sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வைத்தியம்!

/

வைத்தியம்!

வைத்தியம்!

வைத்தியம்!


PUBLISHED ON : நவ 24, 2024

Google News

PUBLISHED ON : நவ 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஞாயிறு காலை  —

பில்டர் காபியை குடித்துவிட்டு, சாவகாசமாக பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த பரந்தாமன், வாசலில் நிழலாடுவதை கண்டு தலையை நிமிர்த்தினார். எதிரே நாராயணசாமி.

கல்யாண புரோக்கர் மட்டுமல்ல; பரந்தாமனின் நண்பர், நாராயணசாமி. குடும்ப நண்பர் என்றே சொல்லலாம்.

''வா நாராயணா... காலையிலேயே வந்திருக்கே...'' என்ற பரந்தாமன், உள்ளே பார்த்து, ''மங்களம்... காபி கொண்டு வா. நாராயணன் வந்திருக்கான்,'' என்றார்.

உள்ளே வந்து உட்கார்ந்த நாராயணசாமி, ''நம்ம, கணேஷுக்கு ஒரு பொண்ணு போட்டோ எடுத்து வந்திருக்கேன்,'' என்று கூறி போட்டோவை காட்டினார்.

''பொண்ணு பேரு, விமலா; கூட பிறந்தவன், ஒரே அண்ணன். நல்ல குடும்பம்; வசதியான இடம். பொண்ணோட அப்பா, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். சொந்த வீடு. அது இல்லாம கிராமத்துல நில, புலன்கள் ஏராளம்.

''பொண்ணும் நல்லா படிச்சுட்டு, கை நிறைய சம்பளம் வாங்கறா. எனக்கு பிடிச்சிருக்கு. நீயும் பாரு... பிடிக்குதான்னு சொல்லு,'' என்றபடி, போட்டோவை நீட்டினார்.

போட்டோவை வாங்கிப் பார்த்தார், பரந்தாமன். நாராயணசாமி சொன்னது போல அழகாகத்தான் இருந்தாள், அந்த பெண்.

காபியை எடுத்து வந்த, மங்களத்திடம் விஷயத்தை சொல்லி, போட்டோவைக் கொடுத்தார், பரந்தாமன்.

''எனக்கு பிடிச்சிருக்குங்க. ரொம்ப அழகா இருக்கா,'' என்றாள், மங்களம்.

''எனக்கும் தான். நமக்கு பிடிச்சு என்ன பலன்? பிடிக்க வேண்டியவனுக்கு பிடிக்கணுமே...'' என, சலிப்பாக சொன்னார், பரந்தாமன்.

''உண்மைதாங்க... இப்போவெல்லாம் போட்டோ வந்தா சந்தோஷம் வர்றதுக்கு பதிலா, சலிப்பு தான் வருது. கடவுளே, இந்த பொண்ணையாவது இவனுக்கு பிடிக்கணுமேன்னு ஒரு பதற்றம் தான் வருது,'' என்றாள்.

மங்களம் சலிப்பாக சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

இந்த பெண் விமலா, கணேஷுக்கு இவர்கள் பார்க்கப் போகும், 20வது பெண்.

காபியை குடித்தபடி, ''பரந்தாமா... மத்த இடம் மாதிரி இல்லை. இது ரொம்ப நல்ல இடம். பொண்ணும் பார்க்க அழகா இருக்கா. சொத்து பத்தும் நிறைய இருக்கு. இதையும், அது சொத்தை. இது சொத்தைன்னு சொல்லி நிராகரிச்சுடப் போறான், கணேஷ்,'' என்றார், நாராயணசாமி.

''எங்களுக்கு மட்டும் அந்த கவலை இல்லையா... நாங்க வேணாம்ன்னா சொல்றோம்? கட்டிக்கப் போறவன், ஒத்துக்கணும் இல்லை...''

''நீ சொல்றது சரி தான். ஆனால், நீ எடுத்து சொல்லலாம் இல்லே...''

''அட எவ்வளவோ சொல்லியாச்சுப்பா. கேட்டா தானே...

கேட்டா, 'என் மனசுல எனக்கு மனைவியா வரப்போற பொண்ணு இப்படித்தான் இருக்கணும்ங்கற எதிர்பார்ப்பு இருக்கு. வாழப்போறது நான். என் எதிர்பார்ப்புக்கேத்த மாதிரி பொண்ணு இருந்தாதான் கல்யாணம் பண்ணிப்பேன். சும்மா என்னை வற்புறுத்தாதீங்க...'ன்னு, முகத்துல அடிச்ச மாதிரி சொல்றான்.

