
அன்புள்ளஅம்மாவுக்கு —
நான், 32 வயது ஆண்; பெற்றோருக்கு ஒரே மகன். அப்பாவுக்கு சொந்த பிசினஸ். நான் படித்து முடித்ததும், பிசினசில் சேர்ந்து, தொழிலை கற்றுக்கொள்ள சொன்னார்.
இரண்டு ஆண்டுகள் எங்காவது வேலை செய்து, பிறகு பிசினசை கவனித்துக் கொள்வதாக கூறி, படிப்பை முடித்ததும், மும்பைக்கு சென்றேன். அப்பாவின் நண்பர் மூலமாக கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.
என், 30வது வயதில், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், பெற்றோர். ஆனால், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி விட்டேன்.
இதற்கிடையில், என் நண்பனுடன், 'பைக்'கில் சென்றபோது, விபத்தில் சிக்கினோம். நண்பனுக்கு தான் அதிக காயம். எனக்கு சிறிதளவு தான் பாதிப்பு என்று மருத்துவர் கூறினார். சிகிச்சை முடிந்த சிறிது நாட்களுக்கு பின், அடி வயிற்றில் அடிக்கடி வலி வர, மருத்துவரை சந்தித்தேன்.
பலவித பரிசோதனைக்கு பின், நிறைய மாத்திரைகள் கொடுத்து சாப்பிட சொன்னார். திருமணம் செய்யும் எண்ணம் இருந்தால், தள்ளிப்போட கூறினார். எனக்குள் லேசாக சந்தேகம் வர, வேறொரு மருத்துவரை பார்த்தேன். அவர், நான் திருமண வாழ்க்கைக்கு தகுதி இல்லை என்று கூறி, அதிர வைத்தார்.
இதை எப்படி பெற்றோரிடம் கூறுவது என்று தயங்கினேன். ஆனால், அவர்களாகவே சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்து, எனக்கு தகவல் அனுப்பினர்.
ஊருக்கு சென்று எவ்வளவோ மறுத்தும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி, கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.
மனைவியிடம் விஷயத்தை கூற தைரியமில்லாமல், இரண்டொரு நாள் அவளிடமிருந்து தள்ளியே இருந்து, 'அவசர வேலை இருக்கிறது...' என்று கூறி, மும்பை சென்று விட்டேன்.
அப்பாவிடம், டாக்டர் அளித்த மருத்துவ ரிப்போர்ட் அனைத்தையும் காண்பித்து, உண்மையை கூறி விட்டேன்.
'நான் மறுத்தும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கி விட்டீர்கள்...' என்று கூற, நிலைகுலைந்து போனார், அப்பா.
இந்த விஷயத்தை சம்பந்தி வீட்டிலும், மருமகளிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். எங்களுக்குள் நடக்கும் இந்த மவுன போராட்டத்தை பார்த்து அம்மாவும், மனைவியும் குழம்பி போயுள்ளனர்.
விஷயத்தை எப்படி கூறுவது என்று புரியவில்லை. என்னை கேவலமாக நினைத்துக் கொள்வரோ, எல்லார் முன்னிலையிலும் தலைகுனிவு ஏற்படுமோ என்று பயப்படுகிறேன். தக்க ஆலோசனை கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
குடிகார கணவனை கூட மன்னித்து குடும்பம் நடத்துவாள், ஒரு பெண். ஆனால், ஒருபோதும் ஆண்மையில்லாத கணவனை சகித்து, குடும்பம் நடந்த மாட்டாள். சம்சாரக் கப்பலுக்கு நங்கூரம், ஆண்மை.
உன் முதல் தவறு, 30 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல், கோவில் காளை போல் திரிந்தது.
இரண்டாவது தவறு,- பைக் விபத்தில் ஆண்மை இழந்த பின்னும், அப்பாவி பெண்ணை மணந்து, அவளின் வாழ்க்கையை கெடுத்தது.
உனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன், பெற்றோரிடம் அனைத்து உண்மைகளையும் கூறி, திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.
அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:
மனைவியை அழைத்து அவளிடம் பேசு. முதலில் அவளிடம் மன்னிப்பு கேள். மருத்துவ அறிக்கையை மனைவியிடம் கொடு. உனக்கு ஆண்மைக் குறைவு தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பதை விபரி.
சில பெண்கள் தியாக உணர்வுடன், தாம்பத்யம் இல்லாவிட்டாலும், உங்களுடன் சேர்ந்து வாழ்கிறேன் என்பர். சேர்ந்து வாழும்போது என்ன பிரச்னை என்றாலும், 'நீ ஆண்மையில்லாதவன் தானே? நீ அப்படிதான் இருப்பாய்...' என, குத்தி காட்டுவர். ஆகையால், நிரந்தர பிரிவே உசிதமானது, மகனே!
வழக்கறிஞரை பார்த்து, குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்து பெற ஏற்பாடு செய்.
ஆண்மை இல்லாதவனை மணந்து, மன உளைச்சலுக்கு ஆளான, மனைவி கேட்கும் நஷ்டஈட்டை முன் வந்து கொடு.
மகள் மூலமாக, மாமனார் - மாமியாருக்கு விஷயம் தெரிந்து, அவர்கள் உன் முகத்தில் காரி துப்பினாலும், மவுனமாக தலைகுனிந்து நில். நீ ஆண்மை இல்லாதவன் என்ற உண்மை தெரியாத நிலையில் தான், பெற்றோர் உனக்கு திருமணம் செய்து வைத்தனர். அதனால், அவர்கள் மீது துளி தவறு இல்லை. சம்பந்தி வீட்டார், உன் பெற்றோரை இழிவுபடுத்தி விடாமல் பார்த்துக் கொள்.
விவாகரத்துக்கு பின், நீ, உன் பெற்றோருடன் சேர்ந்து வாழ். ஒருவருக்கொருவர் தார்மீக ஆதரவாய் இருப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபட்டு, யோகா, தியானத்தில் அமிழ்ந்து போ. வீட்டில் நாய், பூனை வளர். உன் முன்னாள் மனைவியின் மறுமணத்திற்கு சகலவிதங்களிலும் உதவு.
உன் மீதி வாழ்நாளை அர்த்தப்பூர்வமாக்கு.
—என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.