோகத்துல தேவனுக, ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமான்னு அப்சரசுகளையெல்லாம், 'டில்லி முள்ளு ஆட்டம்' ஆட உட்டுப் பாத்துட்டே குடிச்சு மப்பேறிக் கெடந்தானுக பாரு... அந்த சோமபானம், சுராபானம் கூட, இதுக்கு கால் தூசுக்கு சமானமாகாது. காயகல்பம், கற்பக விருட்சம் எல்லாம் இதுதான்.

''அதனாலதான், இதப் பிரயோகம் பண்ற சாமானிய ஆளுக, இதுக்கு கொத்தடிமையாயிர்றானுக. வீரியம் தாங்காம, ஒவ்வொருத் தனுகளுக்கு தலைச்சோறும் நஞ்சுருது. என்னையப் பெலத்த சித்தருக, யோகீக, நெளுவு, சுளுவு தெரிஞ்சு பிரயோகம் பண்ணுனா... மூலாதாரத்துல மூன்ரைச் சுருள் சுருட்டி, கொறட்டைவுட்டுத் தூங்கிட்டிருந்தா குண்டலினி, மகுடீல புன்னாகவராளி வாசிச்சாப்புடி எணிச்சு (எந்திரிச்சு) ஆடி, பொணையலுக்கு (கலவிக்கு) நின்னாப்புடி நெட்டுக்கு நின்னு, சகஸ்ராரத்துல மாணிக்கத்தக் கக்கியே போடும்,'' என்று, இன்னொரு இழுப்பையும் இழுத்து லயித்தவர்...

''பொம்பளச் சுகம் சிற்றின்பம்; அதுக்கு சிங்கிள் ரூட்டுதான் உண்டு. இறைச் சுகம் பேரின்பம். அதை அடையறதுக்கு, டப்பிள் ரூட்டு இருக்குதுடா பங்காளின்னு, யோக சூத்திரங்களே மேப்புப் போட்டுக் குடுக்குது. ஒண்ணு - குண்டலினி யோகம்; அது என்னெ பாட்டி செவன். உன்னியொண்ணு, நம்ம ப்பெசல் - சிவபாணப் பிரயோகம். இது இட்டெறி சாட் கட்டு,'' என கஞ்சாபதேச சாரத்தையும் அருளினார்.

இழுத்துக் கொண்டிருந்த புகையின் வீரியம் அவரை கிறங்கடித்தது.

வெகு நேரமாகியும் சித்தர் பெருமான் கண் திறக்கவில்லை. அவரது பொடனிக்குப் பொறத்தால, உதிக்கவிருக்கும் ஒளிவட்ட தரிசனத்துக்காக சீடன் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கையில், இருந்தாற்போல அவர், 'உய்யடா உய்... உய்யடா உய்!' என்று சன்னதம் கொண்டு கூவினார். என்ன ஏதென்று புரியாமல், இவனும் குருவோடு கோவிந்தாவாக உய்யடா உய்யைப் போட்டுக் கொண்டிருக்கையில், பெருமானார், காக்கா வலிப்பு வந்தவராட்டம் கையைக் காலை உதறி, பத்மாசனச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

''என்னாச்சுங் சித்தரே... ஏதாச்சு பிரச்னைங்களா?'' என்று கேட்டது தான் கேடு...

''பிரச்னைன்னாலும் பிரச்னை பெரும் பிரச்னைடா தேவாங்கு. நம்மட தவத்தக் கலைக்கறக்கு, ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா, நாலு பேரும் கூட்டணியா வந்துட்டாளுகடா! சுத்திச் சுத்தி வந்து, டில்லி முள்ளு ஆட்டம் ஆடறாளுகளே சாமர்த்தியம்! 'ஆருகட்ட, சிவபாணத்தான் கிட்டயா? எம்சீல் வெச்சு அடைச்சுப் போடுவன், சாக்கிரதை'ன்னு முடுக்கியுட்டுட்டன். மெய்யால, இவளுகளால, நம்முளுக்கும் இன்னைக்கும் குண்டலினி கெட்டுடிச்சு. முக்கு முக்குன்னு முன்னூறு முக்கு முக்கி, கொரவளி முட்டும் மாணிக்கத்தக் கொண்டுட்டு வந்ததாக்கு! சித்தெ கிருமிச்சிருந்தா கக்கியே இருக்கும். ஆட்டக்கார அவுசாரிக கெடுத்தாளுக காரியத்த,'' என்று ஆவேசத்தைக் கொட்டிவிட்டு, மிச்சமிருந்த சிவபாணப் பொட்டலத்தை மடித்து, மற்ற பொட்டலங்களோடு பத்திரப்படுத்திக் கொண்டார்.

