/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம் - குழந்தைகள் திருநாள்!
/
விசேஷம் இது வித்தியாசம் - குழந்தைகள் திருநாள்!
PUBLISHED ON : டிச 01, 2024

டிச., 02 சிவாலயங்களில் சங்காபிஷேகம்
சோமவாரம் என்றால், திங்கட்கிழமை. சிவனுக்குரிய நன்னாள் இது. அதிலும், கார்த்திகை மாத திங்கட்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த நாளில், வழக்கத்தை விட வெப்பமாக தகிப்பார், சிவன். இதனால் தான் அவருக்கு, சங்காபிஷேகம் செய்து குளிர்விக்கின்றனர்.
சங்காபிஷேகத்திற்கு தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும், பெற்றோர். இதற்கு காரணம் இருக்கிறது.
சிவனுக்கு, ஒரு சாதாரண பாத்திரத்தில் பால், இளநீர் என, நிரப்பி அபிஷேகம் செய்தாலும் தவறில்லை. ஆனால், சங்கில் நிரப்பி அபிஷேகம் செய்யும் போது, அதைப் பார்க்கும் குழந்தைகளின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு, கடல் சங்கில் பால் ஊற்றி புகட்டுவர். குழந்தைகளுக்கு சுக்கு கஷாயம் கொடுக்கும் போதும், சங்கில் ஊற்றி புகட்டுவது, இரட்டிப்பு பலன் தரும்.
சங்கில் இயற்கையாகவே, கால்ஷியம் சத்து மிகுந்துள்ளது. இது, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. தரமான, சிறிய அளவிலான கடல் சங்குகளை, கடற்கரை தலங்களில் வாங்கி, அதில் மருந்து, பால் ஊற்றி புகட்ட வேண்டும்.
சில குழந்தைகள் எதை குடித்தாலும், கக்கி விடும். கடல் சங்கில் பால் மற்றும் மருந்து ஊற்றி கொடுத்தால், கக்குவது குறையும். ஆஸ்துமா, இருமல் மற்றும் தொடர் தும்மல் போன்ற வியாதிகளையும் கட்டுப்படுத்தும்.
சங்கைப் பார்த்தாலே, செல்வ வளம் கூடும் என்ற ஐதீகம் உண்டு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நாமும், நம் குழந்தைகளும் நோயின்றி வாழ்ந்தாலே, மருத்துவச் செலவு குறையும். இதனால், சங்காபிஷேகத்தை, 'குழந்தைகள் திருநாள்' எனச் சொல்வது, சாலவும் பொருந்தும்.
சங்காபிஷேகம் என்றால், சிவனின் நினைவு வருவது போல, சங்கு என்றால், திருமாலின் நினைவு தான் வரும். இவர் வைத்திருக்கும் சங்கின் பெயர், பாஞ்சஜன்யம். இதற்கு, ஐந்து சங்குகளை உள்ளடக்கிய ஒற்றை சங்கு என, பொருள். இந்த ஒரு சங்கிற்குள், நான்கு சங்குகள் இருக்கும்.
கோவில்களில் சங்கு ஒலிப்பதன் நோக்கம், 'ஓம்' என்ற மந்திர சத்தம், நம் காதுகளில் கேட்பதற்கு தான். பாஞ்சஜன்யத்தை ஊதினால், இந்த மந்திர சத்தம், மிக மிக துல்லியமாகக் கேட்கும். பாஞ்சஜன்யம் சங்குகளை பார்ப்பது அரிது. தற்போது, ஒரு சங்கு, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் உள்ளது. இதை கொண்டே அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
ஆயிரம் இடம்புரி சங்குகள் கிடைக்கும் இடத்தில், ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம். ஆயிரம் வலம்புரி சங்குகள் கிடைக்கும் இடத்தில், சலஞ்சலம் என்ற, ஒரே ஒரு அரிய வகை சங்கு கிடைக்குமாம். ஆயிரக்கணக்கான சலஞ்சலம் சங்கு கிடைக்கும் இடத்தில், ஒரே ஒரு பாஞ்சஜன்யம் கிடைக்குமாம்.
இந்த அரிய சங்கு தான், திருமாலிடம் இருக்கிறது. குருஷேத்ர போர்க்களத்தை அதிர வைத்த பெருமை, இந்த சங்கிற்கு உண்டு.
சிவன் கோவில்களில் நடக்கும் சங்காபிஷேகத்திற்கு குழந்தைகளுடன் சென்று, நோயற்ற வாழ்வைப் பெறுங்கள்.
தி.செல்லப்பா