
அன்புள்ள அம்மா-
நான், 30 வயது பெண். திருமணமாகிவிட்டது. எனக்கு இரு தங்கைகள். கல்லுாரியில் படித்து வருகின்றனர். வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். எனக்கு, 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவர், அரசு பணியில் இருப்பவர்.
திருமணமான பின், ஒரு சில ஆண்டுகளில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட, கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். பெற்றோர் வீட்டில் இருந்தபடி, வேலைக்கு சென்று வந்தேன்.
சிறிது நாளில் கோபம் தீர்ந்து, என்னை அழைத்து செல்வார் என்று நினைத்தேன். அவர் வரவில்லை. இதற்கிடையே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தைப் பார்த்தாவது மனம் மாறுவார் என்று எண்ணி, அவர் வீட்டுக்கு சென்றேன்.
என்னை வீட்டு வாசலிலேயே நிறுத்தி, குழந்தையைக் கூட பார்க்காமல், விரட்டி அடித்தார். வேறு வழி இல்லாமல், என்னை அழைத்து வந்துவிட்டனர், பெற்றோர்.
இனி, நானும், குழந்தை மட்டும் தான் என, மனதை சமாதானப்படுத்தி வாழ்ந்து வருகிறேன். தற்சமயம், பள்ளிக்கு செல்கிறாள், மகள். விவாகரத்து பெற்று, வேறொரு திருமணம் செய்து கொண்டார், கணவர்.
என்னுடன் கல்லுாரியில் படித்த நண்பர் ஒருவர், என் நிலையை அறிந்து, என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். குழந்தையிடமும் நல்லவிதமாக பழகுகிறார். மகளுக்கும் அவரை பிடித்துவிட்டது. என் பெற்றோருக்கும் இதில் சம்மதம் தான். ஆனால், எனக்குத்தான் தயக்கமாக இருக்கிறது.
ஒருமுறை அடிபட்ட அனுபவமே போதும் என, நினைக்கிறேன். இதனால், என் இரு தங்கைகள் திருமண வாழ்வு பாதிக்குமோ என, அச்சப்படுகிறேன். ஒரு சில சமயம், எனக்கும் ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்குமே என, தோன்றுகிறது. என்ன முடிவு எடுப்பது என, தெரியவில்லை. நல்ல வழி காட்டுங்கள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
மனித வாழ்க்கையே 'சோதனை மற்றும் பிழை' என்ற முறையில் தான் தொடர்கிறது. விஷச்செடி என பயந்து தக்காளியை விட்டிருந்தால், இன்று அது சமையலுக்கு உதவுமா?
ரைட்ஸ் சகோதரர்கள் முயற்சி செய்து பார்க்கா விட்டால், இன்று நாம், விமான சொகுசு பயணம் மேற்கொள்ள முடியுமா? ஆயிரம் தடவை தோற்காமல் எடிசன், மின் விளக்கை கண்டுபிடித்திருப்பாரா?
ஒருமுறை தோற்றால் விரும்பியதை விட்டு விட முடியுமா? இரண்டாவது முயற்சி முழுவெற்றி என, காரியத்தில் இறங்க வேண்டியது தான்.
இனி, நீ செய்யவேண்டியது-...
உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நண்பர், திருமணமாகாதவரா, திருமணமாகி மனைவியிடமிருந்து தற்காலிகமாக பிரிந்து வாழ்பவரா, முறைப்படி விவாகரத்து பெற்றவரா, மனைவியை இழந்தவரா? திருமணமாகி இருந்தால் அவருக்கு குழந்தைகள் உண்டா, குடிப்பழக்கம் உள்ளவரா என, ஆராய்.
கல்லுாரி நண்பரை கூப்பிட்டு, தனிமையில் பேசு. நடக்க இருக்கும் திருமணத்தில் உன் எதிர்பார்ப்பு மற்றும் நண்பரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை, பேசி தெரிந்து கொள். விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உணர்வு பூர்வமாக முடிவு எடுத்துள்ளாரா அல்லது யதார்த்தமாய் இருக்கிறாரா என கணி.
உன் மகளை, நண்பர் எப்படி எதிர்கொள்கிறார்? அவரின் உடல்மொழி என்ன? அவரின் கண்கள் என்ன சொல்கின்றன என்பதையும் கூர்ந்து பார். மகளின் அணுகுமுறைகளை ஆராய். மாற்றான் தந்தை- - மகள் உறவுமுறை இதம்பதமாக இருக்குமா என்பதை, ஒருமுறைக்கு பலமுறை யோசி.
உன் பெற்றோர் மற்றும் தங்கைகளிடம் தனித்தனியாக கருத்து கேள். கல்லுாரி நண்பருக்கு பெற்றோர் இருந்தால், மகனது திருமணத்தை அவர்கள் விரும்புகின்றனரா, அனுமதிக்கின்றனரா என பார்.
எல்லாவற்றையும் விட, நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு பந்தை தடுத்தாடும் மட்டைவீரன், அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிப்பது இல்லையா?
பார்த்தவரை, பேசினவரை, விசாரித்தவரை திருப்தி என்றால், நண்பரை மறுமணம் செய்து கொள். திருமணத்தின் லாப நஷ்ட கணக்கை, பின்னர் தணிக்கை செய்து கொள்ளலாம். முந்தைய திருமணத்தில் நீ செய்த தவறுகளை, இப்போது நிவர்த்தி செய்து கொள்.
திருமண உறவில் எதிர்பார்ப்புகளை குறை. சுயம் தொலைக்காது, கணவன்- - மனைவி சார்ந்த உறவில் சமரசம் செய்து கொள். உன் மறுமணத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
— -என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.