
எட்டு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்த, நவின், சமையலறையில் இருந்த அம்மாவை தேடி வந்தான்.
சமையலறை மேடையில் ஏறி அமர்ந்தவன், ''என்னம்மா வழக்கம் போல் இட்லி - சட்னி தானே? ஓ.கே., எனக்கு சூடாக ஒரு டம்ளர் காபி,'' என்றான்.
''எத்தனை மணிக்கு எழுந்து வர்ற, நவின்? மணி எட்டு. இனி அரக்க பறக்க காலேஜ் கிளம்பணும். ஒரு நாளாவது காலையில் எழுந்திருக்கிறாயா? எல்லாமே லேட்,'' என்றவாறு, காபியைக் கலந்து அவனிடம் தந்தாள்.
''அம்மா, இப்படியே பழகிட்டேன். காலையில் எழுந்திருக்க வரமாட்டேங்குது. ராத்திரி எத்தனை மணியானாலும் கண் முழிச்சு படிக்க முடியுது. காலையில் நல்ல துாக்கம் தான் வருது,'' என்றான், நவின்.
சிரிப்போடு மகனை பார்த்தவள், ''அப்பாவைப் பார்த்து கத்துக்க, நவின். காலையில் 6:00 மணிக்கு எழுந்து, 'வாக்கிங்' கிளம்பிடறாரு, அப்பா. சரி, புது வருஷம் பிறக்கப் போகுது. இந்த புது வருடத்தில் புதுசா ஒரு முடிவு எடு. இந்த வருஷத்திலிருந்து காலையில் சீக்கிரம் எழுந்திருக்கப் போறேன்னு முடிவு பண்ணு. என்ன சொல்ற?''
அதே சிரிப்போடு, அம்மாவைப் பார்த்தவன், ''ஓ.கே., நானும் முயற்சி பண்றேன். அதேபோல புது வருஷத்தில் நீயும் இனி, பிரிஜ்ஜில் இருக்கும் பழைய சாம்பாரை சூடு பண்ணி, மறுநாள் தரமாட்டேன்னு முடிவு பண்ணு; புதுசாய் சமைச்சு சாப்பிடுவோம். என்ன சொல்ற?''
செல்லமான கோபத்தோடு மகனை அடிக்க வர, சிரிப்புடன் விலகி ஓடினான்.
''என்ன மகனோடு காலையில் அரட்டை?'' என்றபடி வந்த கணவனைப் பார்த்தவள், ''இந்த புது வருஷத்தில், நவினை சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கோன்னு சொல்றேன். அதுக்கு அவன் என்னை கிண்டல் பண்றான். நான் மாறணுமாம். பிரிஜ்ஜில் இருந்து பழச தரக்கூடாதாம்.''
''அவன் சொல்றதும் சரிதானே,'' என, மனைவியைப் பார்த்து சிரித்தார், அவள் கணவர்.
''அம்மா உனக்கு விஷயம் தெரியுமா? ஆர்த்திக்கு அடுத்த வாரம், 'என்கேஜ்மென்ட்' பேசி முடிக்கிறாங்களாம். ஆர்த்தி போன் பண்ணுனா.''
அவள் முகம் மாறியது.
''தெரியும், நவின். என் அண்ணன், 'மெசேஜ்' பண்ணியிருந்தார். உன் அப்பாவுக்கும் அனுப்பியிருந்தார். உனக்கு தான் தெரியுமே. உன் மாமாவோடு நம் உறவு, ஐந்து வருஷத்துக்கு முன்பே முடிஞ்சு போச்சு. இப்போது தொடர்பு எதுவும் இல்லை,'' என்றாள்.
நடந்து முடிந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தது, மனம்.
வியாபரத்தில் நஷ்டம் ஏற்பட, அண்ணனிடம் உதவி கேட்கும்படி கூறினார், கணவர்.
நல்ல நிலையில் இருந்தாலும், உதவும் மனப்பான்மை இல்லாமல், 'இப்போதைக்கு என்னால் உதவி செய்ய முடியாதும்மா. பணம் எல்லாம் வெளியே முடங்கிப் போச்சு. மாப்பிள்ளையை தப்பா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லு....' என்றார், அவளது அண்ணன்.
மனதில் இருந்த கோபத்தை வெளிக்காட்டாமல், எப்படியோ பலவிதத்தில் போராடி, நஷ்டத்தை சரி செய்தார், நவினின் அப்பா. கடின உழைப்பால் ஒரே வருடத்தில் திரும்ப பழைய நிலைக்கு பிசினஸை கொண்டு வந்தார்.
