
ஒரு முறை கல்கி, டி.கே.சிதம்பரம், ம.பொ.சிவஞானம் ஆகிய மூவரையும் ஒரு கூட்டத்திற்கு சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர்.
மேடையில் அவர்களை அறிமுகப்படுத்திய விழாக் காரியதரிசி, 'இப்போது மும்மணிகள் பேசுவர்...' என்றார்.
அடுத்து பேச வந்த கல்கி, 'மும்மணிகள் பேசுவர் என, காரியதரிசி அறிவித்தார். ஒருவர், ரசிகமணி - டி.கே.சி., மற்றொருவர் கிராமணி - ம.பொ.சி., மூன்றாவது மணியாக இருக்க, நான் ஒரு பெண்மணி கூட இல்லையே...' என்றார்.
இதைக் கேட்டதும், சிரிப்பால் அதிர்ந்தது, கூட்டம்.
*****
ஒருநாள் இரவு, தன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலாவிக் கொண்டிருந்தார், பிரெஞ்சு சக்கரவர்த்தி மாவீரன் நெப்போலியன் போனபார்ட். அப்போது, காவல் பணியிலிருந்த ஒரு வீரன் துாங்கி வழிந்து கொண்டிருப்பதை கண்டார்.
ஏதோ ஒரு வேலையாக அந்த பக்கம் வந்த, தளபதியும் அந்தக் காட்சியை கண்டு திடுக்கிட்டார்.
'அரசே, காவல் பணியிலிருக்கும் ஒரு வீரன் துாங்குவது மிகப்பெரிய குற்றமாகும். இது அவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் கடமையை அலட்சியப்படுத்தி விட்டு துாங்குகிறான். அவனுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்...' என்றார், தளபதி.
அதற்கு, 'இல்லை தளபதியாரே... அவன் தன் கடமையை அலட்சியப்படுத்தி இருக்க மாட்டான். அவன் அதிகமாய் உழைத்திருக்க வேண்டும். அதனால் தான், அவன் உடல் சோர்ந்து அவனுக்கு துாக்கம் வந்து விட்டது.
'துாக்கம், தானே வருவது. அது அவனுக்கு தேவை. அவன் துாங்கட்டும்...' எனச் சொல்லி, கீழே இறங்கி போய், அவனுடைய துப்பாக்கியை எடுத்து, அவனது காவல் பணியைச் செய்யத் துவங்கினார், நெப்போலியன்.
கண்டிப்புக்கு பெயர் போனவராக இருந்தாலும், அவருக்குள் எதார்த்தமான மனிதாபிமான உணர்வும் இருப்பதை எண்ணி திகைத்தார், தளபதி.
*****
மின்சாரம் தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மின்சார மோட்டாரை கண்டுபிடித்தார், விஞ்ஞானி மைக்கேல் பாரடே.
ஒருநாள், பாரடேவை சந்தித்தார், அவரது நண்பர், வில்லியம் கிளாட்ஸ்டோன்.
'பாரடே இப்படி மின்சாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீரே... இதனால், பயன் ஏதாவது உண்டா?' எனக் கேட்டார், கிளாட்ஸ்டோன்.
அதை கேட்டு புன்சிரிப்புடன், 'பலன் இல்லாமலா இவ்வளவு காலம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்தேன். பாருங்கள் ஒருநாள் இதற்கு நீங்கள் வரியும் செலுத்துவீர்கள்...' என்றார், பாரடே.
எத்தனை உண்மை!
*****
ஒருசமயம், எட்வர்ட் தாம்ஸன் என்ற ஆங்கிலேயர், காந்திஜியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சினுாடே, 'தற்சமயம் உலகம் முழுவதிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது எனக்கு கவலை அளிக்கிறது...' என்றார், எட்வர்ட் தாம்ஸன்.
அதற்கு, புன்முறுவலுடன், 'அதனாலென்ன நகரங்களில் தான் அவற்றின் எண்ணிக்கை பெருகி வருகிறதே...' என்றார், காந்திஜி.
கவலையோடு இருந்த, எட்வர்ட் தாம்ஸன், காந்திஜியின் நகைச்சுவையை கேட்டு சிரித்து விட்டார்.
நடுத்தெரு நாராயணன்