
அன்புள்ள அம்மா —
நான், 24 வயது பெண். படிப்பு: பி.காம்., மத்திய அரசு நிறுவனம் ஒன்றில், தற்காலிக பணியாளராக சேர்ந்துள்ளேன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்.
என் அப்பா, காய்கறி கடை நடத்தி வருகிறார். அம்மா, 'டிபார்ட்மென்ட்' ஸ்டோர் ஒன்றில், சூப்பர்வைசராக பணிபுரிகிறார். எனக்கு ஒரு தங்கை. கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.
கல்யாண புரோக்கர் வாயிலாக, வரன் ஒன்று வர, பெண் பார்க்க வர சொன்னார், அப்பா. மாப்பிள்ளை பணக்கார இடம். பெற்றோருக்கு ஒரே மகன். பெண் பார்க்க வந்த அன்று, மாப்பிள்ளை வரவில்லை. அவரது பெற்றோர் மட்டுமே வந்திருந்தனர்.
மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டி, 'பிடித்துள்ளதா?' என்று கேட்டனர். மாப்பிள்ளை நல்ல பர்சனாலிட்டியாக, சாதுவாக தெரிய, சம்மதித்தேன். என் பெற்றோருக்கும் முழு சம்மதம்.
'திருமணத்தை எளிமையாக நடத்தினால் போதும். ஏனெனில், என் உறவினர்கள், தங்கள் வீட்டில் ஏன் பெண் எடுக்கவில்லை என்று சண்டை போடுவர். வெளியூரில் திருமணம் செய்யலாம்; அப்போது தான் யாருடைய இடையூறும் இருக்காது...' என்றனர்.
என் அப்பாவும், திருமணத்துக்கு ஆடம்பரமாக செலவு செய்ய இயலாததால், அவர்கள் கூறியதற்கு ஒப்புக் கொண்டார்.
திருமண நாளன்று, நலங்கு வைக்கும் போது, மாப்பிள்ளை வரவில்லை.
'மண்டபம் மாடியில் உள்ள அறையில் தங்கியுள்ளார், மாப்பிள்ளை. இதில் எல்லாம் அவனுக்கு விருப்பமில்லை...' என்றனர்.
நலங்கு நிகழ்ச்சி முடிந்ததும், ஓரளவுக்கு சந்தடி எல்லாம் அடங்கிய பிறகு, மாடி அறை கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தேன். அனைவரும் துாங்க சென்றுவிட்ட நிலையில், தொடர்ந்து கதவை தட்டும் சத்தம் கேட்க, மாடிப்படி அருகில் சென்றேன்.
அப்போது, மாப்பிள்ளை வீட்டில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பணியாள் வந்து, 'அம்மா, நீங்க மேலே போகாதீங்க. மாப்பிள்ளை தினமும் ஏதோ ஒரு மாத்திரை போட்டுக் கொள்வார். அது எடுத்து வரவில்லையாம். அந்த மாத்திரை சாப்பிட்டால் தான் துாக்கம் வருமாம்...' என்று கூற, எனக்கு பொறி தட்டியது.
உடனே, என் பெற்றோரை வரவழைத்து, 'மாப்பிள்ளை, போதை மருந்துக்கு அடிமையானவர் போலிருக்கு. உடனே சென்று விசாரியுங்கள்...' என்றேன்.
சம்பந்தியிடம் இதுபற்றி கேட்க, ஏதேதோ கூறி மழுப்பினார். உடனே, திருமணத்தை நிறுத்த சொன்னேன். அதற்குள், மாப்பிள்ளை கீழே வந்து, அனைவரையும் ஆபாசமாக பேச, செய்வதறியாமல் திகைத்தோம். விஷயம் அறிந்த எங்கள் உறவினர்கள், உடனடியாக ஊருக்கு கிளம்ப சொல்லி, எங்களை வேன் ஒன்றில் ஏற்றி அனுப்பி விட்டனர்.
'எங்களை அவமானப்படுத்தி வீட்டீர்கள். உங்களை சும்மா விடமாட்டோம்...' என்று குதித்தார், மாப்பிள்ளையின் அப்பா.