''எல்லாம் அந்த இந்தரன் பண்ற ஊமைக் குசும்புங் சித்தரே! உங்களையப் பெலத்த சித்தருக, நானிக, ரிசிமினீக தவம் பண்ணுனாலே அவனுக்குப் பொறுக்காது. மனுசருகளும் அவிகளாட்ட தேவருகளாயி, தேவலோகத்துக்குப் போயிட்டா, அவனோட பதவிக்கு ஆப்பு வெச்சுருவாங்களோன்னு பயம். அதனாலதான், சித்து வெடைகளைத் தாட்டியுட்டு சித்து காட்டறான், உங்ககட்டயே,'' என இவனும் மெப்புப் போட்டான்.

''தேவனாடா அவன்? தெல்லவாரி நாயி! கோதம ரிசி பத்தினியவே கோளியாட்ட கூகி, கொத்தி மிதிச்சுட்டுப் போனவனல்லொ! ஒண்ண வெச்சுட்டே பொம்பள புள்ளைக அந்த ஆட்டமாடறாளுகொ. மே< முச்சூடும் ஆயரம் மொளைச்சிருக்கற அவனுக்கு, கொஞ்சத்த மோளமா இருக்கும்? வெச்சுக்கறன் அவன! அம்மாவாசை சாமத்துல மந்தரம் போட்டு, கூப்புட்டு வந்து, கொறளி வித்தை காட்டாம உடப் போறதில்ல,'' எனக் கறுவியவர், மடியிலிருந்த துண்டை உதறித் தோளில் போட்டபடி எழுந்தார்.

சின்னக்கவுண்டர் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டால், மரத்தடிப் பஞ்சாயத்துக்குப் போகிறார் என்று அர்த்தம். சிவபாணத்தார் அதே செய்கையைச் செய்தால், ஊரை உய்விக்கக் கிளம்பி விட்டார் என்று அர்த்தம்.

லண்டன் டெய்லர் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருகின்றனரோ இல்லையோ, வெட்டி ஆபீசர்களுக்குக் குறைவிருக்காது.

ஜங்ஷன் எனப்படும் ஊர் மையத்தில் அமைந்துள்ள அக்கடை, பொழுது போக்க உகந்த புகலிடம். பொழுது போக்குனர்களுக்கு வேண்டியே கடைக்கு வெளியில், ஒரு குட்டிச் செவுத்தையும் கட்டி வைத்திருக்கிறார் டெய்லர். அதில் அமர்ந்து, பஞ்சாயத்து சேந்தி கிணத்திலோ, குழாயடியிலோ தண்ணி எடுப்பதற்கும், கடை கண்ணிகளுக்கும், பிரயாணங்களுக்கும் வந்து போகிற அசலாம் புள்ளைகள், பொண்டாட்டிகளின் அனாட்டமிகளை ரசிக்கலாம். அதில், எந்தெந்தப் புள்ளைகள் எவனெவனை லைனடிக்கறா, எவனெவன் பொண்டாட்டி எவனெவன் கூட வேலி சாடறா என்கிற துப்பறிதலில் ஈடுபட்டு, பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறார் லண்டன் டெய்லர். முல்லைப் பெரியாறு விவகாரம் முதல் பாகிஸ்தான் ஊடுருவல் வரை, ஈமு வளர்ப்பு முதல், ஏவுகணை சோதனை வரை, அவரோடு விவாதித்து, இந்தியாவின் எதிர்காலத்தை அஞ்சு நிமிஷம் பாஸ்ட்டாக்கலாம்.

ஓணம், பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போதும், பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதங்களில், கல்யாணம், காது குத்து போன்ற வீட்டு விசேஷங்களின்போதும் மட்டுமே, டெய்லருக்கு வேலைத் தெரக்கு மோட்டார் போடும்படி இருக்கும். மற்ற சமயங்களில், ஒண்ணோ அரையோ வருவதற்கு, பெடல் போட்டுக்கொண்டிருப்பதுதான். எப்படியிருந்தாலும், வேலையோடு வேலையாகவோ அல்லது அதுவே வேலையாகவோ வெட்டி நாயக்காரர்களுக்கு வளம் வெச்சுக் கொடுப்பார்.

விடலைகள் முதல், கெள்டு கட்டைகள் வரை, அவரவர் வயதுக்கும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் தகுந்தபடி பேசக் கூடியவர் அவர். அதனாலேயே வெட்டிக் கூட்டம் அங்கு கூடுகிறது என்பது மட்டுமின்றி, அவருக்குப் பழக்கமுள்ளவர்கள், தங்கள் அலுவல் நிமித்தமான பயண மார்க்கத்தில் ஜங்ஷனைக் கடக்க நேர்ந்தால், ஒரு எட்டு அவரை வந்து பார்த்து, சவுகரியம் கேட்டு பாடு பளமை பேசிவிட்டுச் செல்வதும் வழமை.

