/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பழைய நினைவுகளில் நீராட ஒரு, பொம்மைக் காதலன்!
/
பழைய நினைவுகளில் நீராட ஒரு, பொம்மைக் காதலன்!
PUBLISHED ON : மார் 09, 2025

கல்வி, அறிவியல், விஞ்ஞானம், வாகனம் மற்றும் தொழில்நுட்பம் என, மனிதனின் வாழ்வில் அத்தனையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். எவ்வளவு தான் மாறினாலும், வாழ்வின் கடைசி கட்டத்தில் தேடுவது, நம் பழைய நினைவுகளைத் தான்.
இளவயதில் நாம் விளையாடிய விளையாட்டுக்கள், நமக்கு கிடைத்த பொருட்கள், கிடைக்காத பொருட்கள் என, அத்தனையும் நம் ஏக்கத்தை அவ்வப்போது நினைவுப்படுத்தி விட்டு போகும்.
கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் கூட, தத்தம் குழந்தை பருவத்திலும், இளமை பருவத்திலும் தமக்கு கிடைக்காத ஒன்றை எண்ணி, எப்போதும் ஏங்கத்தான் செய்வர். தவிர, தாங்கள் அனுபவித்த இளமைக்கால நினைவுகள், பயன்படுத்திய பொருட்களை குழந்தைகளிடம் கூறி மகிழ்ச்சி கொள்வர். அந்தப் பொருளை உங்கள் குழந்தைகளுக்கு காட்டினால், எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்.
அதே போல், உங்களுக்கு கிடைக்காத, நீங்கள் தவறவிட்ட பொருட்கள், மீண்டும் உங்கள் கண்களில் பட்டால், எத்தனை சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.
அதைத்தான் நிரூபணமாக்கி இருக்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த, பொம்மை காதலனான ஜி.ஆர்.மகாதேவன்.
நாம் பார்த்து மகிழ்ந்த, பயன்படுத்திய, நாம் தவறவிட்ட பொருட்களை மொத்தமாக சேர்த்து, 'பொம்மை காதலன்' என்ற பெயரில், அருங்காட்சியகமாக உருவாக்கியுள்ளார்.
இந்த அருங்காட்சியகத்தை குழந்தைகள், மாணவர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள் என, அத்தனை பேரும் பார்த்து, தங்கள் பால்ய ஏக்கங்களை போக்கிக் கொள்கின்றனர்.
தொழிலதிபரான இவர், சிறுவயதில் தான் விரும்பிய பொம்மைகளை, ஆர்வமுடன் சேர்க்க ஆரம்பித்தார். அதுவே, இன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு தனியார் அருங்காட்சியகமாக உருவாகியுள்ளது.
ஜி.ஆர்.மகாதேவன் கூறியதாவது:
'தேடிச் சோறு தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடி துன்பமிக உழன்று, பிறர் வாட பல செயல்கள் செய்து, நரை கூடிக் கிழப் பருவ மெய்தி, கொடுங் கூற்று கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை மனிதர் போல், நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்ற, பாரதியின் வரிகள் தான், இந்த அருங்காட்சியகத்தின் ஆணி வேர்.
நாமும் வாழ்ந்தோம் என்று இல்லாமல், இந்த பூமியில் நாம் வாழ்ந்ததற்கு ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். அதன் அடிப்படையில் உருவானதே, அருங்காட்சியகம்.
சிறுவயது முதலே, 'டின் டாய்ஸ்' பொம்மைகள் மீது அதிக ஆர்வம் உண்டு. அதை ஆர்வமுடன் சேகரிக்க துவங்கினேன். சாதாரண ஊர்களில், சாதாரண மக்களிடம் இது பெரும்பாலும் கிடைக்காது. 'டின் டாய்ஸ்' பொம்மைகளை தேடித் தேடி சேகரித்தேன்.
என் ஆர்வத்தை அறிந்து நண்பர்கள், உறவினர்கள் பலரும் பொம்மைகள் பெற உதவினர். நான் சேகரித்த பொம்மைகளை வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் ரூபாய் நோட்டு, ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை சேகரிக்கத் துவங்கினேன். சேமித்த பொருட்களால் என் வீடு நிறைந்ததோடு, என் வீட்டிற்கு பொம்மை வீடு என்றே அடையாளமானது.
என் சேகரிப்பை பார்த்த, நல்லி குப்புசாமி மற்றும் 'தினமலர்' அந்துமணி ஆகியோர், அருங்காட்சியகம் அமைக்க, என்னை ஊக்கப்படுத்தினர்.
அவர்களின் ஊக்கத்தால் முதன்முதலாக, 2023ல், கொடைக்கானலில், 'விண்டேஜ்' அருங்காட்சியகம் அமைத்தேன். இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நான் பிறந்த செட்டிநாட்டில், 2024ல், என் வீட்டின் அருகில் பொம்மை காதலன் அருங்காட்சியகம் அமைத்தேன்.
ஐ.பி.எஸ்., அதிகாரி ஆபாஷ் குமார், அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தை பள்ளி - கல்லுாரி மாணவர்கள், இலவசமாக பார்வையிட அனுமதிக்கிறேன். மற்றவர்களுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இதில், விண்டேஜ் கார்கள், பைக்குகள், ராணுவ வீரர்களின் மெடல்கள், தலைவர்களின் மெடல்கள், டின் டாய்ஸ், கடிகாரங்கள், பழைய குளிர்பான பாட்டில்கள், பண நோட்டுகள், தியேட்டர் டிக்கெட், லைட்டர்கள்...
கேமராக்கள், தையல் மிஷின்கள், சமையலறை பொருட்கள், காலண்டர், அரசியல் வாழ்த்து மடல், நுால்கள், வார மற்றும் மாத இதழ்கள் உட்பட, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன.
எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள பழமையான பொருட்களை சேகரித்து விடுவேன். மனைவி பிரியதர்ஷினி மற்றும் என் பிள்ளைகள், என்னை ஊக்கப்படுத்துவதுடன், உறுதுணையாகவும் இருக்கின்றனர்.
விரைவில், மலேசியா நாட்டின் பினாங்கு நகரில் அருங்காட்சியகம் அமையவுள்ளது. சென்னையிலும் அருங்காட்சியகம் அமைக்கும் ஆர்வம் உள்ளது. வருமான நோக்கம் இல்லை. மாறாக, எனக்கு மன நிம்மதியை தருகிறது.
என்னைப் போலவே, இங்கு வரும் பலரும், கோவிலுக்குள் வருவது போன்று, 'பாசிட்டிவ்' அதிர்வலைகள் கிடைப்பதாக உணர்கின்றனர், என்றார்.
மேலும் தகவல் பெற, 98424 17051 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-ஆர். துரை கார்த்திகேயன்