
அன்பு சகோதரிக்கு —
நான், 54 வயது பெண். கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள். வயது: 21. கல்லுாரியில் படிக்கிறாள்.
தனியார் நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருந்தார், கணவர். எங்களுக்கு சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. வீட்டு வாடகை மூலம் கணிசமாக பணம் கிடைக்கிறது. இதுதவிர, கிராமத்தில், மாமனார் - மாமியார், 10 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கணவரது தம்பி குடும்பத்தினர், கிராமத்தில் அவர்களுடன் தங்கியுள்ளனர்.
எனக்கு ஒரு அண்ணன்; வங்கி அதிகாரி. என் பெற்றோரும் வசதியானவர்கள் தான். இவர்களின் ஆதரவுடன் நிம்மதியாக தான் இருந்தேன்.
தற்சமயம் அந்த நிம்மதியும், சந்தோஷமும் மகள் மூலம் கெட்டு போனது.
'மாடலிங்' செய்ய போகிறேன், சினிமாவில் நடிக்க போகிறேன் என்று, விதவிதமாக, 'செல்பி' எடுத்து, முகநுாலில் போடுவாள். ஏகப்பட்ட, 'லைக்ஸ்' வந்ததும், குஷியாகி விடுவாள்.
ஒருநாள், கல்லுாரியிலிருந்து, ஒரு இளைஞனுடன், 'டூ வீலரில்' வந்து இறங்கினாள். தள்ளாடி வந்தவளை பார்த்ததும், மது அருந்தி இருப்பது தெரிந்து ஆத்திரத்தில், அந்த இளைஞன் முன்பாகவே அவள் கன்னத்தில், 'பளார்' என்று அறைந்தேன். கோபித்துக் கொண்டு வேகமாக தன் அறைக்கு சென்று, தாழ் போட்டுக் கொண்டாள். தெளிந்ததும், தானாக வருவாள் என்று விட்டு விட்டேன்.
மறுநாள் காலை முதல், அவளை காணவில்லை. வீடு முழுதும் அலசியதில், நகைகளும், பணமும் அப்படியே இருந்தன. ஆனால், ஏ.டி.எம்., கார்டு மட்டும் காணாமல் போயிருந்தது. வீட்டு வாடகை பணம் அனைத்தும் அந்த வங்கி கணக்கில் தான் வரும். அது தவிர, கணவர் சேமிப்பு பணமும் அதே வங்கியில் தான் இருந்தன.
என் அண்ணனுக்கும், பெற்றோருக்கும் தகவல் சொல்லி வரவழைத்தேன். அண்ணன், வங்கி அதிகாரி என்பதால், ஏ.டி.எம்., கார்டை முடக்கி வைக்க ஏற்பாடு செய்தான்.
இரண்டு நாட்கள் பல இடங்களில் தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. போலீசுக்கு போனால், குடும்ப கவுரவம் போய் விடுமே என்று கலங்கினேன். மேலும், அக்கம்பக்கத்தினர் கதை கட்டி விடுவர். இது, அவளது எதிர்காலத்தை பாதிக்கும் என்று பயந்தேன்.
கையில் பணம் இல்லாமல் எங்கே கஷ்டப்படுகிறாளோ என்று மனம் தவித்தது.
இரண்டு நாட்களுக்கு பின், வீடு திரும்பினாள், மகள்.
'யாரும் எதுவும் கேட்காதீர்கள். நான் சினிமாவில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். என் வழியில் குறுக்கிட்டால், நான் வேறு விதமாக முடிவு எடுப்பேன்...' என்று கூறி, அறைக்குள் சென்று, தாழிட்டுக் கொண்டாள்.
சாப்பிடும் நேரத்தில் வெளியே வருவாள், சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குள் சென்று விடுவாள். கல்லுாரிக்கும் செல்ல மறுக்கிறாள். இவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை, சகோதரி. நல்ல ஆலோசனை தாருங்கள், ப்ளீஸ்!
— இப்படிக்கு,உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
சின்னத்திரை, வெள்ளிதிரை மற்றும் 'மாடலிங்' துறைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என, கருதுகிறோம். அதனால் தான் பெரும்பாலான சினிமாக்காரர்கள் கூட, தங்கள் மகள்களை சினிமாவில் நடிக்க அனுமதிப்பதில்லை. இதுவே ஒரு பொய் புனைவு தான்.
பெண்கள் வெளியே எங்கே வேலைக்கு சென்றாலும், அவர்களை பாலியல் தொந்தரவுகள் தொடரவே செய்கின்றன. ஆண் நிர்வாகம் தெரிந்த புத்திசாலிப் பெண்கள், ஆண் நரிகளை முட்டி மோதி சிதற்றி விட்டு, அவரவர் துறையில் சிகரம் தொடுகின்றனர்.
உன் மகளை எடுத்துக் கொள்வோம்.
அப்பா இல்லை. நல்ல வருமானத்துடன் அம்மா. பணக்கார விவசாயிகளாய் அப்பா வழி தாத்தா - பாட்டி. தாய் மாமா, ஒரு வங்கி அதிகாரி. அம்மா வழி தாத்தா - பாட்டியும் வசதியானவர்கள். இத்தனை ப்ளஸ் பாயின்ட்டுகளுடன் இருக்கும் மகள், ஒரு பேரழகியாக இருந்தால், சினிமாவில் நடிக்கத்தான் ஆசைப்படுவாள்.
இருபக்க தாத்தா - பாட்டிகளுடன், மகளிடம் பேச்சு நடத்து.
'சினிமாவில் நடிக்க அனுமதி தருகிறேன். ஆனால், சில நிபந்தனைகளை நீ ஒப்புக் கொள்ள வேண்டும்...' எனக் கூறு.
* இளங்கலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை சினிமா கிடையாது.
* ஆண் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கக் கூடாது.
* படப்பிடிப்புக்கு துணையாக நான் வருவேன்.
* இரவு நேர படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது.
* ஐந்து ஆண்டுகள் நடித்த பின், சினிமாவை விட்டு விலகி, நான் பார்க்கும் வரனை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
* ஆபாசமாக நடிக்கக் கூடாது.
* சினிமாவில் நடிக்கப் போன ஒரு ஆண்டு படவாய்ப்பு வரவில்லை என்றால், திரை உலகை விட்டு விலகி விட வேண்டும்.
* திருமணமான, 'ஹீரோ'வை காதலிக்க கூடாது.
* நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு செல்லக் கூடாது.
* எந்த அரசியல் கட்சியிலும் சேரக் கூடாது.
இந்த, 10 நிபந்தனைகளையும் மகள் ஒப்புக்கொண்டால் மகிழ்ச்சி; மறுத்தால் ஒரு பிரச்னையும் இல்லை. தலையில் தண்ணீர் தெளித்து விட்டு விடு.
சினிமா ஆசையில் தற்கொலை செய்து கொள்வதை விட, உயிருடன் சினிமாவில் குத்தாட்டம் போட்டு விட்டு போகட்டும், மகள்!
சில நேரங்களில் சில பெண்கள், 'சீச்சீ இந்த பழம் புளிக்கும்...' என்று சினிமாவை உதறி, வீடு திரும்புவர். 24 மணி நேரமும் மகளை பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், உனக்காக சிறு சிறு சந்தோஷங்களை அனுபவி.
மகளுடனா பிறந்தாய், அவளுடனா இறக்கப் போகிறாய்; இடையில் வந்தது சுயமாய் முடிவெடுத்து, சுதந்திரமாய் வாழட்டுமே!
-— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்