சேமலைக் கவுண்டரும் அன்று சப் சி.டி.விஷயமாக க்ருஷிபவன் (வேளாண் அலுவலகம்) போய், திரும்பு காலில் அப்படி வந்தவர்தான். கவுண்டர் குஷாலான பேர்வழி, அதிலும் கிளுகிளுப்பாகப் பேசுவதில் பிரியமுள்ளவர் என்பதால், அவர் வந்தாலே வெங்கலக் கடையில் ஆனை புகுந்தாப்புடி இருக்கும்.

'அப்பறம்பா லண்டன்னு... ஊருக்காள என்ன விசுவேசம், புதுசா எந்தப் புள்ள எவங் கூட ஓடிப் போச்சு... எவம் பொஞ்ஜாதி கள்ளப் புருசன் எக்ஸேஞ்சு ஆப்பரு பண்ணியிருக்கறா?' என்று தான் நாயத்தையே ஆரம்பிப்பார். இன்றைக்கு ஏனோ, ''அக்கினி நச்சத்தரம்ங்கறது செரியாத்தானப்பா இருக்குது. மணி அஞ்சாயும் மனுசன் வெளிய தலை காட்டப்பாங்கில்ல போ! அடிக்கற வெயில்ல அடிவாரக் காடே கருகீருமாட்ட இருக்குது,'' என்ற ஆவலாதியோடே நுழைந்தவர், ''என்னப்பா லண்டனு... மளக்காலம் வாறாக்காள நம்ம பண்ணையம் படல் சாத்தீருமாட்ட இருக்குது. கெணத்துல பொட்டு தண்ணீ இல்ல; கம்பரசரு வேற சுத்தமா வத்தீருச்சு; எண்ணுத்தம்பது அடி போரு போட்டும் வெங்கையாப் போச்சு. சீரளிவச் சொன்னா சீல ஏளு மொளம் கிளிச்சிரும்ங்கற கோப்புல, மொள்ளைலதான் வண்டியே ஓடிட்டிருக்குது. இந்த லட்சணத்துல சொசைட்டிலிருந்து வேற, மஞ்ச நோட்டிசுக்கு மேல மஞ்ச நோட்டீசா அனுப்பீட்டிருக்கறான்,'' என்று விவசாயிகளுக்கே உரித்தான புலம்பல் பாட்டையே பாடிக் கொண்டிருந்தார்.

ஆனைக்கும் அடி சறுக்கும், பூனைக்கும் பல்லு வலிக்கும் என்றிறாப்படி, கவுண்டருக்கும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தானே செய்யும் என்று எண்ணி, 'அப்புடீங்களா, அடப்பாவமே!' என்று மெப்புப் போட்டுக் கொண்டிருந்த டெய்லர், ''உங்குளுக்குன்னாலும் தேவுலீங் கவுண்ரே... இங்க டங்குவாரே அந்து கெடக்குதே! குடிக்கறதுக்கு, களுவறதுக்குக் கூட தண்ணியில்லாம பொம்பளைக, ஆம்பளைக எல்லாம் சேந்து, கொடத்த நடு ரோட்டுல வெச்சுக்கிட்டு மறியல் கிறியலெல்லாம் பண்ணீட்டல்ல இருக்கிறாங்க,'' என ஊரார் துயரங்களையும் எடுத்துரைத்து கொண்டிருந்தார்.

இன்னும் உக்கிரம் தணியாத சாயுங்காலச் சாய்வு வெயில், மொகரை கட்டையிலேயே அடிக்கும் என்பதால், குட்டிச் செவத்து வெட்டி ஆபீசர்கள் நிரந்தர வெ.ஆ.க்களான விடலைகள் மற்றும் தற்காலிக வெ.ஆ.க்களான நடுத்தரங்கள் அனைவரும் புலம்பெயர்ந்து, கடையின் உட்புறத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

நடைபெற்றுக் கொண்டிருந்த வறட்சிக் கருத்தரங்கத்தில் விடலைகள் அனைவருக்குமே சலிப்பு.

''அஞ்சு நிமுச டைட்டிலே பாக்க மாட்டம். நீங்க என்றான்னா அந்தக் காலத்துலயாட்ட அரை மணிக்கூர் டாக்குமென்ட்ரீல அறுத்துட்டிருக்கறீங்களே கவுண்ரே... பார்வேடு ஓட்டியுட்டு, படத்தை போடுங்கொ,'' என்றான் தொத்துக்காலன்.

