
அன்பு சகோதரிக்கு —
நான், 64 வயதான ஆண். மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். என் மனைவி, நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள். எங்களுக்கு இரு மகள்கள். டாக்டருக்கு படித்து, திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கிறாள், மூத்த மகள்.
நான், சென்னையில் சொந்த வீட்டில் தனியாக வசிக்கிறேன். சமையல்கார மாமி ஒருவர், தினமும் வந்து சமைத்து கொடுப்பார்.
இரண்டாவது மகளை, பி.இ., படிக்க வைத்தேன். ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து, பெங்களூருக்கு சென்று விட்டாள். தினமும் போனில் பேசிக் கொள்வோம். மாதத்துக்கு ஒருமுறை சென்னை வந்து என்னுடன் தங்கியிருந்து செல்வாள்.
இன்ஜினியரிங் படித்த வரன் வரவே, இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். நல்லவன் என்று நினைத்த மாப்பிள்ளை, 'சாடிஸ்ட்' ஆக இருந்தான். என் மகளை படாதபாடு படுத்தினான். தினமும் அழுது புலம்புவாள், மகள். அவனது, 'டார்ச்சர்' தாங்காமல், மகள் தற்கொலைக்கு முயல, தக்க சமயத்தில் காப்பாற்றினோம்.
உடனடியாக, விவாகரத்து பெற்று கொடுத்தேன். சிறிது நாட்கள் சோகமாக இருந்தாள். அவளை மீட்டெடுக்க, மும்பையில், ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தேன். சில மாதங்களில், 'நார்மல்' ஆனாள், மகள்.
ஆறு மாதத்துக்கு முன், தான் வேலையை விட்டு விட்டதாகவும், நாலைந்து நண்பர்களுடன் சேர்ந்து, தனியாக கம்பெனி வைத்துள்ளேன். எனவே, தொழிலில், 'ஸ்டெடி' ஆகும் வரை ஊருக்கு வர இயலாத நிலை என்று கூறினாள். சரி என்று சொல்லி விட்டேன். மொபைல் போனில் பேசுவது குறைந்தது.
'நான் அங்கு வந்து, உங்களுக்கு ஏதாவது உதவி செய்யவா?' என்று கேட்டேன்.
'தொழிலில் கால் ஊன்றும் வரை தொந்தரவு செய்யாதீர்கள். நிலைமை சீரானதும், நானே வருகிறேன்...' என்று கூறி, மறுத்து விட்டாள். மீறினால், ஏதாவது விபரீத முடிவெடுத்து விடுவாளோ என, பயந்தேன்.
மூத்த மகளுக்கு தகவல் சொல்லி, அவளிடம் பேசி பார்க்க சொன்னேன். அவளிடமும் அதே பதிலை கூறியிருக்கிறாள்.
சமீபத்தில், ஒருநாள் திடீரென வீட்டுக்கு வந்தாள். முகம் எல்லாம் கறுத்து, எதையோ பறிகொடுத்தது போல் காணப்பட்டாள். ஏதாவது கேட்டால், மேலும் மனம் உடைந்து விடுவாளோ, அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
ஒருவாரம் ஆனதும் கேட்டேன். 'கொஞ்ச நாள் இங்கேயே நிம்மதியாக இருக்கிறேன்...' என்று கூறி விட்டாள்.
எனக்கு சந்தேகம் வர, மும்பையில் இருக்கும் என் நண்பனுக்கு போன் செய்தேன். அவள் முதலில் வேலை செய்த கம்பெனிக்கு சென்று விசாரித்து, அங்கிருந்து எத்தனை பேர் வெளியே சென்று, சொந்தமாக கம்பெனி வைத்தனர் போன்ற தகவல்களை சொல்லச் சொன்னேன்.
அவரும் தீவிரமாக விசாரித்து சொன்ன தகவல்கள் அதிர்ச்சி அளித்தது. அதாவது, தன்னுடன் வேலை செய்த ஒருவனை காதலித்துள்ளாள், மகள். அவனுடன் சேர்ந்து ஒரே வீட்டில், 'லிவ்விங் டு கெதர்' ஸ்டைலில் வாழ்ந்துள்ளனர்.
