
மார்ச், 12, 1908ல், 'துாத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது...' என, தடைவிதித்திருந்தார், ஆஷ் துரை. அதை மீறி பேசியதற்காக, தேச துரோக வழக்கு பதிவு செய்து, வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா மற்றும் பத்பநாம ஐயர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது, ஆங்கிலேய அரசு.
வ.உ.சி., மற்றும் சுப்பிரமணிய சிவா மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சிறையில் சித்திரவதை செய்ய மூளையாக செயல்பட்டவர், ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் என்ற ஆஷ் துரை.
வ.உ.சிதம்பரனாருக்கு இழைத்த கொடுமை அறிந்த, வ.வே.சு., ஐயரும், தேச பக்த இளைஞர்களும், ஆஷ் துரையை கொலை செய்வதென முடிவு செய்தனர்.
ஆஷ் துரையை யார் கொல்வது என்பதில் நிலவிய போட்டியில், வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல இளைஞர்களின் பெயர்களை குலுக்கி போட்டு எடுத்தனர். அதில், அந்த வாய்ப்பு வாஞ்சிநாதனுக்கு கிடைத்தது.
ஆஷ் துரையை குறி தவறாமல் சுடுவதற்கு வாஞ்சிநாதனுக்கு, மூன்று மாதம் பயிற்சி, புதுச்சேரியில் கொடுக்கப்பட்டது.
கலெக்டர் ஆஷ் துரையை கொல்வதற்கு பிரான்சிலிருந்து, பெல்ஜியம் நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'பிரவுனிங் ஆட்டோமெடிக் பிஸ்டல்' வரவழைத்து, வாஞ்சிநாதனுக்கு கொடுத்தார், வ.வே.சு., ஐயர்.
ஆஷ் - மேரி தம்பதியினருக்கு மோலி, ஆர்தர், ஷீலா மற்றும் ஹெர்பர்ட் ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். அவர்களை கொடைக்கானலில் வீடு வாடகைக்கு எடுத்து படிக்க வைத்து வந்தனர்.
ஜூன், 17, 1911ல், ஆஷ் மற்றும் மேரியும் குழந்தைகளை காண, கொடைக்கானல் செல்ல முடிவு செய்தனர். அதற்காக, திருநெல்வேலி ஜங்ஷனில் மணியாச்சி ரயிலில் காலை, 9:30 மணிக்கு ஏறினர்.
அதே ரயிலில், வாஞ்சியும், பாரத மாதா சங்க மூன்று உறுப்பினர்களும், இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தனர். சரியாக காலை, 10:40 மணிக்கு மிக நேர்த்தியாக கோட் அணிந்து அழகாக தலை சீவியிருந்த இரு இளைஞர்களும், வேட்டி கட்டிய மற்றொரு இளைஞரும், ஆஷ் துரை மற்றும் மேரி அமர்ந்திருந்த பெட்டிக்குள் நுழைந்தனர். ஆஷை அணுகி, 'குட் மார்னிங், ஆஷ்...' என்றனர்.
ஆஷ் வெறுப்புடன், 'குட் மார்னிங்' சொல்லி விட்டு, கையசைப்பால் விலகிச் செல்லுமாறு ஆணையிட்டார். அதற்குள் கோட் அணிந்திருந்த வீர வாஞ்சி, கைத் துப்பாக்கியை எடுத்து, ஆஷ் துரையின் நெஞ்சில் குறி பார்த்து சுட்டார். கலெக்டர் ஆஷ் துரை சரிந்து விழ, மேரி கதறினாள்.
கலெக்டர் ஆஷ் துரையின் ஆட்களும், அங்கிருந்த போலீசாரும் வாஞ்சிநாதனை பிடிக்க துரத்தினர். அவர்களிடமிருந்து, வாஞ்சிநாதன் திமிறி ஓடி, பிளாட்பாரத்தில் இருந்த கழிவறைக்குள் ஒளிந்து கொண்டார்.
அதே துப்பாக்கியால் வாயில் சுட்டுக்கொண்டு, வீர மரணத்தை தழுவினார், வாஞ்சிநாதன்.
உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்து இருந்தார், வாஞ்சிநாதன். கோட்டின் ஒரு பாக்கெட்டில், பிரான்சில் தயாரிக்கப்பட்டது என்று எழுதியிருந்த மணி பர்சும், ராணி விக்டோரியா படமும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆயுதத்தின் படங்களும், இரண்டாம் வகுப்பு ரயில் பயண டிக்கெட்டும், ஐந்து அணா காசு மற்றும் சில பொத்தான்களும் இருந்தன.
மேலும், மற்றொரு பாக்கெட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில்...
'ஆங்கிலேய சத்துருக்கள், நம் தேசத்தை பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தை அழித்து சுவாசம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயனை துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்.
'மேலும், எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தன், அர்ஜுனன் முதலியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், எருது மாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனுக்கு முடி சூட்ட பெரு முயற்சி நடந்து வருகிறது.
'அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே கொல்ல உறுதி எடுத்துள்ளேன். அதன் முன்னெச்சரிக்கையாகவே இன்று இச்செய்கையை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை...' என, எழுதப்பட்டிருந்தது.
- எஸ். முத்துவீரன்