''நீயா இருக்கறதால சலிச்சுக்காம, இத்தனை பொண்ணுங்க போட்டோவை எடுத்து வந்து காட்டி இருக்கே. வேற ஆளா இருந்தா, 'போயா நீயுமாச்சு, உன் கமிஷனுமாச்சு'ன்னு போயிட்டு இருப்பான்...''

''என்ன பண்றது... நீ, என் நண்பனா போயிட்டியே... ஆமா, கணேஷ் எங்கே?''

''அவன் நண்பன் வீட்டுல ஏதோ விசேஷமாம். போயிருக்கான். சாயங்காலம் தான் வருவான்.''

''சரி, நான் கிளம்பறேன். சாயங்காலம், கணேஷ் வந்தா பேசுங்க. நல்ல முடிவா எடுக்க சொல்லு. நான் கிளம்பறேன்,'' என்றார், நாராயணசாமி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாக, கணேஷுக்கு பெண் பார்க்க சென்ற ஞாபகம் வந்தது.

அப்போதும், இதே நாராயணசாமி தான், பெண்ணின் போட்டோவை எடுத்து வந்தார். அந்த பெண்ணின் பெயர், சுதா. போட்டோவை பார்த்தவர்களுக்கு சந்தோஷம். பெண் அவ்வளவு அழகாக இருந்தாள்.

'பாரு பரந்தாமா... இந்த குடும்பத்தை எனக்கு தனிப்பட்ட முறையில தெரியும். நம்ம குடும்பத்துக்கேத்த சம்பந்தம். நான் எல்லாம் பார்த்து தான் கொண்டு வந்திருக்கேன். பொண்ணும் படிச்சுட்டு வேலையில இருக்கா...' என்றார்.

'தெரியும் நாராயணசாமி. எங்களுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு. நல்ல குடும்பம்ன்னு வேற சொல்றே. நீ சொன்னா சரியா இருக்கும். இதையே முடிச்சுடுவோம்...' என்றார், பரந்தாமன்.

'ஆமாம்ணா. பொண்ணு நல்ல லட்சணமா இருக்கா. கணேஷுக்கு பிடிச்சா இதையே முடிச்சிடலாம்...' என்றாள், மங்களம்.

சாயங்காலம் ஆபீசில் இருந்து வந்த, கணேஷ், போட்டோவை பார்த்தான். சுதாவை அவனுக்கும் பிடித்துப் போனது. அவனும் சரி சொல்ல, அடுத்த ஞாயிறே குடும்பத்தோடு, சுதா வீட்டுக்கு பெண் பார்க்க போயினர். கூடவே நாராயணசாமியும்!

வாசலில் நின்று அழைத்து சென்றார், சுதாவின் அப்பா. சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின், காபியோடு வந்த சுதாவின் அழகைப் பார்த்து சொக்கி போயினர், அனைவரும். பரந்தாமனுக்கும், மங்களத்துக்கும் பரம திருப்தி.

இருவரும் கணேஷின் முகத்தைப் பார்த்தனர். பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

'வீட்டுக்கு போய் கலந்து பேசிட்டு சொல்றோம்...' என, கிளம்பினர்.

'கணேஷ், பொண்ணை எங்களுக்கு பிடிச்சுருக்கு. நீ என்ன சொல்றே?' என்றாள், மங்களம்.

'எனக்கு பிடிக்கலைம்மா. வேண்டாம்...'

'என்னடா சொல்றே?' அதிர்ந்து போயினர், இருவரும்.

'ஆமாம்மா... பொண்ணு அழகா இருக்கா. நல்ல வேலையில இருக்கா. ஆனா, நான் ஆறடி இருக்கேன். பொண்ணு, ஐந்தரை அடி கூட இல்லே. என் உயரத்துக்கு சரியா இருக்க மாட்டா. ஜோடி பொருத்தம் சரியா இருக்காது. நான் எதிர்பார்க்கிற மாதிரி இல்லை. இந்த பொண்ணு வேணாம்...' என்றான், கணேஷ்.

'நல்ல இடம். உனக்கு பொருத்தமா இருப்பான்னு நினைச்சோம்...'

'எனக்கு பிடிக்கலைப்பா. என்னை வற்புறுத்தாதீங்க. என் மனசுல இருக்கற மாதிரி பொண்ணு கிடைச்சாத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்...' என, உறுதியாக கூறி விட்டான்.

