sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 24, 2024

Google News

PUBLISHED ON : நவ 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது: 33, பள்ளி இறுதி வரை படித்துள்ளேன். கணவர் வயது: 34. இவர், என்னுடைய அத்தை மகன் தான்; எலக்ட்ரிஷியன். பத்து ஆண்டுகள் இருவரும் காதலித்து, பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தோம்.

நிரந்தர வருமானம் இல்லாதவனை திருமணம் செய்து கொண்டால், கஷ்டப்படுவாய் என, பெற்றோரும், உறவினரும் கூறினர். கஷ்டப்பட்டாவது வாழ்வில் முன்னுக்கு வந்துவிடுவோம் என சமாதானப்படுத்தி, அவரையே திருமணம் செய்து கொண்டேன்.

சின்னச் சின்ன, 'கான்ட்ராக்ட்' எடுத்து, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார், கணவர். இப்படியே இருந்தால், எதிர்காலம் சிரமமாகி விடும் என நினைத்து, சமையல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். இதற்கிடையில், எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனால், வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்.

வீடு ஒன்றில், மின் ஒயர் பதிக்க போனார், கணவர். மின்சாரம் தாக்கி, வலது கை செயலிழந்து விட்டது. எவ்வளவோ சிகிச்சை எடுத்தும், சரியாகவில்லை. செயற்கை கை பொருத்த வேண்டும் என்றனர். பல லட்ச ரூபாய் செலவாகும் என்றதும் நம்பிக்கை குறைந்தது.

இருவரது பெற்றோராலும், அவ்வளவு பெரிய தொகை செலவழிக்க வசதி இல்லை. எங்கள் நிலையை அறிந்த, தொண்டு நிறுவனம் ஒன்று, உதவ முன் வந்தது. ஆனால், 'பாதி பணம் தருகிறோம்; மீதி தொகையை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்...' என்றனர்.

என் நகையை விற்று கொஞ்சம் பணம் சேர்த்தேன். கூலி தொழிலாளியான என் அப்பா, வீட்டை அடமானம் வைத்து, மீதி தொகையை கொடுத்தார்.

இப்போது, செயற்கை கை பொருத்தப்பட்டு விட்டது. ஆனால், 'முன்பு போல், எலக்ட்ரிக்கல் வேலை செய்ய முடியாது. வேறு வேலை ஏதாவது செய்து கொள்ளுங்கள்...' என்றார், மருத்துவர்.

கைக்குழந்தை இருப்பதால், என்னாலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு உதவி கிடைக்கும் என்கின்றனர். ஆனால், யாரை, எப்படி அணுகுவது என தெரியவில்லை.

தற்சமயம், என் அம்மா துணையுடன், வீட்டிலேயே சிறியதாக இட்லி கடை போட்டுள்ளேன். கணவரும், மளிகை கடை ஒன்றில் எடுபிடி வேலை செய்து வருகிறார்.

எங்களது பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என, ஆலோசனை தாருங்கள், அம்மா.

— இப்படிக்கு,

அன்பு மகள்.



அன்பு மகளுக்கு —

கணவர், என்ன படித்திருக்கிறார் என, நீ குறிப்பிடவில்லை. அனேகமாக அவர், மின்னணு பொறியியல் பட்டயபடிப்பு படித்திருப்பார் என நம்புகிறேன். கணவருக்கு குடிப்பழக்கமோ, திருமண பந்தம் மீறிய உறவுகளோ இல்லாதிருந்தால், அடுத்த, 10 ஆண்டுகளில் உங்கள் குடும்பம் சுபிட்சநிலை அடைந்து விடும்.

இனி, நீ செய்ய வேண்டியது...

udid@gov.in இணையதளத்தின் இணையத்திற்குள் சென்று, UNIQUE DISABILITY IDENTY CARD - தனித்துவ ஊனம் அடையாள அட்டை மற்றும் உடல் ஊன சான்றிதழும் பெற, தேவைப்படும் ஆவணங்களுடன் விண்ணப்பி.

உன் விண்ணப்பம், தலைமை மருத்துவ அதிகாரிக்கோ, மாவட்ட மருத்துவ அதிகாரிக்கோ போகும். ஒரு சிறப்பு மருத்துவர், கணவர் ஊனத்தை பரிசோதித்து, எத்தனை சதவீத உடல் ஊனம் என, அறிவிப்பார். அவரது அறிக்கை மருத்துவக் குழுவுக்கு போய், அறிக்கை உறுதி செய்யப்படும்.

முதன்மை மருத்துவ அதிகாரி அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரி, தனித்துவ ஊனம் அடையாள அட்டையை, விரைவு தபாலில், உன் கணவருக்கு அனுப்புவார்.

இந்த திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்றன. ஒருமுறை இந்த, 'யுடிஐடி' அட்டை வாங்கினால் போதும். அது, கணவரின் ஆயுட்காலம் முழுக்க செல்லுபடியாகும்.

'யுடிஐடி' அட்டையால் என்ன பிரயோஜனம் என கேட்கிறாயா?

* பொருளாதார உதவி

* சுகாதார பாதுகாப்பு

* கல்வி

* வேலைவாய்ப்பு.

இந்த நான்கும், 'யுடிஐடி' அட்டையால் கிடைக்கும். கணவரிடம் இருக்கும் பான் கார்டு, 'யுடிஐடி' அட்டை, ஆதார் அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்கள் சமர்ப்பித்து, வங்கிகடன் பெறலாம்.

ஒரு லட்சம் ரூபாய், தனிநபர் கடன் வாங்கினால், ஓராண்டு வட்டி, 7,000 ரூபாய். 12 மாதாந்திர தவணைகளில் வங்கிக்கடனை அடைக்க வேண்டும்.

இந்திராகாந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் கேட்கும் தகுதிகள், கணவருக்கு இருந்தால், மத்திய அரசு, 300 ரூபாய், மாநில அரசு, 1,000 ரூபாய் பங்களிப்பு செய்யும். மாதாந்திர ஓய்வூதியம், 1,300 ரூபாய் அளிப்பர்.

உடல் ஊனமுற்றோர் ஜெயிக்க கூடிய, 28 வகை பணிகளுக்கான பட்டியல் உள்ளது. வளர்ப்பு நாய் கவனிப்பு, இணையவழி பொருட்கள் விற்றல், கைவினை பொருட்கள் விற்றல் மற்றும் பயண வழிகாட்டியாகவும் செயல்படலாம்.

உன்னுடைய இட்லி கடையை விரிவுபடுத்து. இட்லி, தோசை மாவு விற்பனை செய். மொபைல்போன், 'ரீ சார்ஜ்' செய்து, கமிஷன் பெறு. கணவர் பெற்ற ஒரு லட்ச ரூபாய் வங்கி கடனில், உங்கள் வீட்டிலேயே மளிகைக்கடையை கணவர் ஆரம்பிக்கட்டும். நிதானமாக திட்டமிட்டு சுயதொழிலில் ஈடுபடுங்கள். லட்சம் சதவீதம் வெற்றி நிச்சயம். வாழ்த்துகள் மகளே!

— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us