
தெலுங்கு கவிஞர், ஆருத்ரா ஒரு விழாவில் பேசியது:
நானும், கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும், அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவது உண்டு.
'இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள்?' என்று கேட்பார், சொல்வேன்.
அதேபோல், 'நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள்?' என்று கேட்டு, அதையும் அறிந்து கொள்வேன்.
அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது, அவர் ஒரு பாடலை சொன்னார். அசந்து போனேன். 'இன்னொரு முறை சொல்லுங்கள்...' என கேட்டேன்.
அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்திற்காக, கண்ணதாசன் இயற்றிய, 'ராமன் எத்தனை ராமனடி...' என்ற பாடல் தான் அது.
'எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள்? எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டே... இந்தப் பாடலுக்கு என்ன கரு?' என, கவிஞரிடம் கேட்டேன்.
அதற்கு, 'ராமாயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும், இரண்டாம் காதையில், சலவைத் தொழிலாளி ஒருவர் கூறினார் என்பதற்காக, சீதையை கொண்டு சென்று, காட்டில் விட்டுவிட்டு வரும்படி, தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான், ராமன்.
'அதை ஏற்று, லக்குவனன், சீதையை காட்டில் விட்டு வீடு திரும்பிய போது, ராமன் நிலைப்படியில் தலை வைத்து, அழுது கொண்டிருப்பான். அப்போது, அண்ணன் ராமனைப் பார்த்து, 'இது என்ன? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள். இப்போது அழுது கொண்டிருக்கிறீர்களே...' என்று கேட்பான், லக்குவனன்.
'லக்குவனனிடம், 'ஆணையிட்டது கோசலராமன். அழுது கொண்டிருப்பது, சீதாராமன்...' என்று கூறுவார், ராமன். இந்த சிறு பொறி தான், இப்பாடல் உருவாவதற்கான கருவானது...' என்றார், கண்ணதாசன்.
அந்த பாடலை நீங்களும் ஒரு முறை கேட்டு பாருங்களேன். உருகி விடுவீர்கள்.
***
ஜார்கண்ட் மாநிலத்தின், பள்ளியில் படித்த மாணவன் ஒருவன், 'ஐயா, நம் நாடு பசுமையும், வளங்களும் நிறைந்தது என்று சொல்கிறீர்களே... ராஜஸ்தானில் மட்டும் ஏன் பாலைவனம் இருக்கிறது?' என, கிடுக்கிப்பிடி கேள்வியை, அப்துல்கலாமிடம் கேட்டான்.
கேள்வி கேட்ட மாணவனை தட்டி கொடுத்து, 'நாட்டுப் பற்றோடு நல்லதொரு கேள்வியை கேட்டிருக்கிறாய். நதிகள் ஒருங்கிணைப்பின் அவசியத்தை நாம் நிறைவேற்றிட வேண்டும் என்பதை, உன் கேள்வி வலியுறுத்துகிறது. நம் நாட்டில் இருக்கிற அனைத்து நதிகளையும் நாம் இணைத்து விட்டால், ராஜஸ்தான் பாலைவனம், சோலைவனமாக மாறும்...' என்றார்.
கலாமின் உள்ளத்தில் இருந்த ஏக்கங்களில் இதுவும் ஒன்று. நீண்ட கால கனவாகிய இவற்றை நிறைவேற்றிட திட்டம் வகுத்தார். அதை நிறைவேற்றும் பொறுப்பு, நம் ஆட்சியாளர்களின் கையில் தான் இருக்கிறது. அது நிறைவடைந்தால், நம் நாடு மேலும் வளமடையும்.
****
இந்திய ஜனாதிபதியாக இருந்த சமயம், திருப்பதிக்கு சென்று இருந்தார், அப்துல் கலாம். கோவிலுக்கு சென்றவர் அர்ச்சனை சீட்டு வாங்கி, சன்னிதானம் சென்றார்.
அவரிடம், சீட்டை வாங்கிக் கொண்டு, 'யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய?' என்றார், அர்ச்சகர்.
அதற்கு கம்பீரமாக, 'இந்தியா...' என்று கூறினார், கலாம்.
அர்ச்சகரும், இந்தியா என்ற பெயருக்கு அர்ச்சனை செய்து, பிரசாதங்களை, கலாமிடம் வழங்க, அதை பணிவுடன் பெற்றுக் கொண்டார்.
கலாமின் இந்த மதமில்லா மனித நேயத்தை அங்கிருந்த பக்தர்கள் கண்டு, மெய்சிலிர்த்து நின்றனர்.
நடுத்தெரு நாராயணன்