அது முதல் வரன் என்பதால், அவர்கள் பெரிதாக ஒன்றும் கவலைப்படவில்லை. ஆனால், தொடர்ந்து வந்த பெண்களையும், அவன் அதே மாதிரி நிராகரிக்க ஆரம்பித்தான்.

'பொண்ணு என் எதிர்பார்ப்புக்கேற்ப இல்லைம்மா...'

'பொண்ணுனா அப்படிதான்டா இருப்பாங்க. நாம தான், 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கணும். நுாறு சதவீதம் நாம எதிர்பார்த்த மாதிரி அமையாது...' என்றாள், மங்களம்.

இதில் கொடுமை என்னவென்றால், கணேஷ் பார்த்து விட்டு வந்த எல்லா பெண்களுக்கும் இவனைப் பிடித்திருந்தது. ஆனாலும், பிடிவாதமாகவே இருந்தான், கணேஷ்.

'யாரையாவது விரும்பினாலும் சொல்லு. அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுடறோம்...' என, கேட்டாள், மங்களம்.

அதற்கு, 'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைம்மா...' என்றான்.

இப்போது, விமலாவின் போட்டோ வந்திருக்கிறது. 'கடவுளே... இந்த பொண்ணாவது இவனுக்குப் பிடிக்கணும். கல்யாணம் முடியணும்...' என, பெற்றவர்கள் இருவரும் வேண்டிக் கொண்டனர்.

''டேய் கணேஷ், இந்த பொண்ணு போட்டோவை பார். பொண்ணு பேர், விமலா. நல்லா படிச்சு கை நிறைய சம்பாதிக்கறாளாம். நல்ல குணமான, அடக்கமான பொண்ணாம். பொண்ணு பார்க்க நல்ல லட்சணமா, அழகா இருக்கா. எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு,'' என்றாள், மங்களம்.

''ஆமாப்பா, நம்ம கல்யாண தரகர் நாராயணசாமி தான், இந்த போட்டோவை கொடுத்துட்டு போனார். அவர், என் நண்பராச்சே... அதனால, அவர் சொல்றது எல்லாம் உண்மையா தான் இருக்கும். உனக்கும் பிடிச்சா, போய் பொண்ணு பார்த்துட்டு வந்துடலாம்,'' என்றார், பரந்தாமன்.

அம்மாவிடம் இருந்து போட்டோவை வாங்கிப் பார்த்தான், கணேஷ். அம்மா சொன்னது உண்மை. நயன்தாராவின், 2005 வெர்ஷன் போல இருந்த அவளை பார்த்ததும், கணேஷுக்கு பிடித்து விட்டது.

''ஞாயிறு போய் பார்த்துட்டு வந்துடலாம்ப்பா,'' என்றான்.

ஞாயிறு —

இவர்கள் கிளம்பும் போதே வானம் மப்பும், மந்தாரமுமாய் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் போல இருந்தது.

''கணேஷ், நாம கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு, இப்படி தான் இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறது தப்பில்லை. ஆனா, அப்படி கிடைக்கறது கஷ்டம். நாம எதிர்பார்த்தபடியே, 100 சதவீதம் அமையாது.

''கிடைக்கறதுல, 'பெஸ்ட்' எதுவோ, அதை ஏத்துக்கறது தான் புத்திசாலித்தனம். நாம எதிர்பார்த்தபடி பொண்ணு அமையணும்ன்னு பையனும், பையன் அமையணும்ன்னு பொண்ணும் நினைச்சா, இங்கே யாருக்குமே கல்யாணம் நடக்காது.

''கடவுள் படைப்புல 100 சதவீதம் சரிங்கறது எதுவுமே இல்லை புரிஞ்சுக்கோ. இந்த பொண்ணு எங்களுக்கு பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிக்கும்ன்னு நம்பறோம்,'' என்றாள், மங்களம்.

அவள் சொல்வதை அமைதியாக கேட்டபடி வந்தான், கணேஷ்.

அரை மணி நேர பயணத்தில் பெண்ணின் வீடு வந்தது.

பெண் பார்க்க வந்தவர்களை வரவேற்று அழைத்து சென்றார், விமலாவின் அப்பா.

சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின், கையில் காபியுடன் வந்தாள், விமலா. வந்தவளை பார்த்த கணேஷ், அவளின் அழகில் சொக்கிப் போனான்.