சொந்தமாக கம்பெனி எதையும் ஆரம்பிக்கவில்லை. அவன் மட்டும் வேலைக்கு சென்று வர, இவள் வீட்டில் இருந்துள்ளாள். ஒரு கட்டத்தில், அவன் வீட்டில் பெண் பார்த்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளனர்.
அவனும் திருமணத்துக்கு சம்மதித்து, என் மகளிடம், 'நான் திருமணம் செய்து கொண்டாலும், உன்னை கைவிட மாட்டேன். நீ, இதே வீட்டில் இருந்து கொள்ளலாம். நான் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறேன்...' என்று கூறியுள்ளான்.
இதைக் கேட்டதும் தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, ஊருக்கு வந்துள்ளாள். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று புரியாமல் தவித்து வருகிறேன். ஏற்கனவே, விவாகரத்தான மகள், இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டாளே என்று, கவலையாக இருக்கிறது. எனக்கு ஒரு வழியை காட்டுங்கள் சகோதரி.
— இப்படிக்கு,உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் தாம்பத்யம் செய்வது, ரசீதோ அல்லது உத்திரவாத அட்டையோ இல்லாது, விலை உயர்ந்த பொருளை வாங்குவதற்கு சமம். பொருள் பழுது படலாம். பழுதுக்கு, பொருள் விற்ற நிறுவனம் பொறுப்பேற்காது.
மகள், தாலி கட்டா தாம்பத்யத்தில், ஒரு ஆண்டு இருந்திருப்பாளா? நல்லவேளை அந்த தாலி கட்டா தாம்பத்யம் மூலம், குழந்தை எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை, மகள்.
* உறவினர்களுடன் மும்பைக்கு சென்று, மகளுடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபனை பிடித்து, மகளுக்கு தாலி கட்டச் சொல்லி, சட்டைக் காலரை உலுக்கப் போகிறீர்களா?
* மகளும், அவனும் சேர்ந்து வாழ்ந்ததை பெண் வீட்டாரிடம் கூறி, அவன் திருமணத்தை நிறுத்தப் போகிறீர்களா அல்லது சேர்ந்து வாழ்ந்த காலத்துக்கு நஷ்டஈடு கேட்கப் போகிறீர்களா?
மேற்சொன்ன எதுவுமே வேலைக்கு ஆகாது.
'தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வது கிரிமினல் குற்றமோ, சட்ட விரோதமான செயலோ அல்ல...' என கூறியிருக்கிறது, உச்சநீதிமன்றம்.
'கொலை முயற்சி மற்றும் பிளாக்மெயில்' என, உங்கள் மேல் காவல்துறையில் புகார் செய்வான் அவன். தேவையா இது?
தவறு, மகள் மீதும் உள்ளது.
முறைப்படி விவாகரத்து பெற்ற பெண், 'லிவ்விங் டு கெதர்' வாழ்க்கையை உதறிவிட்டு தகப்பனிடம் தஞ்சமடைந்து விட்டாள்; அவ்வளவே.
தற்சமயம் பிரச்னை ஏதுமில்லை.
இப்போது உங்கள் இரண்டாவது மகளுக்கு வயது, 35 இருக்கும் என, யூகிக்கிறேன். உள்ளூரிலேயே எதாவது வேலைக்கு அவள் போய் வரட்டும்.
இடையில் அவளை, மனநல மருத்துவரிடம் அழைத்து போய், திருமணம் பற்றிய அவளின் கருத்துகளையும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஆண்டு போகட்டும், மகளின் மனக்காயங்கள் ஆறட்டும். அவள் விரும்பினால், தகுந்த வரன் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள். இரு கதவுகளை மூடிய இறைவன், மூன்றாவது கதவை திறக்க மாட்டானா என்ன?
—- என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.