மனைவியிடம், 'உனக்கு இனி பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாமே இதுதான். உன் அப்பா, அம்மா போய் சேர்ந்தாச்சு. அண்ணனும் இல்லைன்னு நினைச்சுக்க. அவங்க உறவே நமக்கு வேண்டாம்...' என, உறுதியாக கூறிவிட்டார்.
ஐந்து வருடமாக பேச்சு வார்த்தை ஏதுமின்றி, உறவை ஒதுக்கி வாழ்ந்து கொண்டிருந்தாள்.
''என்னம்மா இது? ஐந்து வருஷமாக இப்படி அண்ணன் குடும்பமே வேண்டாம்ன்னு இருந்திட்டீங்க. இப்ப, அண்ணன் மகள் ஆர்த்திக்கு நிச்சயம் நடக்கப் போகுது. இனியும் பழைய பகையை மனசில் வச்சுக்கணுமா.
''ஏதோ மாமனுக்கு உதவ மனசில்ல. அதற்காக அந்த உறவே வேண்டாம்ன்னு நினைக்கிறியா. என்னம்மா நியாயம்? இப்ப நாமும் ஒண்ணும் கெட்டுப் போகலையே. நல்லாதானே இருக்கோம்,'' என்றான், நவின்.
''இருந்தாலும், இது நானும், நீயும் முடிவு பண்ற விஷயம் இல்லப்பா. நீ போயிட்டு வாப்பா. ஆர்த்தியை நான் கேட்டதாகச் சொல்லு,'' என, மன வருத்தத்துடன் சொன்னாள்.
அன்று மாலை, நவின், காலேஜில் இருந்து வர, ''நவின், அம்மாவை ரெடியாகச் சொல்லு. மூணு பேரும், 'ஷாப்பிங்' போயிட்டு வருவோம்,'' என்றார், நவினின் அப்பா.
''என்ன விஷயம், திடீர்ன்னு எங்க ரெண்டு பேரையும் வெளிய அழைச்சுட்டு போறேன்னு சொல்றீங்க?'' என்றாள், நவினின் அம்மா.
''நீ ரொம்ப நாளாவே கேட்டுட்டு இருந்த, 'சாப்ட் சில்க்' பட்டுப் புடவை வாங்கித் தரேன். நவினுக்கு புது டிரெஸ் எடுப்போம்.''
''என்னாச்சு உங்களுக்கு, திடீர்ன்னு எங்களுக்கு புது டிரெஸ் எடுத்துத் தரேன்னு சொல்றீங்க?'' என்றாள், நவினின் அம்மா.
''அம்மா... அப்பா இந்த வருஷம் நியூ இயருக்கு நமக்கு புது துணி எடுத்துத் தரப் போறாரு. கிளம்பும்மா போகலாம்.''
''அப்படியாங்க நியூ இயருக்கு வாங்கித் தரப் போறீங்களா?''
''நியூ இயருக்கு மட்டுமில்லை. அடுத்த வாரம், உன் அண்ணன் மகள் நிச்சயதார்த்தம் வருது இல்லையா. அதுக்கு போகத்தான் உனக்கு புது புடவை எடுக்கப் போறேன். எல்லாருமாக நிச்சயதார்த்த விழாவில் கலந்துக்கப் போறோம்.''
ஐந்து வருஷ பகையை மறந்து போகலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் கணவனை நம்ப முடியாமல், கண்கள் அகல, ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
''நிஜமாக தான் சொல்றீங்களா?''
''ஆமாம்மா. நீ, உன் மகனுக்கு சொன்னது தான். புது வருஷத்தில் உன்னை மாத்திக்க. நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கன்னு சொன்னே இல்லையா. அதே தான். ஏதோ நடந்து முடிந்த அந்த விஷயத்தை மறக்காமல், அதையே பெரிசா நினைச்சு, உறவே வேண்டாம்ன்னு ஒதுங்கி இருக்கிறோம்.
''நானும் இந்தப் புது வருஷத்தில் இருந்து என்னோட இந்த பகைமை உணர்வை விட்டுக் கொடுத்து உறவுகளோடு வாழணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். இது எனக்கு மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து உள்ளவங்களுக்கும் சந்தோஷத்தை கொடுக்கணும் இல்லையா. என்னோட இந்த புது வருஷ முடிவு சரிதானே,'' என்றபடி, இருவரையும் பார்க்க, சந்தோஷத்தோடு அப்பாவை தழுவினான், நவின்.
''இந்த புது வருஷம் அம்மாவுக்கு நிச்சயம் சந்தோஷத்தைக் கொடுக்கும். பிறந்த வீட்டு உறவு திரும்பவும் மலரப் போகுது,'' என்றான்.
மனம் நிறைந்திருக்க, இருவரையும் பார்த்து மகிழ்வோடு சிரித்தாள், நவினின் அம்மா.
பரிமளா ராஜேந்திரன்