அவன் எதிர்பார்த்தது போலவே இருந்தாள், விமலா. அவன் முகம் மலர்ந்ததைப் பார்த்து, பரந்தாமனுக்கும், மங்களத்துக்கும் நிம்மதி ஆனது.

''எனக்கு, ஓ.கே.,ம்மா... மேல ஆக வேண்டியதை நீங்க பார்த்துக்கோங்க.''

அவன் சொன்னதும், 'அப்பாடா...' என்று இருந்தது, இருவருக்கும்.

''எங்களுக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. எங்களுக்கு உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்களும், உங்க முடிவை சொன்னீங்கன்னா மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்.

''உங்க பொண்ணு நாங்க பார்க்கிற, 20வது பொண்ணு. பார்க்கிற எல்லா பொண்ணுங்களையும், தான் எதிர்பார்க்கிற மாதிரி இல்லைன்னு சொல்லி, வேணாம்ன்னு சொன்ன என்னோட மகன், உங்க பொண்ணை பார்த்த உடனே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டான்.

''இத்தனைக்கும், அந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், எங்க பையனை பிடிச்சிருந்தது. கட்டிக்க ஆசைப்பட்டாங்க. இவன் தான் மறுத்துட்டான்,'' என்றார், பரந்தாமன்.

''ரொம்ப சந்தோஷம். எங்க பொண்ணுகிட்ட கேட்டு சொல்றேன்,'' விமலாவின் அப்பா சொன்னதும், உள்ளே இருந்து அவரின் மனைவி, ''ஒரு நிமிஷம் உள்ளே வாங்க...'' என்றாள்.

உள்ளே சென்று, தொங்கிய முகத்துடன் திரும்பி வந்தவர், ''என்னை மன்னிச்சுடுங்க; எங்க பொண்ணுக்கு உங்க மகனை பிடிக்கலையாம். கட்டிக்க மாட்டேன்னு சொல்றா,'' என்றார்.

அதிர்ந்து போனவர்களாய் பார்த்தனர், கணேஷின் குடும்பத்தினர்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட கணேஷ், ''என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்றான்.

விமலாவின் அப்பா பேச வாயெடுக்கும் முன்னே, உள்ளே இருந்து வந்தாள், விமலா.

''அதை நான் சொல்றேன்... பெரிசால்லாம் ஒரு காரணமும் இல்லை. ஆசைப்பட்டது கிடைக்காத ஏமாற்றம் எப்படி இருக்கும்ன்னு, நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லே. நிராகரிப்போட வலி, வேதனை எப்படி இருக்கும்ன்னு நீங்களும் உணரணும்.

''நிராகரிக்கற உரிமை, ஆண்களுக்கு மட்டும் தானா, பெண்களுக்கு இல்லையா? எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. பெண்களோட உணர்ச்சிகளை புரிஞ்சிக்கிற, அவங்களை மதிக்கிற ஒருவர் தான் புருஷனா வரணும்ன்னு நான் ஆசைப்படறேன்.

''என் எதிர்பார்ப்புக்கேத்த மாதிரி நீங்க இல்லையே. பெண்களோட உணர்வுகளை புரிஞ்சுக்காட்டியும் பரவாயில்லை; அதை கொச்சைப்படுத்தாதீங்க,'' என்றாள், விமலா.

அதிர்ந்தவனாய் எழுந்து வெளியே வந்தான், கணேஷ். அவன் குடும்பமும் பின்னாலேயே வந்தது.

''என்னடி நீ, இப்படியா கடுமையா பேசுவ?'' அவர்கள் போன பின் கேட்டாள், விமலாவின் அம்மா.

''முள்ளை முள்ளால தான் எடுக்கணும்மா. கால்ல குத்தின முள்ளுக்கே அப்படின்னா... இது, தற்பெருமை, அகங்காரம், ஆணவம், அடுத்தவங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்காம, வலிகளை அலட்சியப்படுத்தற குணம்ன்னு, அவர் மூளையில குத்தி இருக்கற முள்.

''வலிக்குமேன்னு இது எல்லாத்தையும் எடுக்காம விட்டா, புண்ணாகி அழுகிடும். அது நல்லதில்லை. இப்போ நான் பார்த்த வைத்தியத்தால சுத்தமாகி இருக்கும்ன்னு நம்பறேன். இனி எந்த பொண்ணும் இவரால வலியை அனுபவிக்க மாட்டா,'' என்ற, விமலாவைப் பார்த்து சந்தோஷமாய் சிரித்தாள், அம்மா.

கே. ஆனந்தன்






      Dinamalar
      Follow us