sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 08, 2024

Google News

PUBLISHED ON : டிச 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 30 வயது பெண். நகரத்தில் பிறந்து, வளர்ந்து, பள்ளி இறுதி ஆண்டு வரை படித்தவள். கிராமத்தில் விவசாயம் செய்து வரும் உறவினர் மகனுக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர். மேற்படிப்பு படிக்க விரும்பினேன். ஆனால், முடியவில்லை.

கணவருடன் உடன் பிறந்தவர்கள், மூன்று பேர். மூவருமே விவசாயம் சம்பந்தப்பட்ட பணியில் தான் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நான் தான் கடைசி மருமகள். குழந்தை இல்லை. ஒரே வீட்டில், கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.

என் மாமனாருக்கு இரு மனைவியர். முதல் மனைவி இறந்துவிட, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வேலையும் செய்ய மாட்டார், என் மாமியார். வீட்டு வேலை மற்றும் ஏழெட்டு மாடுகளை தினமும் குளிப்பாட்டி, மாட்டு கொட்டகையை சுத்தம் செய்வது, வறட்டி தட்டுவது என, நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கிடையில், மாமனாரின் தொந்தரவு வேறு. என் கணவரை, ஏதாவது காரணம் சொல்லி எங்காவது வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு, என்னிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயல்வார்.

இதுபற்றி பலமுறை, கணவரிடமும், மாமியாரிடமும் சொல்லியும் பயன் இல்லை. என் பெற்றோரிடம் சொல்லியதில், அவர்கள் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டதில், தற்சமயம் அடங்கி உள்ளார், மாமனார்.

தனிக்குடித்தனம் செல்லலாம் என்று, கணவரிடம் கூறினால் தயங்குகிறார்.

இப்பிரச்னையிலிருந்து மீண்டு வர நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.

—இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

மாமனாரின் கொட்டத்தை அடக்க, உனக்கு சில வழிமுறைகளைக் கூறுகிறேன்...

மருமகள் என்ற உன்னத உறவுமுறையை கொச்சைப்படுத்த நினைக்கும் கிழட்டு சிங்கத்தின் வாயை தைத்து, நகங்களை பிடுங்கி எறியும் செயல்முறை பார்ப்போம்...

* நாள் முழுக்க மாமனார் கண்களில் படாதே. அப்படியே தென்பட்டாலும் ஒரு அசிங்கத்தை, கேவலமான ஜந்துவை பார்க்கும் முகபாவம் காட்டு. காறி உமிழ்வது போல, 'ரியாக்ஷன்' கொடு.

உன் பாதுகாப்புக்கு மிளகாய்துாள் வைத்துக் கொள். தப்பித்தவறி அருகில் வந்தால், அந்த காமாந்திர மிருகத்தின் கண்களில் துாவு. பெருசுக்கு சாப்பாடு பரிமாறாதே. நீ, ரவுத்திரதேவி வடிவெடுத்து, கிழவனை சூரசம்ஹாரம் செய்ய காத்து இருப்பதை கிழவன் உணரட்டும். அணிலில் இருந்து கீரிப்பிள்ளையானால் தான், பெண்களுக்கு பாதுகாப்பு

* ஏழெட்டு மாடுகளை தினம் குளிப்பாட்டுவது மற்றும் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்வதை நிறுத்து. அந்த வேலையை மாமனார் கிழமோ, உன் கணவனோ, உன் மாமியாரோ அல்லது வேலையாளோ செய்யட்டும். ஒத்துழையாமை இயக்கம் மிகமிக வீரியமானது. அது மனித மனங்களை தாக்கும்

* உன் கணவனுக்கு மூளைச்சலவை செய்.

'என்னிடம், தவறாக நடக்க முயலும் உன் தந்தையை தட்டி கேட்காமல் பொட்டு பூச்சியாய் நிற்கிறாயே... அது உனக்கு இழிவாக இல்லை? நான், உன் மனைவியா அல்லது மாட்டுச்சாணி பொறுக்க வந்த வேலைக்காரியா?

'நீ ஆண்மையும், சொந்தக்காலில் நிற்கும் சுயகவுரவமும் கொண்ட ஆண்மகனாக இருந்தால், நானே கேட்காமல், நீயே தனிக்குடித்தனம் போக ஏற்பாடு செய்துவிட மாட்டாயா?' எனக் கேள்

* 'என் பள்ளி படிப்பையும் கெடுத்து, எனக்கு பொருந்தாத இடத்தில் மணம் செய்து கொடுத்துள்ளீர்களே...' என, உன் பெற்றோரையும் சாடு. அவர்களின் துணையுடன் தொலைதுார இயக்ககம் மூலம் இளநிலை பட்டப்படிப்பில் சேர். அழுது புலம்பாதே; சுயப்பச்சாதாபம் கொள்ளாதே. ஆக்ரோஷமாய் சீறு

* உனக்கும், உன் கணவனுக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகும் என யூகிக்கிறேன். முழு உடல் பரிசோதனை செய்து கொள். குழந்தை பெற்று கொள்ளும் தகுதி உனக்கு இருப்பதாக உறுதியானால், உன் கணவனை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளச் சொல். 'உன்னிடம் எதாவது குறை இருந்தாலும் தகுந்த மருத்துவம் பார்த்து, குழந்தை பெற்றுக் கொள்ளலாம்...' என ஆறுதல் கூறு.

உன் கணவன், தனிக்குடித்தனம் வரவில்லை; -முழு உடல் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை; - உன் தொலைதுார கல்விக்கு முட்டுக்கட்டை போடுகிறான். தவறு செய்யும் தந்தையை வன்மையாக கண்டிக்கவில்லை; -மாட்டுக் கொட்டடி வேலைகள் செய்ய தொடர்ந்து வற்புறுத்துகிறான் என்றால், பெற்றோர் ஆலோசனையுடன் அவனை நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்.

வாழ்த்துகள்.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us