இப்போது என்ன பிரச்னை என்றால், மகனது திருமணம் நின்று விட்ட ஆத்திரத்தில், என்னை பெண் பார்க்க வரும் வேறு மாப்பிள்ளைகளைப் பற்றி எப்படியோ தகவல் அறிந்து கொள்கின்றனர். அவர்களிடம், இல்லாதது, பொல்லாததை கூறி, திசை திருப்பி வருகின்றனர்.
போலீசில் புகார் கொடுத்தும், அவர்கள் பணக்காரர்களுக்கு சாதகமாகதான் நடந்து கொள்கின்றனர். எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எங்கள் பிரச்னை தீர நல்ல வழி கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கெட்டதில் ஒரு நல்லது நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், போதை பொருள் பழக்கத்தால் வீணாகி குப்பையில் கிடக்கின்றனர். அதில் ஒருவன் தான், உனக்கு பார்த்த மாப்பிள்ளை.
திருமணம் தடைபட்டது, இறைவன் அனுக்கிரகம். போதை மாப்பிள்ளை வீட்டாரின் அச்சுறுத்தல்களை கண்டு சிறிதும் பயப்படாதே. திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் ஆபாசமாய் நடந்து கொண்டதை, நீ வீடியோ எடுத்திருக்க வேண்டும்.
இனி நீ செய்ய வேண்டியது...
'போதை மருந்து சாப்பிட்டு வந்து எங்களை கொலை மிரட்டல் செய்தார், மணமகன். அவர் மீது கொலை முயற்சி வழக்கு போட வேண்டும். திருமண ஏற்பாடு செலவை எங்களுக்கு நஷ்டஈடாய் வழங்க வேண்டும்.
'மணமகனுக்கு போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது அல்லது மணமகனே போதை பொருள் விற்பனையாளனா என்று போலீஸ் விசாரிக்க வேண்டும்...' என்ற கோரிக்கைகளுடன், புகார் மனுவை வழக்கறிஞர் துணையுடன் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
புகார் மனுவின் நகல்களை, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை தலைவர் மற்றும் சி.எம்., செல்லுக்கு அனுப்ப வேண்டும். சி.எம்., செல்லின் ஹெல்ப்லைன் எண் 1100. புகாரை கைபேசி செயலி, மின்னஞ்சல், தபால் மூலமும் அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: - cmhelpline@tn.gov.in
பெண் பார்க்க வருபவர்களிடம், உன்னை பற்றி ஏதேனும் அவதுாறை, போதை மருந்து குடும்பத்தினர் வீச முனைந்தால் சிறிதும் பயப்படாதே.
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் ஏதேனும் கேட்டால், போதை மருந்து குடும்பத்தார் பற்றி விரிவாக கூறு. அத்துடன், அவர்கள் மீதான புகார் மனு நகலை காட்டு. தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் காவல்துறை நடவடிக்கைகளை பட்டியலிடு.
நீங்கள் எடுத்த வீரியமான காவல்துறை நடவடிக்கைகளால், போதை மருந்து வீட்டார் கதி கலங்கி நிற்பர். போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்ப, உங்கள் காலடியில் வந்து விழுவர்.
போலீஸ் முன்னிலையில் அவர்களிடம் நடந்ததை எழுதி வாங்குங்கள்; முகநுால் மற்றும் ட்விட்டரில், போதை மாப்பிள்ளை ஒளிப்படத்தை போட்டு நாறடிக்கலாம்.
எதிரி வைத்திருக்கும் ஆயுதத்தை வைத்து தான், நமக்கான ஆயுதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும். அவர்கள், ஒரு அடி அடித்தால், பத்து அடி திருப்பி அடி.
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரில், எந்த மாப்பிள்ளைக்காவது குடிப்பழக்கம், போதை மருந்து பழக்கம் இருந்தால், நீ எடுத்த காவல்துறை நடவடிக்கைகளை பார்த்து தலைதெறிக்க ஓடிவிடுவான்.
பணம் பத்து செய்யும். ஆனால், போராடும் பெண்மை, கோடி சாதிக்கும். போதை மருந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவோம், மகளே!
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.