''பாத்தையாப்பா லண்டனு... 'எளவுக்கு போனவ புருசனத் தின்னா: எதுக்க வந்தவ தாலியறுத்தா' என்ற கதையால, எந்த நாயி எக்கேடு கெட்டு, கொங்க நாயி குட்டி போட்டா எனக்கென்னொங்கற கோப்புல, பசங்க பஜனைக் கச்சேரி கேக்கறானுகொ,'' என்று கவுண்டர் அங்கலாய்த்துக் கொண்டிருக்கையில், முச்சந்தியிலிருந்து, 'உய்யடா உய்' என்று சிவபாணச் சித்தரின் அசரிரீ ஒலித்தது.

''உங்க நேயர் விருப்பத்த நெறைவேத்திப் போடலாமப்பா! சித்தரக் கூப்புட்டம்னா, பஜனைக் கச்சேரியென்னொ... பட்டணத்தாரு கான மேள (இன்னிசை கச்சேரி) நடத்திப் போடுவாறு. விளிப்புணர்வு படம்னாலும் குளி சீனாச்சும் இருக்கும்ங்கற கோப்புல, எஸ்ட்டா பிட்டுக எக்கச்சக்கமா இருக்கும்,'' என்றவர், கதவு நிலை வழி கழுத்தை நீட்டி, ''தேனுங்க சித்தரே... சித்தெ வந்துட்ட போங்கோ. ஒரு சமுசியம் கேக்கறக்கு இருக்குது,'' என்று தூண்டிலை வீசினார்.

சித்தரின் புருவம் இவரை நோக்கி நெளிந்தது. ஜங்ஷன் சுற்றுப்புறமெங்கும் ஓங்கி உலகளந்த பார்வை ஒன்றைப் படர விட்டவர், ஆட்டுத்தாடியை உருவியபடி, அண்ணாந்து ஆகாசத்தையும் அளந்தார். பின் விறுவிறுவென இறங்கி, லண்டன் கடையில் நின்றார். வெளி ஸ்டூலில் அமர்ந்திருந்த கோரா எழுந்து, ''உக்காருங்க பகவானே!''என்று இருக்கை கொடுத்தது. அதற்கும், 'உய்யடா உய்' என நாலு விரல் முத்திரை காட்டிவிட்டு பதியமிட்டுக் கொண்டார் சித்தர் பிரான். சீடன் தேவாங்கும் பக்கத்திலேயே பவ்யமாக நின்று கொண்டான்.

''இதுக்குத்தானுங் சித்தரே உங்களயப் கூப்பிட்டது. 'தென்னுங் கவுண்ரே, சித்தரு எப்பப் பாத்தாலும், 'உய்யடா உய், உய்யடா உய்'யின்னுட்டே இருக்கறாரே... அப்புடீன்னா என்னுங் அருத்தம்?'ன்னு நம்ம மைனருக நம்மடகட்ட சமுசியம் கேட்டானுக. அட, அது நாஞ் சொன்னா, 'கொங்கனுக்குத் தலையுமில்லை: கொளக்கட்டைக்கு வாலும்மில்ல'ங்கற கோப்புல இருக்கும்; நமக்கு அந்தப் பாட்டும் வேற தெரியாது; 'சித்தரையே கூப்புட்டுடறன்... வெகரமா, வெளக்கமாச் சொல்லுவாரு'ன்னேன். நீங்களும் பாருங் வந்தமானிக்கே, உய்யடா உய் போட்டுட்டீங்கொ,'' என்ற சேமலைக் கவுண்டர், ''தெங்க ... உங்க ஏத்தப்பாட்டு- எதிர்ப்பாட்ட முளுஸ்ஸ்ஸா.... எட்டுக் கட்டைல எடுத்துடுங்ளே கேக்குலா,'' என்று உஸ்படுத்தி விட்டார்.

சித்தருக்கென்ன கசக்கவா செய்யும்? அதுவும் எதிர்க்கட்சியிலிருந்து, சிறப்பு அழைப்பு விடுத்து, சரியாசனமும் கொடுத்து, கவுரவிக்கிற போது! தவிர அவரது உபதேசங்கள் போய்ச் சேர வேண்டியதே, இவர்களை மாதிரியான ஆட்களுக்குத்தானே! அதனால், அதி உற்சாகம் கொண்டு, அரைக் கட்டை கூட்டியே பாட ஆரம்பித்தார்.

அடுத்த இதழில் முடியும்.

ஷாராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us