
அன்புள்ள சகோதரி —
நான், 40 வயது ஆண். படிப்பு: பி.காம்., மனைவி வயது: 32. ஏழு வயதில், ஒரு மகள் இருக்கிறாள். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நான், வருமானம் போதாததால், 'டூ-வீலர்' மற்றும் நான்கு சக்கர வாகனங்களின், 'ஸ்பேர் பார்ட்ஸ்' கடை வைக்க விரும்பினேன். நான் முதலில் வசித்த, புறநகர் பகுதியில், அதற்கு வாய்ப்பு இல்லை.
என் பெற்றோர் இறந்து விட்டனர். எனக்கு ஒரு தங்கை, அரசு பணியில் இருப்பவள். சென்னை நகரின், பிரதான பகுதியில் தன் கணவருடன் வசித்து வந்தாள். தங்கை கணவர், ஏற்றுமதி தொழில் செய்பவர். வசதிக்கு குறைவு இல்லை.
என் வறுமை நிலையை பார்த்து, தங்களுடன் வந்து தங்கி, தொழிலை ஆரம்பிக்க சொன்னாள், தங்கை. அவள் கணவரும் வற்புறுத்தவே, தங்கையின் பங்களாவில் குடியேறினோம்.
வீட்டு வேலையை என் மனைவி கவனித்துக் கொள்ள, அவரவர் தொழிலில் கவனம் செலுத்தினோம். என் மகளையும், நல்ல பள்ளியில் சேர்த்தேன்.
நிம்மதியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில், சிறிது சறுக்கல். என் மனைவிக்கும், தங்கை கணவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு விட்டது.
இதை என் தங்கை தான் முதலில் கண்டுபிடித்து, என்னிடம் கூறினாள். தங்கை கணவரை, 'அண்ணா, அண்ணா...' என அழைத்த என் மனைவி, எனக்கு துரோகம் செய்து விட்டதை நம்ப முடியாமல் தவித்தேன்.
ஒருநாள் இரவு, மனைவியிடமே நேரிடையாக கேட்க, அழுது கொண்டே ஒப்புக் கொண்டாள்.
'என்னை மன்னித்து விடுங்கள். இனி தவறு செய்ய மாட்டேன். என்னை வீட்டை விட்டு துரத்தி விடாதீர்கள்...' என, காலைப் பிடித்து கெஞ்சி அழுதாள்.
மனைவியின் உடன் பிறந்தவர்கள், ஐந்து பெண்கள். கடைசி இரு தங்கைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும், என், ஏழு வயது மகளுக்கு தாயின் பராமரிப்பு தேவை. இதையெல்லாம் மனதில் வைத்து, அவளை மன்னித்தேன். வேறு பகுதிக்கு வீட்டையும் மாற்றிக் கொண்டு சென்றேன்.
ஆனால், அவள் செய்த துரோகத்தை மறக்க முடியாமல், துாக்கமின்றி தவிக்கிறேன். தொழிலில் கவனம் சிதறுகிறது. பெண்களை பார்த்தாலே கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் வருகிறது. தங்கையிடம் சகஜமாக பேசக் கூட முடியவில்லை. தங்கையின் கணவரோ ஏதும் நடக்காதது போல், பந்தாவாக நடமாடி வருகிறார்.
தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது. இதிலிருந்து மீள்வது எப்படி, சகோதரி.
—இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
சமீப காலங்களில், திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பரஸ்பரம் ஒரு பரபரப்பான சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது.
உன் மனைவியை பிடிக்க, தங்கையின் கணவர் என்ன வகை துாண்டிலை பயன்படுத்தி இருப்பார்?
பணம், நகைச்சுவையான பேச்சு, பர்சனாலிட்டி. உன் மனைவியும், தங்கை கணவரும் தனித்திருக்க வாய்ப்புகள் அதிகமாயிருந்தது. உன்னுடன் ஆன தாம்பத்யத்தில் அதிருப்தி?
திருமண பந்தம் மீறிய உறவு பற்றி கேட்டபோது, உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். உன் மனைவியும் சரி, தங்கை கணவரும் சரி, இந்த திருமண பந்தம் மீறிய உறவுக்காக, தங்கள் குடும்பங்களை புறக்கணித்து எங்கும் ஓடி போய் விடவில்லை.
தங்கையின் கணவர் ஏதும் நடக்காதது போல, பந்தாவாக நடமாடி வருகிறார் என்றால், அது பயம் கலந்த நடிப்பு.
அவர்களை முழுமையாக மன்னித்து விடு. தங்கையிடம் பேசி அல்லது கணவருக்கு முழுமையான எச்சரிக்கையை செய்ய வை.
நிறைய சம்பாதிக்கும் வழிகளை தேடு.
தற்கொலை எண்ணம் தவறு. நீ, தற்கொலை செய்து கொண்டால், உன் மகளின் எதிர்காலம் பாழாகும். மீண்டும் உன் மனைவி திருமண பந்தம் மீறிய உறவை நாடும் கட்டாயம் வந்து விடும்.
தப்பு செய்யும் பெண்களை தேடி தேடி கொலை செய்பவன், சைக்கோ. நீ சைக்கோவா அல்லது நல்ல குடும்பஸ்தனா?
உன் அவசர செயல்களால், தங்கையின் திருமண வாழ்வு சிதறிவிடக் கூடாது.
மனைவியுடன் முழுமையான தாம்பத்யம் மேற்கொள். தாம்பத்யத்தின் போது ஒப்பீடு பேசி அவளின் மனதை புண்படுத்தாதே!
குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வா.
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.